புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

ஜெயலலிதா வழக்கு! தீர்ப்பு மே 5ம் திகதி! கோட்டையா? சிறையா

தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் செங்காளியம்மன் கோயில் பிரகாரம் தொடங்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தாழ்வாரம் வரை அம்மாவுக்கு தீர்ப்பு சாதகமாக வந்து விடுமாமே, ஆனா, அந்தத் தீர்ப்பு எப்ப வரும் என்பதுதான் விடாமல் எதிரொலித்துக் கொண்டிருக்கும் கேள்வி.
வழக்கின் கதாநாயகியான ஜெ. வசிக்கும் போயஸ் கார்டனில் ஜோதிடர்களின் கூட்டம் மொய்த்துக் கொண்டு நிற்கிறது.
சோழிகள், பஞ்சாங்கம், ஓலைச்சுவடி என விதவிதமாய் ஜெ. முதல்வராக பதவியேற்க நாள் குறித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா.
அக்கா மறுபடியும் வரட்டும் மினிஸ்டர்னு சொல்லிக்கிட்டு மதிக்காம ஆடுற ஆளுங்களையெல்லாம் ஒரு வழி பண்ணனும்' என எப்பொழுதும் தொலைபேசியில் வழக்கறிஞர்களிடம் சட்ட பாயிண்டுகளை விவாதித்துக் கொண்டிருக்கும் ஜெ. காது படவே சசிகலா சொல்லிக் கொண்டிருக்கிறார் என்கிறது கார்டன் உள் வட்டாரம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு சொல்வதற்கு ஒரே தடையாக இருந்தவர் பேராசிரியர் அன்பழகன்தான். அவர் பவானி சிங்கின் நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த இருவர் பெஞ்சான லோகூர், பானுமதி அடங்கிய பெஞ்ச், பூவா தலையா என டாஸ் போட்ட காயின்... பூவென்றும் தலையென்றும் சொல்லாமல் நட்ட நடு நாயகமாக நின்றபோது, "ஐய்யய்யோ, இனி மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு வழக்கு போகுமே அது விசாரித்து முடிக்க மாதங்களாகுமே' என போயஸ் கார்டனே அதிர்ச்சியில் மூழ்கியது.
அப்படியெல்லாம் நடக்காது. அக்கா அதையெல்லாம் பார்த்துக் கொள்வார்' என சசிகலா சொன்னது போலவே, ஒரேநாளில் அன்பழகன் வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகளை நியமித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து. அவர் நியமித்த தீபக் மிஸ்ரா, பிரபுல் பந்த், அகர்வால் பெஞ்ச் 21-ம் தேதி அன்றே தனது விசாரணையை முழுவீச்சில் தொடங்கி 22-ம் தேதி 11 மணிக்கு முடித்தும் விட்டது.
விசாரணை விவரங்களை லைவ் ஆக சுப்ரீம் கோர்ட்டிலிருந்து கேட்ட ஜெ. ஆரம்பத்தில் ஆபரேஷன் சக்சஸ் என்றார். முடிவை கேட்டதும் அவர் யாருடனும் பேசாத ஒரு நீண்ட மௌனத்தில் ஆழ்ந்தார் என விளக்குகிறார்கள் போயஸ் கார்டனோடு லைவ் டச்சில் இருப்பவர்கள்.
ஜெ.வின் போனை தொடர்பு எல்லைக்கு வெளியே தள்ளும் அளவிற்கு சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடந்தது என கேட்டோம். ""ஜெ. சார்பாக பாலி நாரிமன், கே.டி.எஸ்.துள்சியும் அன்பழகன் சார்பில் அந்தி அர்ஜுனா, விகாஸ் சிங் என இரண்டிரண்டு பேராக சமமாக கோர்ட்டில் மோதினார்கள்.
அதில் கே.டி.எஸ்.துள்சி, பவானிசிங் நியமனம் தவறு என தீர்ப்பளித்த நீதிபதி மதன் லோகூர் கேட்ட கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் "ஆமாம் மைலார்ட் பவானி சிங்கின் நியமனம் தவறு' என்கிற பொருள் படும்படியாக சேம் சைடு கோல் போட்டதில் கடும் அதிருப்தி அடைந்த ஜெ., மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் வழக்கு விசாரணைக்கு வரும்போது நாரிமன், ஹரிஷ் சால்வே, நாகேசுவரராவ் என கோர்ட்டில் தலையை காட்டவே நிமிடத்துக்கு லட்சக்கணக்கில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்களை அனுப்பியிருந்தார்.
