புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

சில மணிநேரத்தில்.....இறுதிப்போட்டி இடம் யாருக்கு? 2–வது அரைஇறுதியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்
















உலக கோப்பை கிரிக்கெட்டின் 2–வது அரைஇறுதியில் இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

2–வது அரைஇறுதி11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. புதிய உலக சாம்பியன் யார்? என்பதை அடையாளம் காட்டுவதற்கு இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 2–வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இதையொட்டி சில தினங்களாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
தொடர்ந்து 7 வெற்றிஉலக கோப்பைக்கு முன்பாக குறைத்து மதிப்பிடப்பட்ட டோனி தலைமையிலான இந்திய அணி இப்போது மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு பிரமாதப்படுத்தியுள்ளது. லீக் சுற்றில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளை தொடர்ந்து வீழ்த்திய இந்திய அணி, கால்இறுதியில் வங்காளதேசத்தையும் துரத்தியடித்தது. தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்தது மட்டுமல்ல, 7 முறையும் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் காலி செய்தது தான் இதில் வியப்புக்குரிய அம்சமாகும்.
ஆனால் இதுவரை ஆடிய ஆட்டங்களிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோதல் தான் உண்மையான சோதனையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம், ஆஸ்திரேலியா 4 முறை உலக சாம்பியன், பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கில் முழு நிறைவான அணி, எல்லாவற்றுக்கும் மேலாக இது அவர்களது சொந்த ஊராகும்.
எனவே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் பிடரியை பிடித்து ஆட்டுவிக்க வேண்டும் என்றால் நமது அணியினர் தங்களது முழு சக்தியையும் ஒன்று திரட்டி வெளிப்படுத்த வேண்டும். டாப்–5 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சதம் விளாசி, இன்னொரு வீரர் அரைசதம் அடித்தால் நிச்சயம் சவாலான ஸ்கோரை அடைய முடியும்.
மிரட்டுவாரா விராட் கோலிகால்இறுதியில் சதம் அடித்த ரோகித் சர்மா, இந்த தொடரில் 2 சதங்கள் கண்டுள்ள ஷிகர் தவான் இருவருக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களான இவர்கள் சாமர்த்தியமான தொடக்கம் தர வேண்டியது அவசியம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் சதம் அடித்த துணை கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் அதன் பிறகு குறிப்பிடும்படி இல்லை. பார்முக்கு திரும்புவதற்கு இந்த ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார். எப்போதுமே தன்னை வம்புக்கு இழுக்கக்கூடிய ஆஸ்திரேலியாவுக்கு பாடம் புகட்டுவதற்கும் அவருக்கு இதுவே உரிய சந்தர்ப்பமாகும்.
வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (17), உமேஷ் யாதவ் 14), மொகித் ஷர்மா (11) ஆகியோர் கூட்டாக இணைந்து இதுவரை 42 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார்கள். அவர்களது அசத்தல் இந்த ஆட்டத்திலும் தொடர வேண்டும். பொதுவாக சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பதால் அஸ்வின் (இதுவரை 12 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (9 விக்கெட்) ஆகியோரின் தாக்கமும் பிரதான இடம் பெறக்கூடும்.
ஆஸ்திரேலியா எப்படி?போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வரிசையை உன்னிப்பாக கவனித்தால்....அடேங்கப்பா....அசுர பலம் வாய்ந்த அணி என்று ஒற்றை வரியில் சொல்லி விட முடியும். அதிரடி தொடக்க சூரர்கள் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், நிதானத்துடன் நேர்த்தியாக ஆடக்கூடிய கேப்டன் மைக்கேல் கிளா£க், ஸ்டீவன் சுமித், பிராட் ஹேடின், ஆல்–ரவுண்டர்கள் மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன் என்று பேட்டிங்கில் ஒரு நட்சத்திர பட்டாளமே அணி வகுத்து நிற்கிறது. இதில் மேக்ஸ்வெல்ஸ் இந்திய சுழற்பந்து வீச்சை சமீபத்தில் அடித்து நொறுக்கியவர்.
பந்து வீச்சில், இதுவரை 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ள மிட்செல் ஸ்டார்க், ஹாஸ்லேவுட், மிட்செல் ஜான்சன் உள்ளிட்டோர் பவுன்சர்களாக வீசி மிரட்டுவார்கள். இவர்களை சமாளிப்பதை பொறுத்தே நமது அணியின் ஸ்கோரின் போக்கு அமையும்.
