
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி. தேவராசாவை இரண்டாம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பொலிஸார் ஊடாக இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி அழைக்கப்படுகின்றீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனவர்களது விசாரணையினை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு , கிழக்கு மாகாண சிவில் ஒன்றியத்தினால் அண்மையில் 8 மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தினை முன்னின்று தேவராசா நடாத்தியிருந்தார்.
இதேவேளை, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 திகதி இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறித்து தேவராசாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
அழைக்கப்பட்டமைக்கு காரணம் தெரியவில்லை. எனினும் குறித்த தினத்தில் விசாரணைக்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளேன். அன்றைய தினம் எனது சட்டத்தரணியுடன் செல்வேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.