புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 மே, 2015

கிளிநொச்சியில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத்தால் தமிழ் தேசிய மேநாள் தருமபுரத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
சிறப்பு மஞ்சள் ஆடை அணிந்து திரண்ட தொழிலாளர்களும் தமிழ் தேசிய ஆதரவாளர்களும் தருமபுரம் மகா வித்தியாலயத்தின் முன்பாக இருந்து அணிவகுத்து ஊர்வலமாக வந்து சிறப்பாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் ஒன்று கூடினர்.
அங்கு பொதுசுடர் ஏற்றி மண்ணில் விதைந்த மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அகவணக்கம் செலுத்தி, தொழிலாளர் பெருமைகளையும் மண்ணின் அர்ப்பணிப்புக்களையும் எமது மண்ணின் மக்களின் தீராத் தாகத்தையும் பறைசாற்றி உரைகளை நிகழ்த்தியதுடன் பிரகடனத்தையும் வெளியிட்டனர்.
இந்த நிகழ்வுகள் கரைச்சி வடக்கு ப.நோக்கு.கூட்டுறவு முன்னாள் நெறியாளர் குழு உறுப்பினரும் தர்மபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவருமான சி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரையை கரைச்சி பிரதேசபை உறுப்பினர் புஸ்பராசாவும் பிரகடனத்தை கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணித்தலைவர் சுரேனும் நிகழ்தினர்.
உரைகளை பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், வினோநோகராதலிங்கம், வடக்கு மாகாணசபை அமைச்சர் த.குருகுலராசா, மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், மக்கள் மன்றத்தின் சார்பில் சி.கந்தசாமி, கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சியின் செயலாளர் மா.சிவபாலன், திருமதி.விக்டர்சாந்தி, பூநகரி பிரதேச கட்சி அமைப்பாளர் சிறீரஞ்சன், மாவட்ட கட்சி அமைப்பாளர் வேழமாலிகிதன், ஆகியோர் நிகழ்த்த, நன்றியுரையை கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தவபாலன் நிகழ்த்தினார்.
கிளிநொச்சி மாவட்டம் தழுவிய ரீதியில் தருமபுரத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய மேநாள் நிகழ்வில் தருமபுரம் வர்த்தகப் பெருமக்கள், கூட்டுறவுத்துறையை சார்ந்தவர்கள், விவசாய அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இங்கு விடுக்கப்பட்ட மேநாள் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு.
மே தின பிரகடனம் - 2015
இன்று மேநாள் ஒடுக்குமுறைக்குட்பட்ட உலகளாவிய தொழிலாளர் சமூகம் ஒன்றிணைந்து தமது உரிமைகளிற்காக போராடி வெற்றிபெற்ற பொன் நாள் முதலாளித்து வஎண்ணங்களினாலும் அதிகார ஆசைகளினாலும் ஆட்பட்டிருந்தார்கள்.
உழைப்பளர்களின் உழைப்பையும் ,உழைப்பினால் பெறப்பட்ட உயர்வுகளையும் இழந்துநின்ற போது சிந்திக்க தலைப்பட்டார்கள். அவர்களின் அத்தகைய சுதந்திர சிந்தனையின் பரிமானம் தான் அவர்கள் உலகளாவிய ரீதியில் இன்று பெற்றிருக்கின்ற வாய்ப்புக்களின் பேறாகும். 
சர்வதேச சமவாயங்களும்,தொழில் வழங்குனர்களும், தொழில்சார் வர்த்தகர்களும் இன்றுபலத்தோடும், வளத்தோடும் சர்வதேச அளவில் திகழ்வதற்கு ஒடுக்கப்பட்ட தொழிலாளர் எழுப்பிய மானிட விடுதலைக்கான குரலே அடிப்படையாக அமைந்தது என்பதே வரலாறு ஆகும்.
இலங்கைத்தீவிலும் குறிப்பாக தமிழ் சமூகம் வடக்கு, கிழக்கில் அவர்களுக்கே உரித்தான தாயக பூமியில் அன்று சர்வதேச அளவில் போராட்ட தொழில்சார் உரிமைகளிற்காகவும், வாழ்வு நிலைக்காகவும் போராடி வருகின்றனர். 
அதுமட்டும் அல்லாமல் இலங்கைத்தீவில் தொழிலாளர்களது உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பல போராட்டங்களை தமிழர்களே முன்னின்று நடாத்தியிருக்கின்றனர்.
இப் போராட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிய தொழிலாளர் தோழர் கந்தசாமியை மறக்க முடியாது. அப்படிப்பட்டவர்களினது தியாகத்தினால்தான் இன்று தொழிற்சாலைகளும், தொழில் சட்டங்களும் உருவாகியுள்ளன.