லீக் சுற்றில் நியூசிலாந்திடம் மட்டும் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி கால்இறுதியில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய 20 ஒரு நாள் போட்டிகளில் 17–ல் வெற்றி(2 தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்றிருக்கிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது. இது போன்ற சாதகமான அம்சங்களால் ஆஸ்திரேலிய அணியினர் கூடுதல் தெம்புடன் களம் இறங்குவார்கள். அது மட்டுமின்றி ‘ஸ்லெட்ஜிங்’ எனப்படும் வசைப்பாடுதலையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேயும் நிறைய ‘டிப்ஸ்’களை அந்த அணியினருக்கு வழங்கினார்.
சில மணிநேரத்தில்...எது எப்படி என்றாலும் இந்த ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது. சிறு தவறும் இன்றி முழு திறமையை எந்த அணி வெளிக்காட்டுகிறதோ, அந்த அணியின் கையே ஓங்கும். இன்னும் சில மணி நேரத்தில் நாமும் அதை உணர்ந்து விடலாம்.
மற்றபடி முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை இரு அணியினரும் ‘யுத்தம்’ போன்று முட்டி மோதி..உரசிக் கொள்வார்கள் என்பதால் பரபரப்புக்கு குறைவிருக்காது. 44 ஆயிரம் இருக்கை கொண்ட சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு நிகராக இந்திய ரசிகர்களும் ஆக்கிரமித்து இருப்பார்கள். எனவே நமது அணிக்கும் அமோக ஆதரவு கிடைக்கும்.
வீரர்கள் விவரம்போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரஹானே, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ், மொகித் ஷர்மா.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித், மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஷேன் வாட்சன், மேக்ஸ்வெல், பிராட் ஹேடின், ஜேம்ஸ் பவுல்க்னெர், மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹாஸ்லேவுட்.
இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் விஜய் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. சிட்னியில் இன்று மழை பெய்ய 10 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரைஇறுதியில் தோற்காத ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 6 முறை அரைஇறுதியில் விளையாடி இருக்கிறது. அதில் ஒன்றில் கூட தோற்றதில்லை. 1975, 1987, 1996, 2003, 2007–ம் ஆண்டில் வெற்றியும், 1999–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதியில் சமனும் (டை) கண்டிருந்தது. நீண்ட காலமாக தக்க வைத்திருக்கும் அவர்களின் இந்த பெருமையை இந்திய அணி உடைக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
இந்திய அணி அரைஇறுதியில் 5 முறை விளையாடி அதில் 3–ல் வெற்றியும் (1983, 2003, 2011), 2–ல் (1987, 1996) தோல்வியும் சந்தித்துள்ளது.
நெருக்கடியை சமாளிக்க முடியும்
‘‘உள்ளூரில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் நெருக்கடியை எங்களால் திறம்பட கையாள முடியும். இந்த தொடரில் நெருக்கடியை எங்களது வீரர்கள் சிறப்பாக சமாளித்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதிலும் பாகிஸ்தானுக்கு எதிரான கால்இறுதியில் விளையாடிய விதம் மிகவும் திருப்தி அளித்தது. எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்யும். ஏனெனில் நாங்கள் உலகின் நம்பர் ஒன் அணி. அது மட்டுமின்றி நன்றாக விளையாடும் போதும் எதிர்பார்ப்பு ஏற்படுவது சகஜமே. எங்கள் அணியில் இளமையும், அனுபவமும் கலந்த கலவையாக வீரர்கள் இருக்கிறார்கள். சில வீரர்களுக்கு உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அச்சமின்றி விளையாடக்கூடிய நம்ப முடியாத அளவுக்கு திறமை கொண்ட இளம் வீரர்களும் எங்களிடம் இருக்கிறார்கள். காயத்தில் இருந்து மீண்டு கடைசி நேரத்தில் நான் இடம் பெற்றதால் ஏற்கனவே சரியான கூட்டணியில் அமைந்திருந்த ஆஸ்திரேலிய அணியில் பாதிப்பு ஏற்பட்டதாக என்று கேட்கிறீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளை சொல்ல முடியும். ஆஸ்திரேலியாவுக்காக நான் 200–க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அதில் நான் செய்த சாதனைகளை (மொத்தம் 7,897 ரன்) பாருங்கள். மற்றவர்களோடு ஒப்பிடும் போது எனது பங்களிப்பு மேலே தான் உள்ளது. ஒவ்வொரு முறை களம் காணும் போது, ஒரு வீரராக நிறைய ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு உதவிட வேண்டும் என்று தான் விரும்புவேன். இந்த ஆட்டத்திலும் எனது அணுகுமுறையில் மாற்றம் இருக்காது.
