இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் 4,974 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளைப் பராமரிக்க வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான். அதற்குத்தான் அந்த ஆணையமே இருக்கிறது.
ஒரு நாட்டின் சாலையை பராமரிப்பது என்பது அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்று. ஆனால் அந்த அடிப்படை கடமையைக் கூட பொதுமக்களுக்கு அரசு செய்து கொடுக்காமல் யாரோ சில தனியாரிடம் 'சாலை பராமரிப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் சாலையை பராமரிக்கிறோம் என்ற பெயரில் 'சுங்க கட்டணம்' ஒன்றை வசூலிக்கின்றனர்.
சாலைகளில் எச்சரிக்கை குறியீடுகள், மின்விளக்கு வசதி, கழிப்பறை, ஆம்புலன்ஸ், அவசர தொலைபேசி, அவசர சிகிச்சை என முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருப்பதுதான் சாலை பராமரிப்பு.
ஆனால் சாலையையே பராமரிப்பதும் இல்லை என்கிற போது வேறு அடிப்படை வசதிகளை எங்கே செய்யப் போகிறார்கள்.. அதே நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்களாக ஆங்காங்கே சுங்க கட்டணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்..
வெளிநாடுகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டுதான் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாக நாங்களும் செய்கிறோம் பாருங்கள் என்று கூறிக் கொண்டு பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்கவில்லை இந்த சுங்கக் கட்டண கொள்ளை கும்பல்
தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும் 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சுங்க சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன் பின்னர் செப்டம்பர் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டன.
தற்போது 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 18 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தங்க நாற்கர சாலை என்ற பெயரில் நாடு முழுவதும் 4 வழிச்சாலைகளைத்தான் மத்திய அரசு அமைத்தது. தற்போது கூடுதல் 2 வழிச் சாலைகளை அமைத்திருக்கிறோம்.. ஆகையால் கூடுதல் கட்டணம் தாருங்கள் என்கிறார்கள்..
4 வழிச் சாலையை போட்ட மத்திய அரசால் குறைந்தபட்சம் கூடுதலாக 2 சாலைகளை போட்டுவிட முடியாமல் எப்படிப் போகும்? அப்படியானால் இதுவரை மத்திய அரசு வசூலித்த சுங்கக் கட்டணத்தை என்ன செய்தது மத்திய அரசு?
தங்க நாற்கர சாலைகள் அமைக்கும் போது பராமரிக்கத்தான் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறோம் என்றது மத்திய அரசு... அப்படியானால் இதுவரையில் வசூலிக்கப்பட்டது எத்தனை லட்சம் கோடி ரூபாய்? செலவழிக்கப்பட்டது எவ்வளவு? எதற்காக? என்ற புள்ளி விவரம் மத்திய அரசிடம் இருக்கிறதா? இது தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட மத்திய அரசு தயாரா?
இந்த சுங்கச் சாவடி என்பதே ஒட்டுமொத்தமாக ஒரு சில தனியார் கும்பல் கொள்ளை லாபம் பார்ப்பதற்குதான்.. ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ5 ஆயிரம் கோடி அளவுக்கு சுங்கக் கட்டணம் என்ற பெயரில் தனியார் கும்பல் அப்பாவி ஏழை எளிய கிராம மக்களிடம் இருந்து பகல் கொள்ளையடித்து செல்ல மட்டுமேதான்..
இந்த வழிப்பறிக் கொள்யைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் தொடரும் இந்த பகல் கொள்ளைக்கு இறுதி முடிவு கட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரும் 10-ந் தேதி காலை 10 மணிக்கு "முற்றுகையிடும்" போராட்டத்தை நடத்த உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்