புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்பிடம் முழுமையான தகவலை கோரும் மத்திய அரசு

வட கிழக்கு தமிழர் தாயகத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத தமிழ் மக்களுடைய நிலங்கள் தொடர்பிலான தகவல்களையும், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்களையும் முழுமையாக தமக்கு வழங்குமாறு புதிய மத்திய அரசாங்கம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைவாக வடகிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் ஊடாக மேற்படி தகவல்களை சேகரிக்க கூட்டமைப்பு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசியிருந்தோம்.
தொடர்ந்து நேற்று முன்தினம் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் பிரதமர் ரணில், ஆகியோரையும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோரையும் சந்தித்துப் பேசியிருக்கிறோம்.
இதன்போது நாங்கள் மிக முக்கியமாக வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், தமிழ் அரசியல் கைதிகள் பலர் சிறைகளில் விசாரணைகள் இன்றியும், நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்படாமலும் உள்ளமை குறித்தும் அவர்களுடைய மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்திக் கொடுக்குமாறும் நாம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
இதேபோன்று புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனையும் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். இதன்போது குறிப்பாக எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்? மீள்குடியேற்றப்படாத நிலையில் அவர்கள் என்ன நிலையில் இருக்கிறாரகள்? என்பதையும் முழுமையாக, தமக்கு வழங்குமாறு கோரியிருக்கின்றார்கள்.
அதற்கமையவே நாங்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறோம். மேலும் இந்த விடயத்தில் மீள்குடியேற்ற ஆலோசனை குழு ஒன்றிணை அமைப்பதற்கும் புதிய மீள்குடியேற்ற அமைச்சர் தீர்மானித்திருப்பதாக எமக்கு தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் இரு மாகாணங்களிலும், மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்கள் தொடர்பாக தகவல்களை சேகரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்கி நாம் தகவல் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.
இதே போன்று தமிழ் அரசியல் கைதிகளின் தகவல்களையும் சேகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள், 3 வகைப்படுத்தப்படுகின்றனர். முதலாவது தண்டணை பெற்ற கைதிகள், இரண்டாவது நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்ட கைதிகள் மற்றும் மூன்றாவது விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்தவகையில் நாம் அவர்களுடைய தகவல்களையும் சேகரிக்க, நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். இதற்கமைய மத்திய அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளடங்கலான குழு நியமிக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடயமும் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசாங்கம் எமக்கு, தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

ad

ad