27 ஜன., 2015

மீளும் நெடுந்தீவு மக்கள்-வட மாகாண முதலமைச்சர்

நெடுந்தீவு மிக அழகான தீவு. பல வளங்களைக் கொண்ட தீவு. துரதிஸ்ட வசமாக சனிபகவானின் திருஷ்டி சிலகாலம் உங்களைப் பீடித்திருந்தது. சனி மாற்றத்தின் பின் விடியத் தொடங்குவதை நாம் அவதானிக்கலாம். சனிமாற்றம் முக்கியமாக உங்களுக்கே நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது என்பது எனது கணிப்பு.
எங்கள் மாகாணசபையின் மக்களைச் சந்திக்கும் தொடர் நிகழ்வின் முதற் பார்வையே உங்கள் மீது தான் படர்ந்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நெடுந்தீவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் அங்கு மக்களை சந்தித் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். நிகழ்வில் தொடர்ந்தும்
அவர் உரையாற்றுகையில்,
நெடுந்தீவுப் பயணம் நீண்ட காலத்தாமதத்தின் பின்னர் நடைபெற்றுள்ளது. பல தடவைகள் நெடுந்தீவு வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் ஏதாவது தடங்கல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் மக்களைச் சந்திக்கும் எனது இந்த நிகழ்வில் முதன் முதலில் நெடுந்தீவில் இருந்து தான் நான் தொடங்குவேன் என்று திடசங்கற்பம் கொண்டபின் வருவது இலகுவாக இருந்தது. எதனையும் இந்தத் தினத்தில் இந்த நேரத்தில் இந்த இடத்தில் செய்வோம் என்று மனஉறுதி கொண்டு விட்டோமானால் தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய ஒரு மனோபக்குவம் எமக்கு வந்து விடும். அந்தவாறே திடமாக முடிவெடுத்து அதைச் செயல்ப்படுத்தி உங்கள் யாவரையும் இன்று வந்து சந்திப்பது எனக்கு மனமகிழ்வை அளிக்கின்றது.
இலங்கை இராணுவமும் அதனுடன் சேர்ந்த இராணுவ அனுசரணைச் சக்திகளும் நெடுந்தீவை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் யாழ் குடா நாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள் என்று அறிகின்றேன். பொருளாதார வசதிகள் அருகிய ஒரு நிலையிலேயே பெரும்பாலாக எங்கள் தமிழ் மீனவ சமூக மக்கள் தான் பலத்த சிரமங்களிடையே வாழ்ந்து வருவதாக அறிந்து கொண்டேன். பல அடிப்படை வசதிகள் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்றும் அறிந்தேன். அதனால் தான் கிறிஸ்மஸ் தாத்தா வருவது போல் சில பல பரிசுப் பொருட்களை வாகனங்களில் சுமந்து கொண்டு வந்துள்ளோம்.
வடமாகாணசபையானது உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிய சபை. அதில் அரசு நடத்துங் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு கிடையாது. எதிர்க்கட்சியினர் வென்ற இடங்களையும் நாங்கள் ஒரே மாதிரியாகத்தான் அபிவிருத்தி செய்து வருகின்றோம். ஏனெனில் எதிர்க்கட்சியினரும் எங்கள் சொந்த உறவுகள்தான். கட்சியைக் காட்டி கல்நெஞ்சர்களாக மாற இடமளிக்கக் கூடாது.
முஸ்லிம் மக்கள், மலையக மக்களிடையே நான் ஒன்றை அவதானித்துள்ளேன். ஒரு சகோதரர் ஒரு கட்சியிலும் மற்றவர் இன்னொரு கட்சியிலும் இருப்பார்கள். யார் வந்தாலும் சகோதரர்கள் தங்கள் குடும்பங்களைப் பார்த்துக் கொள்வார்கள். நாங்களோ கட்சிக்காகக் காடைத்தனங்களில் ஈடுபட பின் நிற்க மாட்டோம். இந்த நிலை மாற வேண்டும்.
தத்தமது இடங்களை அபிவிருத்தி செய்ய எதிர்கட்சியினருக்கும், எனக்கு வழங்கப்படும் அதே தொகைதான் வழங்கப்பட்டுள்ளது. எனதருமைத்தம்பிமார் விந்தன் கனகரட்ணம், கஜதீபன், ஆர்னோல்ட் ஆகிய உறுப்பினர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அனலைதீவு வந்திருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினரும் எனது நண்பருமான திரு சிறிதரன் அவர்களும் வந்திருந்தார். இவர்கள் யாவருக்கும் உங்கள் எல்லோர் மீதும் விசேட வாஞ்சை ஒன்று உள்ளது என்பதை நான் அறிந்து கொண்டேன். அவர்கள் அனைவரும் இதுகாறும் உங்களுக்கிருந்த அவலங்களை, அல்லல்களை, இடர்களை நீக்கி உங்களுக்கு நல்வாழ்வைப் பெற்றுத்தரக் கடுமையாக உழைப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவர்கள் அவ்வாறு உழைக்காவிட்டால் தட்டிக் கேட்பது என் பொறுப்பு!
