14 ஜன., 2015

இனப்படுகொலைக்கு பரிகாரநீதி! அரசியற்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு: புனித பாப்பரசரிடம் தாயக மக்கள் கோரிக்கை

இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பரிகாரநீதி பெற்றுத் தாருங்கள் என புனித பாப்பரசரிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழீழத் தாயக மக்கள்,
ஈழமண் விடிவு காண பொதுசன வாக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்யுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்று நாட்கள் (சனவரி 13-14-15) பயணமாக வணக்கத்துக்குரிய புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள் இலங்கை தீவுக்கு சென்றுள்ளர்.
அனைத்துலக சமூகத்திடம் தமிழர்களுக்கு பரிகாரநீதி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசியற்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்த ஒத்துழைக்குமாறும் அனைத்துலகத்திடம் கோரியுள்ள நிலையில், தாயக மக்களிடம் இருந்து இக்கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இலங்கைத்தீவுக்கு புனித பாப்பரசர் சென்றடைந்த சமவேளை வவுனியா நகரசபை பொது மைதானத்தில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை பொதுமக்கள் நடத்தியுள்ளனர்.
தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், தடுத்து வைப்புகள், கைதுகள், படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், சூறையாடல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியனவற்றுக்கு நீதிகேட்கும் சொற்கொட்டுக்கள் அடங்கிய பதாதைகளுடன் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
புனித பாப்பரசர் புதனன்று நாளை மடுத்திருத்தலத்துக்கு பயணமாகவுள்ள நிலையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் மடுத்திருத்தலம் நோக்கி பயணமாகியுள்ளனர்.
புனித பாப்பரசரை நோக்கி தாயக மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
திருத்தந்தையே! அடிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது கருணை காட்டுங்கள். எங்கள் இனவிடுதலைக்கு ஆசீர்வதியுங்கள்.
வணக்கத்துக்குரிய தந்தையே! உங்கள் வருகை எங்களுக்கு விடுதலையை பெற்றுத்தரட்டும்.
தமிழினத்தின் அடிமைச்சாசனத்தை திருத்தி எழுதித்தாருங்கள்.
அருள்தந்தையே! ஆக்கிரமிப்புகள், படுகொலைகள், ஆட்கடத்தல்களிலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள், உறவுகளை தேடியலைகிறோம். எங்களுக்கு ஆறுதல் தாருங்கள்.
இறுதிப்போரில் சரணடைந்த எங்கள் கணவர்கள், பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்துங்கள். கேள்வி எழுப்புங்கள்.
வணக்கத்துக்குரிய திருத்தந்தையே! தடுப்புக்காவலில் உள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள். இரந்து கேட்கின்றோம்.
அருள்தந்தையே! எங்கள் பிள்ளைகள், உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார்கள்.
எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு பரிகார நீதியை பெற்றுத் தாருங்கள்.
திருத்தந்தையே! அடிமைத்தமிழ் மக்களுக்கு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுதலை பெற்றுத் தாருங்கள்.
உங்கள் பாதம் பதிந்த ஈழமண் விடிவு காண வேண்டும். பொதுசன வாக்கெடுப்புக்கு பரிந்துரை செய்யுங்கள்.