புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2015

வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி


வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இரவு அனைத்து மாகாண முதலமைச்சர்களையும் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் வட மாகாண முதலமைச்சருடன் தனியாக சந்தித்து உரையாடியிருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது, வட மாகாண முதலமைச்சர் மூன்று முக்கிய விடயங்களை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
30 வருட கால போரால் வட மாகாணம் மிகப் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதால் வடக்கை மீளப் பழைய நிலைக்கு கட்டியெழுப்ப பெருமளவு நிதி தேவைப்படுவதாகவும், தற்போது வட பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி போதாதெனவும் பெருமளவு நிதி வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் வடக்கில் முதலமைச்சர் நிதியம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகவுள்ளது.
சர்வதேச நாடுகளதும் புலம்பெயர்ந்த எமது மக்களதும் நிதியுதவிகளைப் பெற்று வட பகுதியைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளதால் முதலமைச்சர் நிதியம் ஊடாக அதனை மேற்கொள்ள முடியும்.
கடந்த ஆட்சியில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியம் அமைக்கப்பட்டால் அதனை மத்திய அரசே கணக்காய்வு செய்யும் விதத்தில் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். இதனால் உடனடியாக முதலமைச்சர் நிதியம் அமைக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதேவேளை வட மாகாண சபையைப் புறக்கணித்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இது எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதெனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி, இதுபற்றி உடனடியாக ஆராய்வதாக தெரிவித்ததுடன் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான உதவிகள் வழங்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அடுத்த வாரம் மீண்டும் அனைத்து முதலமைச்சர்களையும் ஆளுநர்களையும் மாகாண அமைச்சர்களையும் அவற்றின் பிரதம செயலாளர்களையும் தான் சந்திக்கவுள்ளார் என்றும், அதன் போது சகல மாகாணங்கனினதும் தேவைகள் தொடர்பாக தனக்கு எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

ad

ad