இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் எவண்ட் காட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச கடலில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
சர்வதேச கடலில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் மூலம் இந்த ஆயுத விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக என சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முப்படையினரின் ஆயுதங்கள், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் என்பன கடற்கொள்ளையர்கள் மற்றும் சர்வதேச வன்முறை குழுக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவம் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், அவர்களின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் துப்பாக்கிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு சொந்தமான தனியார் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டு அந்த ஆயுதங்களும் தோட்டக்களும் வெளிநாட்டு கப்பல்களின் பாதுகாப்புக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டோ அல்லது விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து ஊடகவியலாளர் ஒருவரிடம் தகவல் வெளியிட்டுள்ள கடற்படையின் உறுப்பினர் ஒருவர்,
இந்த ஆயுத களஞ்சியத்தை கொண்ட கப்பல் காலியில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இருந்து செயற்படும். அந்த கப்பலில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய நபர்கள் வருவார்கள். டொலர்களிலேயே அவர் பணத்தை செலுத்துவார்கள்.
இந்த டொலர்களை கொழும்பு சென்று மாற்றுவதாக எமது அதிகாரிகள் கூறுவார்கள். களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகளில் பெரும்பாலான துப்பாக்கிகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை. கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றவர்களை பயன்படுத்தியே இந்த ஆயுத விற்பனை முன்னெடுக்கப்பட்டது என அந்த கடற்படை உறுப்பினர் கூறியுள்ளார்.