புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2015

தற்போதைய செய்தி சண் குடும்பத்தை சேர்ந்த 33 தொலைக்காட்சி சேவைகள் மூடப்படும் அனுமதி இல்லையா ?


சன் குழும தொலைக்காட்சிகளுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த நிறுவனம் விண்ணப்பித்த பாதுகாப்பு தொடர்பான அனுமதிக்கு ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
இதனால், சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உரிமங்களும் ரத்தாகலாம் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு 300 இணைப்புகளை பெற்று, அதை பூமிக்கடியில் குழாய்களை பதித்து, சன் குழும தொலைக்காட்சிகளுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதேபோல், ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பான சிபிஐயின் வழக்கு, சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான மத்திய அமுலாக்க இயக்குநரகத்தின் வழக்கு ஆகிய 2 கிரிமினல் வழக்குகளையும் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 33 தொலைக்காட்சிகளின் உரிமங்களையும் 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக் கோரி, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் சன் குழுமம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை விதிகளின்படி, தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கான அனுமதியளிப்பதற்கு முன்பு, அதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் பின்னணியை விசாரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அளிக்க வேண்டும்.
இதேபோல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதி ஆதாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். இதில் திருப்திகரமான பதிலை அளித்தால் மட்டுமே, விண்ணப்பங்களை பரிசீலித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இதுதொடர்பாக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது.
அப்போது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகளை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு தொடர்பான, அனுமதிக்கு ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
இந்த முடிவை எதிர்த்து, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு சன் குழும தொலைக்காட்சிகளுக்கு உரிமையுண்டு. பிரதமரும் தலையிட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவை மாற்றியமைக்க முடியும்.
முன்னதாக, சன் குழுமத்துக்கு சொந்தமான 40 பண்பலை வானொலிகளின் உரிமங்களை புதுப்பிக்கக் கோரும் விவகாரத்திலும், இதேபோன்ற முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்தது. அதை திருத்தி அமைக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சரும், செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சருமான அருண் ஜேட்லி கடிதம் எழுதியிருந்தார்.
எனினும், அந்த முடிவு மாற்றப்படவில்லை. இந்நிலையில், பண்பலை உரிமங்களை புதுப்பிக்கக் கோரும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சன் குழுமம் சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரையிலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆகையால், தொலைக்காட்சி உரிமங்களை புதுப்பிக்கக் கோரும் விவகாரத்திலும் உயர் நீதிமன்றத்தை சன் குழுமம் அணுகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad