புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 மே, 2015

சிக்குமுக்குப்படும் மகிந்த! தந்திரங்கள் விளையாடத் தொடங்கியிருக்கும் அரசியல் களம்!

அனுதாபங்களினூடாக வெற்றியைப் பெற்றுக்கொள்ள மகிந்த ராஜபக்ச முயற்சி செய்வதாக கொழும்பு அரசியல்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியை இழந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்பொழுது மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், தான் வகித்த பதவிகள், அனுபவித்த உல்லாச வாழ்க்கை தனது கனவு, என்பனவற்றை நினைத்து நாளுக்கு நாள் மனம் வெதும்பி புலம்பி வருகின்றார்.
இதனால் தான் தற்பொழுது புதிய அரசாங்கம் தன்னையும் தனது உறவினர்களையும் பழிவாங்கி வருவதாக குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்.
இது ஒரு புறமிருக்க, இழந்தவற்றை மீண்டும் பெற்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இப்பொழுது மகிந்த ராஜபக்ச வித்தியாசமான ஆயுதம் ஒன்றினை கையில் எடுத்திருக்கின்றார்.
அதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டு இருப்பது நாட்டிற்கும், கட்சிக்கும் நல்லதல்ல. எனவே நாம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே அவரின் புதிய உத்தி. அதற்காகவே அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததன் நோக்கம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பலர் இப்பொழுது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இதுவும் மகிந்தவின் தந்திரம் என்றும், தனது கோட்டை தகர்க்கப்பட்டு விட்டதால், எதுவுமே செய்ய முடியாது தவிக்கும் தருணத்தில் இறுதி முயற்சியாகவே அவர் இதனை மேற்கொண்டு வருவதாகவும் இன்னொரு தகவல்கள் வெளிவந்துள்ளன.
எதுவாயினும், தன்னுடைய அதிகார வரம்புகளை இழந்தவர் மீண்டும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும், இதில் பல லட்சம் கோடிகள் இறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், பலருக்கு இப்பொழுதே விலைபேசப்பட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இதேவேளை மைத்திரி, சந்திரிக்கா இணைந்து ரணில் விக்ரமசிங்கவை ஓரம் நட்ட முயற்சிப்பதாகவும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சிதைக்க ரணில் முயற்சி செய்கின்றார். ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி தனது தலைமைத்துவத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தருணம் அவருக்கு இருக்கின்றபடியால் அவர் இருமுனைத்தாக்குதல்களை தொடங்கியிருப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியினை மேற்கோள்காட்டி பிறிதொரு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக இனி நடக்கப்போவது தாம் சார்ந்த இருப்பிடத்தை தக்க வைத்து அரசியல் நடத்துவது என்பதாகும். இதில் வெற்றி பெறப்போவது யார் என்கின்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. இதற்கான விடைகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் அவதானிகள்.