தி.மு.க. தரப்பு சீனியர் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனாவையும் சண்முக சுந்தரத்தையும் மட்டுமே நம்பியிருந்தது. கர்நாடக அரசு சார்பில் கோர்ட்டில் அதிர்ந்து கூட பேசாத முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி எம்.என்.ராவை அமர்த்தியிருந்தார்கள்.
21-ம் தேதி நடந்த அமர்வில் எடுத்த உடனே அந்தி அர்ஜுனா பேசத் தொடங்கியதும் "நாங்கள் இந்த வழக்கை பற்றி தெளிவாக படித்து விட்டுதான் வந்திருக்கிறோம்' என்பதை நீதிபதிகள் பேச்சால் உணர்த்தினார்கள். சீனியர் நீதிபதி மிஸ்ரா, பவானிசிங் நியமனம் தவறு என பேராசிரியர் அன்பழகன் எப்படி வழக்கு தொடுக்க முடியும்'' என்றார் சத்தமாக.
அதற்கு பதில் சொன்ன அந்தி அர்ஜுனா 18 வருடங்களாக நடக்கும் இந்த வழக்கில் எப்பொழுதெல்லாம் ஜெ. வின் செல்வாக்கும் பணபலமும் நீதியை தவறாக வழிநடத்தி செல்ல முயல்கிறதோ அப்பொழுதெல்லாம் பேராசிரியர் அன்பழகன் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தலையிட்டு நீதியை நிலைநாட்டி உள்ளார். இதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது'' என்றார் மென்மையாக.
பவானிசிங் கோர்ட்டை தவறாக வழிநடத்தி நீதியின் போக்கை திசைமாற்றினார் என நீங்கள் சொல்லும் வாதம் சரி என்றால் ஜெ.வுக்கு ஜான் மைக்கேல் டி குன்ஹா எப்படி தண்டனை வழங்கினார்'' என நீதிபதிகள் பந்தும் மிஸ்ராவும் சரியான கேள்வியை கேட்டனர்.
இதற்கும் சளைக்காத அந்தி அர்ஜுனா பவானி சிங் தவறாக கோர்ட்டை வழிநடத்துகிறார் என 60,000 ரூபாய் அபராதம் விதித்தார் நீதிபதி குன்ஹா. இந்த அபராதத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார் பவானி சிங்.
சுப்ரீம் கோர்ட் பவானிசிங் குன்ஹாவின் கோர்ட்டில் தவறு செய்யவில்லை என தீர்ப்பு சொல்லவில்லை. மாறாக அவருக்கு குன்ஹா விதித்த அபராத தொகையை மட்டும் குறைத்தது'' என சொன்ன போது அப்படியா? என நீதிபதிகள் ஆச்சரியப்பட்டார்கள்.
ஜெ. நகைகளை கோர்ட்டின் கஸ்டடியில் எடுக்க நீதிபதி குன்ஹா முயற்சி எடுத்தபோது அதை ஜெ. எதிர்த்தார். அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பவானி சிங் மௌனம் காத்தார். ஜெ.வுக்கு ஜாமீன் வழங்க தடையேதும் இல்லை என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பவானிசிங் சொல்லியுள்ளார்.
குற்றவாளிக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் இப்படி பேசுவது ஆச்சரியமளிக் கிறது' என கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் சந்திரசேகரா தனது தீர்ப்பில் எழுதியதை அந்தி அர்ஜுனா படித்தபோது டென்ஷனான நீதிபதி தீபக் மிஸ்ரா இப்படியெல்லாம் ஒரு அரசு சிறப்பு வழக்கறிஞர் முறைகேடாக செயல்பட முடியுமா?
குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர்கள் செயல்பட்டால் பொதுமக்கள் நீதித் துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்து போகாதா?' எனக் கேட்டபோது ஜெ. வழக்கறிஞர்களான நாரிமனும் ஹரிஷ் சால்வேயும் அதிர்ந்து போனார்கள்.
பிறகு சுதாரித்துக் கொண்ட நாரிமன் பவானி சிங்கின் நடத்தை என்பது வேறு அவரது நியமனம் என்பது வேறு. அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜரானது தவறு என்றுதான் அன்பழகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க தேதியை ஒத்தி வைத்துள்ளது.
சில தவறுகள் சில தேவையின் அடிப்படையில் சரி என்றாகிவிடும். பவானிசிங் தமிழக அரசு அதிகாரத்தின் அடிப்படையில் ஆஜரானது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 301 மற்றும் 24(8) அடிப்படையில் சரிதான்'' என்றார் ஓங்கிய குரலில்.
