புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2015

யாழ்.வலிகாமம் வடக்கில்25 வருடங்கள் பின்னர் சொந்த மண்ணை பார்க்கும் மக்கள்

யாழ்.வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான ஒருபகுதி நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ளபோதும், மீள்குடியேறும் மக்களுக்கான தற்காலிக வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவையும் வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
25 வருடங்கள் சொந்த மண்ணை பார்க்கும் ஆவலுடன் வாழ்ந்த மக்கள் மீள்குடியேற்றத்தின் பின்னர் பெருமளவில் வந்தபோதும் வீட்டுத்திட்டம், அடிப்படைவசதிகள் மற்றும் கல்வி வசதி கள் இன்மையினால் 90 வீதமான மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்கு தயக்கம் காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
கடந்த 1990ம் ஆண்டு வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியதன் பின்னர் மேற்படி பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 6381 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உய ர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்படி பகுதியில் நிலத்திற்குச் சொந்தமான மக்கள் மீள்குடியேற முடியாமலிருந்தது. கடந்த தை மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் வலிகாமம் வடக்கில் 23.03.2015ம் திகதி 10.04.2015ம் திகதி ஆகிய திகதிகளில் சுமார் 658 ஏக்கர் பொதுமக்களுடைய நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் 811 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவினை செய்துள்ளார்கள். எனினும் மீள்குடியேறும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக 25 வருடங்களின் பின்னர் மீள்குடியேறும் மக்கள் தங்கள் காணிகளை துப்புரவு செய்வதற்காக வசதிகள் வழங்கப்படவில்லை. என்பதுடன்,
மக்கள் நாங்கள் சொந்த நிலங்களை சொந்த செலவில் புனரமைத்து கடனாளிகளாக மாறியிருக்கின்றோம். வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்காக பதிவுகளை எடுப்பதற்கு அதிகாரிகள் வருகைதரும் போது நாங்கள் எங்கள் காணிகளில் நிற்கவேண்டும். இல்லாவிட்டால் பதிவுகள் எடுக்கப்படுவதில்லை.
ஆனால் அவ்வாறு நாங்கள் எங்கள் காணிகளில் தொடர்ந்தும் எவ்வாறு நிற்கமுடியும். காணிகளை துப்புரவு செய்வதற்கு வசதியில்லை. வீடு ஒன்றை அமைப்பதற்கு வசதியில்லை. இதற்குமேல் அன்றாடம் உணவுக்கும் மற்றைய தேவைகளுக்கும் உழைக்கச் செல்லவேண்டும். இந்நிலையில் எப்படி நாங்கள் இந்த இடத்தில் தங்கியிருப்பது?
வீதிகள் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் வைக்கிறார்கள் மற்றய தேவைகளுக்கு தண்ணீர் கிடையாது. இதற்குமேல் மலசலகூடம், பிள்ளைகளை கூட்டிவந்தால் படிப்பதற்கு பாடசாலை, மின் சாரம் என எதுவுமே கடந்த 3 மாதங்களில் செய்து கொடுக்கப்படவில்லை. நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில் காணிகளை துப்புரவு செய்திருக்கிறோம். என மக்கள் உருக்கமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வலி,வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பழைய வரைபடங்கள் எடுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் வீதிகளை கனரக வாகனங்கள் ஊடாக வெட்டியிருக்கிறோம்.
மேலதிகமாக 6.5கிலோ மீற்றர் நீளமான உள்ளக வீதிகளை புனரமைப்பதற்கு 15மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். இதனடிப்படையில் குறித்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும். மேலும் மீள்குடியேறிய மக்களுக்கான தற்காலிக வீட்டு த்திட்டம் மற்றும் மலசலகூட வசதிகள் தொடர்பில், தெல்லிப்பளை பிரதேச செயலகம் எமக்கு வழங்கியிருக்கும் தகவலின் அடிப்படையில் முதற்கட்டமாக வலி,வடக்கு பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுக்காக 45 தற்காலிக வீடுகளும் 2ம் கட்டமாக 68 வீடுகளுமாக மொத்தம் 113 வீடுகள் வழங்கப்படவுள்ளன. மேலும் மீள் குடியேறியிருக்கும் மக்களுக்காக 175 மலசலகூடங்களும்,
வழங்கப்படவிருக்கின்றன. என தெரிவித்ததுடன்,
மீள்குடியேறிய மக்கள் அடிப்படைவசதிகள் இல்லாமையினால் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்து கொள்ளுகின்றோம். மேலும் மீள்குடியேறிய மக்கள் தங்கியிருப்பதற்கான சூழ்நிலைகளும் இல்லை.
எனவே இது தொடர்பில் முடிந்தளவு உதவிகளை பிரதேச சபை செய்து வருகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad