புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2015

மாணவியின் கொலைக்கு எதிராக வீறுகொண்ட மக்கள் எழுச்சி


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.குடாநாடு முழுவதும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் நடந்தேறின. இதனால் யாழ்.குடாநாடு முற்றுமுழுதாக ஸ்தம்பிதம் அடைந்தது.
மாணவி வித்தியாவை கோரமான முறையில் கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதைக் கோரிக்கையாக முன்வைத்து நேற்றும் நேற்று முன்தினமும் இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றிருந்தன.
மேற்குறித்த ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள், கடையடைப்புகளில் மக்கள் உணர்வு பூர்வமாக ஈடுபட்டிருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
எனினும் ஆர்ப்பாட்டப் போராட்டத்தின் இறுதி வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியமை உணர்வு பூர்வமான எழுச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தியதென்றே கூறவேண்டும்.
உண்மையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போதும் கடையடைப்பின் போதும் பொலிஸார் கெளரவமாக நடந்து கொண்டனர். சமூகத்தில் நடந்த ஓர் அநீதிக்கு எதிராக நடக்கக்கூடிய மக்களின் எதிர்ப்பு-கொந்தளிப்பு நியாயமானது என்பதைப் பொலிஸார் ஏற்றுக் கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
எனினும் துரதிர்ஷ்டவசமாக பொலிஸார் மீதும் நீதிமன்றத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமை மக்கள் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியை முடக்குவதாக அமைந்துவிடும்.
எதுவாயினும் புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு நடந்த கொடூரம் உலகில் எந்த நாட்டில் நடந்திருந்தாலும் யாழ்.குடாநாட்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை விட பல மடங்கு கூடுதலான களேபரங்களே வெடித்திருக்கும்.
அதேசமயம் பொதுமக்களுக்கு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் வழங்கிய உத்தரவாதங்கள் ஒழுங்கான முறையில் நிறைவேற்றப்படாமையும் ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறுகின்ற சூழமைவை தோற்றுவித்தது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்தை பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கட்டாயமாக நிறைவேற்றியிருக்கவேண்டும். குற்றவாளிகளை எங்களிடம் தாருங்கள் என்று பொதுமக்கள் கேட்பதற்குள் பொலிஸார் மீதான, சட்டத்தின் மீதான நம்பிக்கையீனங்கள் தெரிவதை உணரமுடியும்.
நிலைமை இதுவாக இருக்கும் போது பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் உத்தரவாதத்தை நம்பி ஒரு சுமுகமான நிலைமைக்கு இடம்கொடுத்த பொதுமக்களை ஏமாற்றுகின்றவாறு செயற்பட்டமை பொலிஸ் மீதான நம்பிக்கையீனங்களை மேலும் வலுப்படுத்துவதாக இருந்தது. இதன் காரணமாகவும் வன்முறைகள் ஏற்படுவதற்கு ஏதுவாயிற்று.
எப்படியாயினும் வன்முறையைத் தூண்டியவர்கள் தப்பி ஓட, அகிம்சை வழியில் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்த அப்பாவிகள் கைதாகின்ற சாத்தியங்களே அதிகம் என்பதால், நிரபராதிகள் பாதிப்படையக் கூடாது என்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.
அதேசமயம் கலவரத்தை அடக்கிய பொலிஸார் அதன் பின்னர் பொதுமக்களின் மோட்டார் சைக்கிள்களை வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றமை ஒரு அழகுபட்ட செயலாகத் தெரியவில்லை.
எதுவாயினும் மாணவி வித்தியாவின் கொலை மக்களை ஆத்திரமடையச் செய்யக்கூடிய சம்பவம் என்பதால்; நேற்றைய தினம் யாழ்.குடாநாட்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் இனிமேல் இந்த மண்ணில் எந்த வன்மங்களும் கொலைகளும் சமூக அநீதிகளும் இடம்பெறாமல் பாதுகாக்கின்ற கவசமாக அமையட்டும்.
மக்களின் எழுச்சியை அவ்வாறானதொரு கோணத்தில் பார்ப்பது சட்டத்தை நிலைநாட்டுபவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

ad

ad