புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

தூய நீருக்கான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது



 
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் நேரடியாக சென்று தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் நடைபெற்ற நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுநரும், அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர் மாசடைதல் தொடர்பாக போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனை அடுத்தே உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரைப் பருக வேண்டாம் என்றும், அறிக்கையை ஆராய்ந்து ஒரு கிழமைக்குள் முடிவை அறிவிப்பதாகவும், மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தூய நீருக்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் ஆளுநர் மற்றும், அரச அதிபர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இதற்கு முன்னர் இன்று வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரிடமிருந்து சாதகமான கடிதம் ஒன்று சற்றுமுன்னர் போராட்டக்காரர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் போராட்டக்காரர்கள் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எதுவும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும், அதன் காரணமாக அந்தக் கடிதத்தைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு முதல்வரிடம் வாக்குவாதப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
யாழ்.தூய நீருக்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நேரில் கலந்துரையாடச் சென்றிருந்த நிலையில், முதலமைச்சர் விடுத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் தூய குடிநீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என முதலிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் மாலை குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நல்லூர் சுற்றாடலில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் உண்ணாவிரதிகளுடன் நேரில் பேசுவதற்குச் சென்றிருந்தனர்.
இதன்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பேசிய சம்பவம் சற்று முன்னர் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உண்ணாவிரதிகளிடம் 12ம் திகதி வரையில் கால அவகாசம் கொடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கேட்டனர்.
ஆனால் அவ்வாறில்லை நாங்கள் உண்ணாவிரதம் இருப்போம். வடமாகாண சபையையும், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் நம்பி நாங்கள் ஏமாந்து விட்டோம் என முதலமைச்சரிடமும் ஏனைய அமைச்சர்களிடமும் வாக்குவாதப்பட்டனர்..
இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருக்கின்றனர்.
இதேவேளை நாளைய தினம் காலை இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாருங்கள் என முதலமைச்சர் விடுத்த அழைப்பையும் உண்ணாவிரதிகள்  நிராகரித்தனர்.

ad

ad