புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: புதிய விடியோவால் குழப்பம்

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இடம் பெறும் விடியோ பயங்கரவாதிகளின் இணையதளத்தில்
வெளியிடப்பட்ட நிலையில், அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் நகரிஸ், முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்ட "சார்லி ஹெப்டோ' வார இதழ் மீது சயீத் குவாஷி, ஷெரீஐப் குவாஷி ஆகிய இரு சகோதரர்கள் கடந்த புதன்கிழமை தாக்குதல் நிகழ்த்தி அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழு, 2 போலீஸார் உள்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
அதற்கு மறுநாள், பாரிஸ் புறநகர்ப் பகுதியில் அமேடி கூலிபலி என்ற நபர், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பெண் காவலர் ஒருவர் பலியானர். அதனைத் தொடர்ந்து, பத்திரிகை அலுவலகத் தாக்குதலை நடத்திய குவாஷி சகோதரர்களை பாரிஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள டாமார்டின்-ஆங்-கொவேல் நகரில் போலீஸார் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர். அதே நாள் பாரிஸ் நகரின் வடக்குப் பகுதியிலுள்ள யூத பல்பொருள் அங்காடி ஒன்றில் நுழைந்த அமேடி கூலிபலி, 4 பேரை சுட்டுக் கொன்று ஐந்து பிணைக் கைதிகளை சிறைபிடித்தார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை போலீஸ் அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து அமேடி கூலிபலியை சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு அல்-காய்தா அமைப்பே காரணம் என பரவலாகக் கூறப்பட்டு வந்தது. பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கிய குவாஷி சகோதரர்கள், தாங்கள் யேமன் நாட்டு அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியதாக தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இவ்வாறு ஊகிக்கப்பட்டது. இந்நிலையில், பயங்கரவாதிகளின் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள விடியோவில், தான் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பைச் சேர்ந்தவர் என்று யூத பல்பொருள் அங்காடியில் தாக்குதல் நிகழ்த்திய அமேடி கூலிபலி கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனால், பாரிஸ் தாக்குதலின் பின்னணியில் உள்ள அமைப்பு எது என்பது குறித்து குழப்பம் எழுந்துள்ளது. பொதுவாக அல்-காய்தாவும், ஐ.எஸ் அமைப்பும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒருங்கிணைந்து ஈடுபடுவதில்லை. சிரியாவில் இரு அமைப்புகளும் எதிரும் புதிருமாகச் சண்டையிட்டு வருகின்றன.

ad

ad