புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2015

வித்தியா மீதொரு சத்தியம் செய்யுங்கள் மாணவர்களே !


வித்தியா மீதொரு சத்தியம் செய்யுங்கள் மாணவர்களே... குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவோம் என.
மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை உண்மையாக்குங்கள். மாணவர்களே குற்றவாளிகளை தண்டிக்கும் சக்தி உங்கள் கைகளிலேயே! எனவே இன்றே ஒன்று சேருங்கள்.
நாட்டில் குற்றங்கள் புரிபவர்கள் தப்பிக்கும் இலகுவான ஓட்டைகள் சட்டத்தில் இருப்பதனால் அல்லது ஓட்டைகளை தேடிக் கண்டு பிடித்துக்கொள்வதனால் குற்றவாளிகளை தப்பிக்க வைத்து மீண்டும் இன்னொரு வித்தியாவை இரையாக்க நினைக்கின்றனர் பலர்.
இவற்றுக்கு எதிராக சரியான சக்தியாக திரண்டு எழவேண்டியது மாணவர்கள் சக்தியாக தான் இருக்க முடியும். மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பார்கள். காமவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்காக ஒரு ஊரே திரண்டு மேற்கொண்டு கேட்கும் நீதிக்கு பக்கபலமாக மாணவர் சமுதாயமே நீங்களே முன்வர வேண்டும்.
ஆனால் மாணவர்களின் போராட்டங்களை குழப்புவதற்கும், அவர்களின் கல்வியை சிதைப்பதற்கும் இன்று பலர் கங்ஙனம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். இதை முறியடிக்கும் முகமாக ஒன்றிணைந்து செயற்படுங்கள் மாணவர்களே.
அன்பான மாணவர்களே சிந்தியுங்கள். நீங்களே நாட்டின் நாளைய கல்விமான்கள்.
காரைநகரில் ஒரு குழந்தை கடற்படையினரால் சிதைக்கப்பட்டாள், அதற்கு நீதி கிடைத்தா? இதே போல நெடுந்தீவில் இன்னொரு பத்துவயது சிறுமியும் சிதைக்கப்பட்டாள். கடந்த மாதம் கிளிநொச்சியில் இன்னொரு சிறுமி கசக்கி எறியப்பட்டாள், இன்று வித்தியா? நாளையும் இப்படி நடக்க அனுமதிக்க முடியுமா? பாடசாலைக்கு சென்ற மகளோ, சகோதரியோ, நண்பியோ..... வீடு திரும்புவாளா என ஏங்கிக் கொண்டிருக்கும் காலத்தை ஏற்படுத்தாதீர்கள்.
நம் நாட்டில் நமது சொந்த ஊரில் பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டுமெனில் மாணவர்களே நீங்கள் தான் அதற்கு வழியேற்படுத்தி கொடுக்க முடியும்.
இதற்கு எதிராக பாடசாலை மாணவர்கள் அத்தனை பேரும் வீதியில் இறங்கி போராட்டத்தினை நடத்த வேண்டும்.
பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் அனைத்து பாடசாலை மாணவச் செல்வங்களுக்கும் அன்பான தயவான ஓர் வேண்டுகோள்.
இன்று தனித்தனியாக நடைபெறும் பாடசாலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டமாக மாற்றம் பெற வேண்டும். உங்களால் மட்டுமே இக் குற்றவாளிகளுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
இவ்வாறு பாடசாலைப் பெண்களைக் கசக்கும் காம வெறியர்களை குறைந்த பட்ச தண்டனையோடு நாட்டில் வாழ வழி ஏற்படுத்திக்கொடுக்க விடாது இவ்வாறானவர்களை இன்றே மக்கள் முன்னிறுத்தி தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவர்களுக்கு வழங்கும் தண்டனை, இவ்வாறு இன்னும் நம் சமுதாயத்தில் வெளிவராமல் இருக்கும் காம வெறியர்களுக்கு ஒரு பாடமாக இருத்தல் வேண்டும். வித்தியா வழக்கில் கைதான அனைவரும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையைப் பார்த்து இக்குரூர புத்திகொண்டவர்கள் திருந்த வேண்டும்.
எனவே மாணவர்களே, ஏனைய அமைப்புக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை விட பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களாலே இதற்கொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். மாணவ தலைவர்களே இதனை ஒழுங்கமைத்து இன்னும் இந்த போராட்டத்தினை ஜனநாயக தன்மையோடு மேற்கொண்டு இக்கயவர்களுக்கு தக்க தண்டனையை சட்டரீதியாக வழங்குங்கள்.
இன்று போராட்டங்களை திசை திருப்புவதற்கான இன்னொரு காரியத்தினையும் யாரோ ஒரு தீய சக்திகள் முன்னின்று செயற்படுத்துகின்றன என்பது உண்மையாகிவிட்டது. யாழ் நீதிமன்றத்திற்கு கற்களால் வீசியும், அடாவடித்தனத்திலும் ஈடுபட்டமையானது இந்த மக்கள் போராட்டதை நிறுத்தும் செயல் என்பதை அப்பட்டமாக உணரமுடிகின்றது.
இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் யார் யார் இவ்வாறான குழப்பக்காரர்கள் என்பதை சரியான முறையில் இனம் கண்டுகொள்ள வேண்டும்.
எனவே போராட்டங்கள் என்பது சரியான வகையில் ஒழுங்கமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். இதைவிடுத்து தனித்தனியே போராட்டங்கள் நடக்குமாயின் அதனை குழப்புவதற்கு இலகுவாகவே சூத்திரதாரர்கள் முயற்சிப்பது இலகுவாக இருக்கும்.
தலைவரின் சிந்தனைப்படி �சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
எனவே மாணவர்களே நம் ஊரில் நம் உறவுகள் பகல் வேளையிலாவது சுதந்திரமாக நடமாட நீங்கள் தான் வழிசமைக்க வேண்டும்.
மாணவ மணிகளே ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள் உங்கள் சகோதரிக்கோ, நண்பிக்கோ இப்படியானதொரு நிலை வந்திருப்பின் என்ன செய்திருப்பீர்கள்.
ஆக, மாணவர்களின் போராட்டங்கள் தான் இங்கு அதிகமானதாக அதிகரிக்க வேண்டும். அது சரியான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் போராட்டங்களை நகர்த்தினால் அது குறித்த இலக்கை நோக்கி நகராது. எனவே ஒன்றிணைந்து இக் கொடூர படுகொலைக்கு நீதி கேட்டு நடக்க ஆரம்பியுங்கள்... ஆசிரியர்களே மாணவர்களுக்கு பக்க பலமாக நீங்களும் ஒன்று சேருங்கள்.
மாணவ மணிகளே மறவாதீர்கள். மாணவ சக்தியே உலகில் மாபெரும் சக்தி. எனவே வித்தியா மீதொரு சத்தியம் செய்யுங்கள். குற்றவாளிகளுக்கு தண்டனையை கொடுத்து அவளின் ஆத்மா சாந்தியடைய.....!
நன்றி
முகில்

ad

ad