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பல மாதங்களாக விளையாடி வருகிறது. இங்கு விக்கெட்டுகளை கைப்பற்றுவது எப்படி?, நிறைய ரன்களை குவிப்பது எப்படி என்பதை இந்த உலக கோப்பையில் காண்பித்து இருக்கிறார்கள். டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் தோல்வியை சந்தித்த நிலையில் இந்திய அணியை இவ்வளவு சீக்கிரம் தூக்கி நிறுத்தியதற்கான எல்லா பெருமையும் இந்திய கேப்டன் டோனியையே சாரும். இந்தியர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்.’’
– ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.
பெரிய போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் என்பது தெரியும்
‘‘எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் பெரிய போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். 2013–ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்றோம். 2011–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் சாதித்து காட்டியிருக்கிறோம். இது போன்ற ஆட்டங்கள் தான் எங்கள் ஒவ்வொருவரின் மிகச்சிறந்த திறமையை வெளிக்கொண்டு வருகிறது. அதே போன்று இந்த ஆட்டத்தையும் எதிர்பார்க்கிறோம். இது உணர்ச்சியும், பரபரப்பும் நிறைந்த ஆட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன். சிட்னி மைதானத்தின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால், அது சுழலுக்கு தான் ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் நாங்கள் விளையாடியதை பார்த்தால், சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது தெரியும். எனவே இங்கு பந்து நன்கு சுழலும் என்று நினைக்கிறேன். ஆனால் ஆடுகளத்தன்மை எப்படி இருந்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஒவ்வொரு அணிக்கும் ஏதாவது பலவீனம் உண்டு. ஆஸ்திரேலியாவுக்கும் அப்படிப்பட்ட பலவீனம் உள்ளது. அந்த அணி தரமான வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களில் சுருண்டனர். பாகிஸ்தானுக்கு எதிரான கால்இறுதியில் கூட வேகப்பந்து வீச்சில் கொஞ்சம் தடுமாறினர். ஒட்டுமொத்தத்தில் அவர்கள் சிறந்த பேட்டிங்கை உள்ளடக்கிய அணி. நாங்கள் வித்தியாசமான பந்து வீச்சு தாக்குதலை கொண்ட அணி. எங்களது பலத்திற்கு தகுந்தபடி விளையாடுவோம்’’.
–இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா.
மைதான கண்ணோட்டம்போட்டி நடக்கும் புகழ்பெற்ற சிட்னி மைதானத்தில் இதுவரை 150 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 17 ஆட்டங்களில் பங்கேற்று 4–ல் வெற்றியும், 12–ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் மழையால் முடிவு கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இங்கு 1980–ம் ஆண்டு முதல் இதுவரை 14 ஆட்டத்தில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றி 2008–ம் ஆண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்தவை ஆகும்.
ஆஸ்திரேலிய அணி இங்கு மொத்தத்தில் 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 82–ல் வெற்றியும், 37–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 6 ஆட்டத்தில் முடிவில்லை. இதே உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 408 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தின் அதிகபட்சமாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு பறந்த அனுஷ்கா ஷர்மாஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருகிறார்கள். கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா–இந்தியா மோதும் அரைஇறுதி ஆட்டத்தை நேரில் காண அனுஷ்கா ஷர்மா, ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ளார். இது விராட் கோலிக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்குமா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும்.

ad

ad