புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு


2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள். எங்களை அச்சுறுத்துகிறார்கள், நாங்கள் தினசரி துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இன்றைய தினம் பிரதமர் ரணிலிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
வடபகுதிக்கு 3 நாள் விஜயமாக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.வந்திருந்த பிரதமர் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போதே முன்னாள் போராளி ஒருவர் பிரதமரிடம் நேரடியாகவே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் போராளிகள் பிரதமருக்கு கூறுகையில்,
புனர்வாழ்வு வழங்கப்பட்டு எம்மை விடுவிக்கும்போது எங்களை சமூகத்தில் ஒருவர் என்று கூறியே விடுவித்தீர்கள். ஆனால் நாங்கள் சமூகத்தில் ஒருவர் என்றால் எங்களை பொலிஸார் விசாரிக்க வேண்டும், ஆனால் எங்களுடைய வீடுகளுக்கு படையினர் வருகிறார்கள்.
நாங்கள் வேலைக்குச் சென்றதன் பின்னர் எங்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள். எங்களை விசாரிக்கிறார்கள்.
இவர்களால் நாங்கள் தினசரி துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என சுட்டிக்காட்டினார்.
மேலும் ஒரு முன்னாள் போராளி கூறுகையில்,
எனது மனைவி படுத்த படுக்கையில் உள்ளார். எனது பிள்ளைகளுக்கு மனநலன் குறைவு, எனக்கும் தலையில் துப்பாக்கி ரவை இருக்கின்றது.
இந்த நிலையிலும் என்னை தினசரி விசாரணைக்கு அழைக்கிறார்கள். நான் வேலைக்குச் சென்றால் வீட்டே வருகிறார்கள். எதற்காக கொடுமைப்படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதன்போது பிரதமரும் சபையிலிருந்த மற்றய அமைச்சர்களும் முன்னாள் போராளிகளை பார்த்து, ஆட்சிமாற்றத்தின் பின்னரும் வருகிறார்களா? என கேட்டனர்.
அதற்கு ஆட்சிமாற்றத்தின் பின்னரும் வருகிறார்கள் என அவர்கள் பதிலளித்த நிலையில் வாய்மூடி மௌனிகளாக அதனை நாங்கள் பார்த்து நடவடிக்கை எடுப்போம் என்ற பதிலுடன் நிறுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் சபையில் இருந்த படை அதிகாரிகள் அவ்வாறு நடந்ததா?  எப்போது நடந்தது? அவ்வாறு நடந்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை. அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனை நாங்கள் நம்பவில்லை. என வழக்கம்போன்றே பதிலளித்தனர்.
எனினும் அங்கிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து, இந்த முன்னாள் போராளிகள் கதை சொல்லவில்லை. அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை சொல்கிறார்கள்.
நடந்ததா? நாங்கள் நம்பமாட்டோம். என்ற பேச்சை விடுங்கள் இந்த சபையில் கற்ப னை கதை சொல்ல அவர்கள் வரவில்லை. என்பதோடு நீங்கள் நம்பவேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சொல்லவில்லை. உங்களுடைய அடக்குமுறைகள் வெளியே தெரியவேண்டும் என்பதற்காகவே சொல்கிறார்கள் என படை அதிகாரிக்கு பதிலளித்தனர்.

ad

ad