புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2015

80 இலட்சம் தனியார் துறையினருக்கு 15ஆம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு இளைஞர், யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பு


ஐ.தே.க மேதினக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடுத்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை அங்கத்தவர்கள் கொண்ட கட்சியாக மாற்றியமைக்க வேண்டுமென்றும் சுபீட்சமான எதிர்காலத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேதின கூட்டத்தில் தெரிவித்தார்.
சிறுபான்மை அரசாங்கத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு குறுங்கால நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதைப் போன்று நீண்டகால நிவாரணங்களைப் பெற வேண்டுமானால் அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்ட கட்சியாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் கொழும்பு கெம்பல்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. “உழைப்பின் சக்திக்கு பச்சை விளக்கு” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து வருகை தந்த ஐக்கிய தேசியக்கட்சி செயற் பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் கொழும்பு பஞ்சிகாவத்தை முச்சந்தியில் இருந்து நடைபவனியாக கொழும்பு கெம்பல் பார்க்கை வந்தடைந்தார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
நாம் நாட்டின் சக்தியையும் ஐக்கிய தேசியக்கட்சியின் சக்தியையும் இன்று காட்டியுள்ளோம். 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற மேதினக் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டமாக இதனைப் பார்க்க வேண்டி யுள்ளது. அந்தளவு மக்கள் இன்று வருகை தந்துள்ளமை எமது சக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நாம் இன்று அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் பணத்தை செலுத்தியே பயன்படுத்துகிறோம். அவ்வாறே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கும் நாம் அரச வளங் களை பணம் வழங்கி பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம்.
நாம் இன்று புதிய யுகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமராகவும் இருக்கிறார். இதுவே புதிய பயணமாகும்.
அன்று எனக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்து வந்தார்கள். 2015ஆம் ஆண்டில் நாம் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், சிலர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அதனை மாற்றியமைத்து காட்டினோம்.
ராஜபக்ஷ ஏகாதிபத்தியவாதத்தை தோற்கடித்துள்ளோம். இன்று சகலரும் மன தைரியத்துடன் இருக்கிறார்கள். இன்று பயமில்லாமல் வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட்டுள்ளது.
இறப்பர், நெல் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 12ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் தனியார் துறையின் சம்பளத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக உயர்த்தப்பட உள்ள தனியார் துறையின் சம்பளம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 1500 ரூபா சம்பள அதிகரிப்பும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பும் செய்யப்பட உள்ளது.
நாம் 100 நாட்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியது போன்று அடுத்த ஐந்தாண்டில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறே இளைஞர், யுவதிகளின் தொழில் பிரச்சினைக்கு தீர்வினை காண வேண்டுமானால் 10இலட்சம் தொழில்வாய்ப்பை உருவாக்க உள்ளோம்.
இந்த அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு பல கட்சிகள் எமக்கு உறுதுணை புரிந்தன. ஆனால், இதில் பெரும்பகுதியை ஐக்கிய தேசியக்கட்சியே ஏற்றுக் கொண்டது. ஆகவே, சிறுபான்மை அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றிய வாக்குறுதிகள் எதிர்கால சந்ததியினரை இலக்காக கொண்டு செயற்பட வேண்டுமானால் அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மை அரசாங்கமாக இருக்க வேண்டும்.
ஆகவே, அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட அரசாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை உங்கள் முன்வைக்கிறேன் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
6 பிரேரணைகள்
ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டத்தில் 6 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
இதில், 2015ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தில் 13 அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, டீசல், பெற்றோல், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைக்குறைப்புக்கு அரசாங்கத்திற்கு நன்றி கூறி பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அவ்வாறே, அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பில் ஒரு தொகையை அடிப்படை சம்பளத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென இரண்டாவதாக பிரேரணை செய்யப்பட்டது.
அரச நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் அமைய, நாளாந்த அடிப்படையில் தொழில் புரிபவர்களை தகுதியின் அடிப்படையில் நிரந்தரமாக்க வேண்டுமென்ற யோசனை முன் வைக்கப்பட்டது.
நான்காவதாக, தனியார் துறை ஊழியர்களான 80இலட்சம் பேரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க வேண்டுமெனவும் பிரேரணை முன் வைக்கப்பட்டது.
அவ்வாறே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வீடுகள், காணிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் வயது எல்லையை 60 ஆக மாற்ற வேண்டுமெனவும் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இதனை உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரேரணையை முன்வைத்ததுடன் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் வழிமொழிந்தார்.

ad

ad