லிபியாவில் இருந்து இத்தாலிக்கு குடியேற முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லிபியாவின் திரிபோலி நகருக்கு அருகே உள்ள கடற்கரையில் இருந்து 2 படகுகளில் அகதிகளாக 200க்கும் மேற்பட்டோர் இத்தாலி நோக்கி பயணம் செய்தனர். இத்தாலி அருகே உள்ள தீவு ஒன்றின் அருகே படகு சென்றபோது, மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 8 மீட்டர் உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளாலும், சூறாவளி காற்றாலும் இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் நான்கு நாட்களாக உயிரை கையில் பிடித்தப்படி, நடுக்கடலில் தத்தளித்த ஒன்பது பேர் ஒருவழியாக லாம்பெடுசா தீவில் கரையேறி உள்ளனர். அவர்களை இத்தாலி கடற்படையினர் மீட்டனர்.
இத்தாலிக்கு குடியேற முயன்றபோது, இந்த விபத்து நடந்ததாக அறிந்த இத்தாலி கடற்படையினர், மற்றவர்களை மீட்கும் பணியை தொடங்கினர். மற்றவர்களை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
லிபியாவில், கடுமையான உள்நாட்டு சண்டை காரணமாக, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், படகு மூலமாக இத்தாலிக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக விபத்தில் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.