இதை ஏற்றுக்கொண்டு விசாரணையின் போது அதுவரை குறுக்கிடாமல் இருந்த மூன்றாவது நீதிபதி அகர்வால் ஒரு வழக்கு அது எந்த கோர்ட்டில் நடந்தாலும் அதன் சாராம்சம் மாறாது அல்லவா'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அந்தி அர்ஜுனா செக்ஷன் 301-ம் செக்ஷன் 24(8)ம் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் எந்த கோர்ட்டிலும் ஆஜராக எழுத்து பூர்வமான தனி அனுமதி தேவையில்லை என சொல்கின்றன.
அதே நேரம் 24 (1) பிரிவு "ஒவ்வொரு அரசு வழக்கறிஞரும் அந்தந்த நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் அனுமதியுடன்தான் நியமிக்கப்பட வேண்டும் என சொல்கிறது'' என்றார். உடனே குறுக்கிட்ட நீதிபதி மிஸ்ரா, இந்த வழக்கே செக்ஷன் 24(1) பிரிவு மற்றதை விட அதிக அதிகாரம் கொண்டதா? என்பதை தீர்மானிக்கும் வழக்கு'' என்று சொன்னதோடு, நீதிபதி அகர்வாலிடம் தனிப்பட்ட முறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறை பற்றி விளக்கிச் சொன்னார்.
அடுத்த நாள் 22-ம் தேதி சசிகலா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவுடன் அந்தி அர்ஜுனா, எம்.என்.ராவ் ஆகியோர் அரை மணி நேரம் வாதிடுவதை கேட்ட நீதிபதிகள் பவானிசிங் நியமனம் சட்ட விரோதம். ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றம் 45 நாட்கள் விசாரணையை நடத்தி முடித்துவிட்டது.
மீண்டும் ஜெ. அப்பீல் வழக்கை மற்றொரு அரசு வழக்கறிஞர் மூலம் மறு விசாரணை நடத்தினால் கோர்ட் நேரம் விரயமாகும். எனவே நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க அனுமதிக்கிறோம். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதேநேரம் பேராசிரியர் அன்பழகன் தரப்பு கொடுக்கும் எழுத்துப்பூர்வமான வாதத்தை கவனமாக பரிசீலிக்க வேண்டும்'' என்றனர்.
22-ம் தேதி இந்த தீர்ப்பு வந்த உணவு இடைவெளி நேரத்தில் நீதிபதி குமாரசாமியை காண அவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கோர்ட் டுக்கு வந்திருந்தார். மகளுடன் உணவு சாப்பிட்டு விட்டு தீர்ப்பை எழுத ஆரம்பித்தார் குமாரசாமி.
புதிய அரசு வழக்கறிஞர், மீண்டும் விசாரணை என சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்திருந்தால் "நான் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என தலைமை நீதிபதி வகேலாவுக்கு கடிதம் எழுத தயாராக இருந்தார் நீதிபதி குமாரசாமி. தற்பொழுது சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடுவான மே, 12ம் தேதியை நீட்டிக்கும் படி அவர் கேட்க மாட்டார்.
அவருக்கு மிகவும் பிடித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவர் அளித்த பல தீர்ப்புகளில் அம்பேத்கரின் வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜெ. வழக்கு விசாரணையை மேற்கொண்ட பிறகு அதிகாலை வாக்கிங்கை தவிர வெளி நடவடிக்கைகளை குறைத்துக் கொண்ட குமாரசாமி மே-5-ம் தேதி தீர்ப்பு அளிப்பார் என்கிறது கர்நாடகா உயர்நீதிமன்ற அலுவலக வட்டாரம்.
சமீபத்தில் மாற்றப்பட்ட கர்நாடக தலைமை நீதிபதி வகேலா, நீதிபதி மஞ்சுநாதாவின் ஓய்வு பெறும் விழாவில் பேசும்போது, தனக்கு பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய சட்டத்துறையினரிடம் போன பைல் பத்து மாதமாக கிடப்பில் போடப்பட்டதாக மஞ்சுநாதா வருத்தப்பட்டு பேசினார்.
இப்படி நீதிபதிகளுக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் எங்கே போய் முறையிடுவது'' எனப் பேசியபோது நீதிபதி குமாரசாமியும் அங்கு இருந்தார்.
மீண்டும் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்று கோட்டைக்கு போவாரா? அல்லது பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்வாரா என்பது மே-5ம் தேதி தெரிந்துவிடும்.

ad

ad