இடதுசாரிகளின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் தமிழர்கள் பல்வேறு வகையில் தோள்கொடுத்து உதவியுள்ளனர். ஆனால் இந்ததேசத்திலே மிகப்பெரிய ஒடுக்குமுறையாக தமிழ் தேசிய இனம் ஓடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றபோது அதற்கு எதிரான எத்தனை தொழில்சங்கவாதிகளும், சோசலிசவாதிகளும், குரல் கொடுத்து போராடுகின்றனர். என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
உண்மையான ஒடுக்கு முறைக்கு எதிராக நியாயத்திற்கு குரல் கொடுப்பவர்களாக தொழிற்சங்கவாதிகளும், சோசலிசவாதிகளும் இருப்பார்களானால் இந்தநாட்டிலயே கொழுந்துவிட்டு எரியும் தமிழ் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஏன் குரல் கொடுக்க தயங்குகின்றனர்?
அரச பயங்கரவாதத்திற்கும், பேரினவாதத்திற்கும் துணைபோகின்ற ஊதுகுழல்களாகவல்லவா திகழ்கின்றனர். இந்தசெயற்பாட்டை தொழிலாளர் தினமாகிய இன்றையதினம் ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனமாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழ்த் தேசிய மேநாள் கொள்கைப் பிரகடனம் - 2015 வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசும் தொழிலாளர்களினுடைய தொழில், உரிமை, தொழில், பாதுகாப்பு என்பவற்றை நிரந்தரமாக உறுதிப்படுத்தவும், அவர்கள் செந்தமண்ணில் நிரந்தரமாக தொழில்புரிந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலும் பூரண சுதந்திரத்தில் உரிமை உள்ளவர்கள் என்று உணரக்கூடிய வகையில் வடக்கு, கிழக்கு தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகளினுடைய மாநில சுயாட்சியை உருவாக்குமாறு இம் மேதின நன் நாளில் அறைகூவல் விடுகின்றோம்.
தமிழர் தாயகத்தில் பல்வேறு தொழிற்தளங்களும், தொழிலாளர்களும் முடக்கப்பட்ட வகையிலும் தமிழர்களின் தேசிய வருவாயையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கின்ற வகையிலும் சுதந்திரமான வாழ்வியலை பாதிக்கின்ற வகையிலுமாக ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசிய மேநாள் அறைகூவல் விடுகின்றது.
சிறப்பாக தமிழர்களின் வாழ்வாதார அடிப்படைகளாக விளங்குகின்ற விவசாய விளைநிலங்கள் பெருந்தோட்டங்கள், அரச, தனியார் விவசாய பண்ணைகள் ஆகியவற்றிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி தமிழ் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்தல்.
தமிழரின் தாயக பகுதியில் ஏற்கனவே இயங்கியபாரிய இடைத்தர கைத்தொழில் சாலைகளை மீளவும் ஆரம்பித்து தேசிய வருவாயில் அதன் பங்களிப்பினை மிளிரச்செய்தல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களை இராணுவ நிர்வாகத்தின் கீழ் இருந்து விடுவித்து கல்வி நிர்வாகத்தின்கீழ் நிரந்தர நியமனமும் போதிய சம்பளமும் வழங்கி ஆசிரிய சேவையினை கௌரவபடுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கூறுகின்றது.
எமது மண்ணில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமான வகையில் தென்னிலங்கை மீனவர்களினாலும், இந்திய மீனவர்களினாலும் ஏற்படுத்தப்பட்ட அசௌகரியங்களை நீக்கி அவர்களின் தொழிற் பாதுகாப்பினை உறுதிசெய்ய இவ் மே நாள் அறைகூவல் விடுகின்றது.
எங்களுடைய பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள கைத்தொழிற்சாலைகள் தனியார் நிறுவனங்கள் வர்த்தக கூட்டுறவு தாபனங்களில் பணிபுரிகின்ற பெண் தொழிலாளர்களின் ஆற்றலை மனதில் கொண்டு  சமமான ஊதியம் வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
வடக்கில் உள்ள பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க கட்டமைப்பினை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதற்கும் விஸ்தரித்து அத்தொழிலாளர்களினுடைய பொருளாதார கலாசார சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை அரசியல் நோக்கத்திற்கு அப்பால் உண்மையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரகடனப்படுத்துகின்றோம்.
தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர் சேமலாபநிதி,ஊழியர் நம்பிக்கைநிதிபோன்றவற்றைகட்டாயம்அமுல்படுத்தவேண்டுமென்றுசட்டங்கள் இயற்றப்பட்டிருந்தும் இதுவரையும் சரியானமுறையில் அமுல்படுத்தாமைதெரியவருகின்றது. எனவேகட்டாயமாகநடைமுறைப்படுத்தவேண்டுமென்று இவ் மேநாளில் அறைகூவல் விடுகின்றோம்.