உங்கள் தீவு மிக அழகான தீவு. பல வளங்களைக் கொண்ட தீவு. துரதிஸ்ட வசமாக சனிபகவானின் திருஷ்டி சிலகாலம் உங்களைப் பீடித்திருந்தது. சனி மாற்றத்தின் பின் விடியத் தொடங்குவதை நாம் அவதானிக்கலாம். சனிமாற்றம் முக்கியமாக உங்களுக்கே நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது என்பது எனது கணிப்பு. எங்கள் மாகாணசபையின் மக்களைச் சந்திக்கும் தொடர் நிகழ்வின் முதற் பார்வையே உங்கள் மீது தான் படர்ந்துள்ளது. அடுத்துத்தான் வலிகாமம் வடக்கு, மருதங்கேணி போன்ற இடங்களைப் பார்வையிட்டு மக்கள் நிலை கேட்டறிய உள்ளோம்.
இந்தத் தீவானது பலமருந்து மூலிகைகள் செழித்து வளரும் மாமலைவனம் என்று மன்னன் செகராசசேகரன் காலத்தில் அழைக்கப்பட்டது. இங்கு அன்னியர் ஆட்சிக்கு முன்னர் ஆண்ட வெடியரசனின் கோட்டை இருப்பதாக அறிகின்றேன். அது நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் இருப்பதாகவும் அறிகின்றேன். அப்பேர்ப்பட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டையை எமது சுற்றுலா அமைச்சு ஏற்று ஏதேனும் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட சட்டத்தில் இடமிருக்கின்றதா என்பதை எமது சுற்றாடல் அமைச்சின் அனுசரணைப் பிரதிநிதி திரு. கஜதீபன் அவர்கள் ஆராய்ந்து பார்ப்பார் என்று நம்புகின்றேன். சில விடயங்கள் எங்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது
என்ற காரணத்தினாலேயே இவ்வாறு கூறினேன். இதனை விட மேலும் நெடுந்தீவுக் கோட்டை, மாவலித்துறை போன்றவையும் பாதுகாத்துப்  பயன்படுத்தப்பட வேண்டியவை. மாவலித்துறை முகத்தில் வெளிச்சவீடு இன்றும் இரவில் ஒளிவீசிப் பயன் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்று அறிகின்றேன்.
மேலும் சுற்றுலா என்று கூறும் போது நினைவிற்கு வருவது கட்டைக் குதிரைகள். ஒல்லாந்தர் காலத்தில் இந்தக் கட்டைக் குதிரைகளும் கோவேறு கழுதைகளும் இங்கு கப்பல்களில் வருவிக்கப்பட்டன என்ற கூறுகின்றார்கள். குதிரைகளைத் தீவுக்கு வெளியே கொண்டு செல்வதற்குத் தடையுண்டு. அண்மையில் அதை மீறி கடத்திச் சென்றவர்கள் சிலர் இன்று பலவித சிரமங்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்று கேள்விப்படுகின்றேன். எது எவ்வாறிருப்பினும் இப்பேர்ப்பட்ட விலங்குகளைப் பார்த்துப் பராமரித்து வருவது உங்கள் கடப்பாடாகும். உங்கள் தீவை நினைவு படுத்தும் அளவுக்கு அவை இன்று பிரசித்தி பெற்று விட்டன என்பதை மறவாதீர்கள்.
எங்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்காத நிலையில் அவற்றை எப்படி பராமரிக்கலாம் என்று கூறாதீர்கள். அவை நாளடைவில் சுற்றுலா ஊடாகப் பெரும் பணம் பெற்றுத் தரப்போகும் இறைவன் படைப்புக்கள். அவற்றை அழியாது பாதுகாத்தல் உங்கள் கடப்பாடாகும். மேலும் உங்கள் பெருக்குமரமும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. இம்மரத்தில் உள்ள துளை வழியாக உள்ளே சென்றால் அங்கே குகை ஒன்று வருகின்றது என்பார்கள். இந்தக் குகைக்குள் ஒரு சாதாரண குடும்ப அங்கத்தவர்கள் அங்கு நிற்கக் கூடிய இடவசதி உள்ளதாக நான் அறிந்திருகின்றேன். இம்மரமும் சுற்றுலாத்துறையினரால் பரிசீலித்துப் பார்த்து பாதுகாப்புக் கொடுத்து பராமரிக்கப் பட வேண்டிய ஒரு விருட்சமாகும்.
கதிர்காமத்தில் தெய்வானை அம்மன் ஆலயத்தின் முகப்பில் ஒரு பாரிய விருட்சம் ஒன்று இருந்தது. மிகவும் பருத்த அத்திவாரத்தைக் கொண்ட மரம் அது. ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட விருட்சம் என்றார்கள். 1980 களில் கதிர்காம ஆலயத்தைச் சுற்றி மதில் கட்டுவது என்று தீர்மானிக்ப்பபட்டு இந்த மரத்தையும் எவரோடும் கலந்து ஆலேசிக்காமல் அப்படியே வெட்டி அழித்து விட்டார்கள் அரச அலுவலர்கள். பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது அந்த மரத்தின் பெருமையும் தொன்மையும். பல புகழ்பெற்ற முனிவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு வந்து தவம் இயற்றிய ஒரு புண்ணிய விருட்சம் அந்த விருட்சம் என்று அறிந்து கொண்டார்கள். அறிந்து என்ன பயன்? அந்த அறிவு மரத்தை வெட்ட முன் வந்திருக்க வேண்டும். எதையுமே அது எம்முடன் இருக்கும் போது நாம் பொருட்படுத்துவதில்லை. அது இல்லாமல் போன பின் அல்லது இனம் தெரியாத மற்றவர்கள் கூறிய பின்னர் தான் அவற்றின் பெருமையை உணர்ந்து கொள்கின்றோம். உங்கள் பெருக்கு மரமும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.
மேலும் டச்சுக் காலத்து குதிரை லாயங்களும் பாரிய காலடி போன்ற இயற்கையான அமைப்பும் மக்கள் பார்வைக்காக விடக் கூடிய இடங்கள். இவை புனர் நிர்மாணம் செய்து மக்கள் பார்வைக்காக விடப்பட வேண்டும் என்று கருதுகின்றேன். வருங்காலத்தில் இது நடை பெறப்போவது திண்ணம் என்று கூறி வைக்கின்றேன்.
வடமாகாணம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டிய காலம் கனிந்து வருகின்றது. எமது சுற்றுச் சூழலை நாங்கள் வித்தியாசமான ஒரு சுற்றாடலுக்கு உட்படுத்த வேண்டும். பாரிய சுற்றுலா ஹொட்டேல்களை நிர்மாணிப்பதிலும் பார்க்க 'கபானா' போன்ற குடிசைகளை எமது பாரம்பரியத்திற்கும், சுற்றாடலுக்கும், தட்ப வெட்ப நிலைக்கும் ஏற்றவாறு நவீன உள்ளக வசதிகளுடன் கட்டுவதே சிறந்தது. அதற்குரிய கட்டுமானங்கள், கலவைகள் போன்றவை உள்ளுரில் இருந்தே பெற வழிவகுக்க வேண்டும். உணவு - உறங்கு வசதிகள் கொண்ட விடுதிகள் கட்ட பலரும் முன்வருவார்கள். ஆனால் கட்டும் பணிகளிலும் அவற்றை நடத்தும் பணிகளிலும் எமது உள்ளூர் மக்களே அல்லது வடமாகாண மக்களே ஈடுபட வேண்டும் என்பது எமது நிபந்தனையாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து வருபவர்கள் எங்கள் சுற்றுச் சூழலைப் பாவித்து விட்டுப் பெருவாரியான வருமானங்களை வெளியில் எடுத்துச் செல்ல விடாது எமது நிபந்தனைகள் அமைய வேண்டும். இதனை எமது பரிபாலிக்கும் அலுவலர்களுக்குச் சொல்லி வைக்கின்றேன்.
தன்னினம் நாடிப் புசிப்பவர்களை 'கனிபல்கள்' என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அச்சொல்லை தன்னினப் புசிப்பாளர்கள் என்று மொழிபெயர்க்கலாம். எம்மிடையே வந்து எமக்கு உதவி செய்வது போல் செய்து விட்டு பெருவாரியான எங்கள் வளங்களைச் சுருட்டிக் கொண்டு செல்லும் செயலை cannibalisation  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு அலுவலர்களாகிய நீங்கள் இடம் கொடுகக் கூடாது  என்று உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
வடக்கு கிழக்கு இப்பொழுது திறக்கப்பட்டு விட்டது. கிடைத்ததைச் சுருட்டுவோம் என்ற எண்ணத்தில் பலர் வருவார்கள். எமது சபையுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என்று கூறிவைக்கின்றேன்.
