புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2015

வடக்கு மாகாண கூட்டுறவு மீண்டும் மிடுக்குடன் மிளிர 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பம்
வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தில்  பாரிய வளர்ச்சியினை கொண்டுவரும் நோக்குடன்  வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் 100 நாள்
வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பொ. ஐங்கரநேசன்  தெரிவித்தார்.

வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சினால்  ஏற்பாடு செய்யப்பட்ட மே தின ஊர்வலம் ஒன்று நல்லூர்  கிட்டுப்பூங்காவில் இருந்து ஆரம்பித்து வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்தது. அங்கு மே தின நிகழ்வுகள்  இடம்பெற்றன. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே மேற்கண்ட அறிவிப்பினை அமைச்சர் விடுத்தார்.

மேலும் அவர் உரையாற்றியதாவது,

1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மாபெரும்  மே தின ஊர்வலத்தின் பின்னர்  இம்முறை நடைபெற்ற  மே  தினமே  அதிக பொதுமக்கள் மற்றும்  ஊர்திகள் பங்குபற்றியதாகும்.

இந்த ஊர்வலமும்  நிகழ்வுகளும் கூட்டுறவாளர்களையும்  தொழிலாளர்களையும்  முன்னிலைப்படுத்துவதே தவிர எந்த விதமான கட்சி கலப்புக்களும்  இல்லை .  கடந்த காலத்தில் நிலவிய அசாதாரண சூழலில் கூட்டுறவுத்துறை மிகவும்  நலிவடைந்துள்ளது.

எனினும் நலிவடைந்துள்ள இந்த கூட்டுறவுத்துறையினை வளர்க்க வேண்டிய தேவை அனைவருக்கும்  உண்டு.  எனவே மத்திய அரசின் தலையீடு அற்ற கூட்டுறவு சபையில் உள்ள பிரச்சினைகள் மற்றும்  பணியாளர்களது பிரச்சினைகளை அறிந்து அதற்கு ஏற்ப நாங்கள் செயற்பட  வேண்டும்.

அத்துடன் கூட்டுறவுதுறையின் ஊடாக பல நன்மைகளை அடையக்கூடியதாக இருக்கின்றது. எனவே நலிவடைந்த கூட்டுறவுத்துறையை வளர்க்க பாடுபட வேண்டும்.

அத்துடன்  கூட்டுறவுக்கு  போர் மட்டும்  காரணமாகிவிட முடியாது. அதனையே கூறிக் கொண்டு இருப்போம் ஆனால் கூட்டுறவுத்துறை மேலும்  வளர்ச்சியடைய வாய்ப்பில்லை.

நாங்கள்  இன்றும்  பாரம்பரிய முறைகளையே பயன்படுத்தி  வருகின்றோம். ஆனால் தனியார் துறைகளின்  ஊடாக பாரிய போட்டி நிறைந்ததாக  காணப்படுகின்றது . இன்று நவீனத்துவத்தை பயன்படுத்தகின்றனர். எனவே நாமும்  பாரம்பரியத்துடன் நவீனத்துவத்தையும் கூட்டுறவுக்குள் புகுத்த வேண்டும்.

மேலும் கூட்டுறவுத்துறையில் இடம்பெற்ற ஆய்வின் படி வயதானவர்களே அதிகம்  பணியாற்றி வருகின்றனர். அதனால் அனுபவம்  மிகவும் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். எனினும் இளைஞர்களும் கூட்டுறவுக்குள் இணைத்து அனுபவத்துடன்  வீரியம் மிக்க இளைஞர் சக்தி ஒன்றம் உருவாக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் 3ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழத்தை முடித்துவிட்டு வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளனர். இவர்களது போராட்டம்  இரண்டு நாளாக நடைபெற்றது. இவர்களை வடக்கு மாகாண சபையின்  கீழ் வருகின்ற திணைக்களங்களுக்குள் உள்வாங்க முடியும்.

அத்துடன்  முன்னாள்  போராளிகள்  ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். இதற்கு போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டதனால் அவர்களிடம் கல்விச் சான்றிதழ்கள் போதுமானதாக இல்லை.

எனவே பட்டதாரிகள்  மற்றும்  முன்னாள்  போராளிகளுக்கு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பினை வழங்க முடியும் . எனவே கூட்டுறவுத்துறையில் உள்ள பிரச்சினைகள், வளர்ச்சி, நியதிச்சட்டம்  என்பனவற்றை சரிவரச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரியின் 100 நாள்  வேலைத்திட்டம் போன்று கூட்டுறவு அமைச்சினாலும் 100நாள்  செயற்றிட்டம் ஒன்று எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல்  ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில்  நியதிச்சட்டமும் நிறைவேற்றப்படும். பண்டைய பாரம்பரியத்திலிருந்து விலகி போட்டித்தன்மையின்  காரணத்தினால் நவீனத்துக்கு மாறி மீண்டும் மிடுக்குடன் வட மாகாண கூட்டுறவு மிளிரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad