8 ஜூன், 2015

கோவில் சிலைகள் அவமதிப்பு: இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!


புதுச்சேரி அருகே கோவில் சிலைகளை அவமதித்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள சின்ன இருசம்பாளையம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் சிலை மீது, ஒரு வாலிபர்
காலை வைத்து நிற்பது போன்ற காட்சி வாட்ஸ் அப்பில் பரவியது. இதைப் பார்த்த இந்து முன்னணியினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அரியாங்குப்பத்தை அடுத்த, தமிழக பகுதியான சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்வு இது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சின்ன இருசாம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம்,  நிச்சயதார்த்த விழா நடத்துவதற்காக அரியாங்குப்பம் கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவராஜிடம் கூறி,  கோவில் வளாகத்தில் ஷாமியானா போட்டுள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்து ஷாமியானாவை அவிழ்த்த போது  சிவராஜ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கட் ஆகியோர், கோவில் கருவறை பின்புறத்தில் உள்ள சுவரில்  அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் அம்மன் சிலை மீது காலை வைத்து அவிழ்த்து உள்ளனர். இதில் அந்த சிலையின் கை உடைந்துள்ளது.

இது குறித்து கோவில் தர்மகர்த்தா நாராயணசாமி ரெட்டிச்சாவடி போலீசில் புகார் கொடுத்துள்ளார். மதவாதத்தை துாண்டுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து சிவராஜ் வெங்கட் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.