இனி வருங்காலம் எமது மக்களின் காலம். கட்சிகள் காலம் அல்ல. எம்மக்கள் தான் எம் கட்சி. அவர்கள் நலமே எமது குறிக்கோள் என்ற பாணியில் அலுவலர்களாகிய நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களைப் போன்ற அலுவலர்கள் என்னிடம் இராணுவத்திடம் கையளிக்க கோரிய கோரிக்கைகளை அவற்றின் கோப்புக்களை அனுப்பி வைத்ததால்த்தான் நான் அவர்கள் கோரிக்கையை மறுக்கக் கூடியதாக இருந்தது. மக்கள் மத்தியில் இராணுவத்திற்கு இடமில்லை என்பது எனது கருத்து.
அண்மையில் சில எழுத்துப் பொறிப்புக்கள் மத்திய கலாசார நிதியத்தின் கடலோரத் தொல்பொருளியல் அலகினால் அடையாளம் காணப்பட்டது என்ற அறிகின்றேன். இவையாவும் வருங்காலத்தில் வெளிநாட்டு மக்களை உங்கள் அண்டை அழைத்து வரப்போகும் சாதனங்கள், சாட்சிப் பொருட்கள். அதை நீங்கள் மறவாதீர்கள். ஒல்லாந்தர் காலத்து கலாசார எச்சங்கள் பல இங்கு காணப்படுகின்றன. ஒல்லாந்தர் கால எச்சங்களைக் காண நெதர்லாந்தில் இருந்து மக்கள் வந்து செல்கின்றார்கள். அவர்களை நீங்கள் அழைத்து உங்கள் பாரம்பரியங்களை அவர்களுக்குக் காட்டக் கூடிய ஒரு சூழலை நாங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
பனை மரங்களை நீங்கள் பெருவாரியாக வளர்க்க முன்வர வேண்டும். பனை மரம் என்பது சாதாரண ஒரு மரம் அன்று. அதனைக் கற்பகத் தரு என்பார்கள். கேட்டதெல்லாம் வழங்கக் கூடியது என்பதே அதன் பொருள்.
என் மாமனார் கொழும்பில் ஒரு வீடு கட்டினார். அவருக்குப் பனை மரம் மீது அலாதியான மதிப்பு. யாழ்ப்பாணத்தில் இருந்து அறுவது எழுபது வருடங்களுக்கு முன்னர் பனை மரக்குற்றிகளை வரவழைத்து அவற்றைக் கொண்டு தீராந்திகள் செய்து வீட்டைக் கட்டினார். அவர் சில காலத்தின் பின்னர் இறந்ததும் எனது மாமியார் அவுஸ்திரேலியா செல்வதற்காக தனது வீட்டை விற்றார். அதை வேண்டியவர் எனது சிங்கள நண்பர் ஒருவர். வீட்டை இடித்துக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டார். என்னை ஒரு நாள் கூப்பிட்டு அந்தத் தீராந்திகளை எனக்குக் காட்டினார். 'அறுபது வருடங்களுக்கும் பின்னர் இந்த பனைமரத் தீராந்திகளை எந்த ஒரு கறையானோ, புழுவோ எதுவுமே கிட்ட நெருங்கவில்லை பார்த்தீர்களா?' என்று கூறினார். புதிதாகப் போட்டது போல் இருந்தன அந்தத் தீராந்திகள். ஆகவேதான் கூறுகின்றேன். பனை மரங்கள் கற்பகத் தருக்கள். அவை தானாக வளர விடாமல் திட்டமிட்டு நீங்களே வளர்த்து வாருங்கள். உங்கள் குழந்தைகள் அவற்றின் பயனைப் பெறுவார்கள்.
எனவே இன்று இந்த நெடுந்தீவுப் பயணம் எங்கள் யாவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனியும் நீங்கள் விடுபட்ட ஒரு சமூகமாக உங்களை எண்ண வேண்டாம். எம் உறுப்பினருடன் தொடர்பு கொள்ளுங்கள். எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வாழ்வை வசந்தமாக்க நாங்கள் காத்து நிற்கின்றோம். பணம் ஒரு பிரச்சனைதான். ஆனால் மனம் இருந்தால் பணமும் வரும் குணமும் மாறும். நான் குணம் என்று கூறியது இதுவரை காலமும் உங்களை ஆட்டிப் படைத்தோரின் குணத்தை! என்னை ஏற்று உபசரித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.