புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2015

விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது

பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில்
பெடரர் 8வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக்கிறார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், கிவிட்டோவா என நிறைய பேர் களத்தில் உள்ளனர்.
லண்டனில் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற 129வது விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. ஆண்கள் ஒற்றையரில் இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ள ‘புல்தரை கள மன்னன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர், கடைசியாக 2012ல் கோப்பை வென்றார். உலகின் ‘நம்பர்–2’ வீரரான இவர், கடந்த ஆண்டு நடந்த பைனலில் ஜோகோவிச்சிடம் கோப்பையை பறிகொடுத்தார். இம்முறை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் 8வது முறையாக பட்டம் வென்று, அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்கலாம்.
மூன்றாவது பட்டம்:
‘நடப்பு சாம்பியன்’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார். சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை முன்னேறினார். ‘சூப்பர் பார்மில்’ உள்ள உலகின் ‘நம்பர்–1’ வீரரான இவர், மீண்டும் சாதிக்கும் பட்சத்தில் விம்பிள்டனில் தனது 3வது பட்டத்தை கைப்பற்றலாம்.
உள்ளூர் நாயகன்:
உலகின் ‘நம்பர்–3’ வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சாதிக்க வாய்ப்பு உண்டு.
விம்பிள்டனில் 2 முறை பட்டம் வென்ற உலகின் ‘நம்பர்–10’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், சமீபகாலமாக ‘பார்மின்றி’ தவிக்கிறார். இவர்களை தவிர, சமீபத்திய பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, ஜப்பானின் கெய் நிஷிகோரி, செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், ஸ்பெயினின் டேவிட் பெரர், கனடாவின் மிலோஸ் ராவோனிக், குரோஷியாவின் மரின் சிலிக் உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.
சாதிப்பாரா செரினா:
பெண்கள் பிரிவில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், விம்பிள்டனில் இதுவரை 5 முறை (2002–03, 2009–10, 2012) கோப்பை வென்றுள்ளார். இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் தொடரில் கோப்பை வென்ற இவர், நல்ல ‘பார்மில்’ உள்ளார். இவர், விம்பிள்டனிலும் சாதிக்கும் பட்சத்தில் தனது 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம்.
‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் (3வது சுற்று), பிரெஞ்ச் ஓபனில் (4வது சுற்று) பெரிய அளவில் சாதிக்கவில்லை.
ஷரபோவா எதிர்பார்ப்பு:
கடந்த 2004ல் விம்பிள்டனில் பட்டம் வென்ற உலகின் ‘நம்பர்–4’ வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 2011ல் பைனல் வரை முன்னேறினார். இவர் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் 2வது பட்டம் வெல்லலாம்.
இவர்களை தவிர, ருமேனியாவின் சிமோனா ஹலெப், டென்மார்க்கின்  வோஸ்னியாக்கி, செக்குடியரசின் லுாசி சபரோவா, செர்பியாவின் இவானோவிச், ரஷ்யாவின் எகடரினா மகரோவா, ஜெர்மனியின் கெர்பர் உள்ளிட்டோர் பட்டம் வெல்ல போராடலாம்.
பயஸ் நம்பிக்கை
விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஆகியோர் தோல்வி அடைந்தனர். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் ஒரு இந்திய வீரர் கூட விளையாட முடியாத சோகம் அரங்கேறியது. ஆனால் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் பயஸ், ரோகன் போபண்ணா, புரவ் ராஜா, சானியா மிர்சா ஆகியோர் விளையாடுகின்றனர்.
7
ஆண்கள் ஒற்றையரில் அதிக முறை பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா (1881–86, 89), அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் (1993–95, 97–2000), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (2003–07, 2009, 2012) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் மூவரும் தலா 7 முறை கோப்பை வென்றனர்.
9
பெண்கள் ஒற்றையரில் அதிக முறை கோப்பை வென்ற வீராங்கனைகள் வரிசையில் அமெரிக்காவின் மார்டினா நவரத்திலோவா (1978–79, 1982–87, 1990) முன்னிலை வகிக்கிறார். இவர், 9 முறை பட்டம் வென்றுள்ளார். இவரை அடுத்து மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஹெலன் வில்ஸ் 8 முறை (1927–30, 32–33, 35, 38) கோப்பை வென்றார்.
6
ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவில் தொடர்ச்சியாக அதிக முறை பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா, அமெரிக்காவின் மார்டினா நவரத்திலோவா முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் தொடர்ச்சியாக 6 முறை கோப்பையை கைப்பற்றினர்.
பெக்கர் ‘சூப்பர்’
இளம் வயதில் விம்பிள்டன் ஒற்றையரில் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை ஜெர்மனியின் போரிஸ் பெக்கர் (1985, 17 ஆண்டு 227 நாட்கள்) பெற்றார். பெண்கள் ஒற்றையில் இங்கிலாந்தின் லோட்டி டாட் (1887, 15 ஆண்டு 285 நாட்கள்) இப்பெருமையை பெற்றார். பெண்கள் இரட்டையரில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் (1996, 15 ஆண்டு 282 நாட்கள்) குறைந்த வயதில் கோப்பை வென்றார்.
நீ....ண்ட நேரம்
கடந்த 2008ல் நடந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் மோதிய பைனல், விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையரில் நீண்ட நேரம் நடந்த பைனல் என்ற சாதனை படைத்தது. இப்போட்டி 4 மணி நேரம், 48 நிமிடம் வரை நடந்தது. பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், லிண்ட்சே டேவன்போர்ட் மோதிய பைனல் (2005) அதிகபட்சமாக 2 மணி நேரம், 45 நிமிடம் வரை நடந்தது.
* கடந்த 2010ல் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், பிரான்சின் நிகோலஸ் மஹுத் மோதிய போட்டி ஆண்கள் ஒற்றையரில் நீண்ட நேரம் நடந்த போட்டி என்ற பெருமை பெற்றது. இப்போட்டி 11 மணி நேரம், 5 நிமிடம் வரை நீடித்தது. பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் சண்டா ருபின், கனடாவின் பாட்ரிகா மோதிய ஆட்டம் (1995) 3 மணி நேரம் 45 நிமிடம் வரை சென்றது.
ஐந்து ஆண்டு சாம்பியன்கள்
விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையரில் கடந்த 5 ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்:
ஆண்டு சாம்பியன் 2வது இடம் செட்
2010 நடால் (ஸ்பெயின்) பெர்டிச் (செக்குடியரசு) 6–3, 7–5, 6–4
2011 ஜோகோவிச் (செர்பியா) நடால் (ஸ்பெயின்) 6–4, 6–1, 1–6, 6–3
2012 பெடரர் (சுவிட்சர்லாந்து) முர்ரே (பிரிட்டன்) 4–6, 7–5, 6–3, 6–4
2013 முர்ரே (பிரிட்டன்) ஜோகோவிச் (செர்பியா) 6–4, 7–5, 6–4
2014 ஜோகோவிச் (செர்பியா) பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–7, 6–4, 7–6, 5–7, 6–4

பெண்கள் ஒற்றையர்:
ஆண்டு சாம்பியன் 2வது இடம் செட்
2010 செரினா (அமெரிக்கா) ஸ்வனரேவா (ரஷ்யா) 6–3, 6–2
2011 கிவிட்டோவா (செக்குடியரசு) ஷரபோவா (ரஷ்யா) 6–3, 6–4
2012 செரினா (அமெரிக்கா) ரத்வன்ஸ்கா (போலந்து) 6–1, 5–7, 6–2
2013 பர்டோலி (பிரான்ஸ்) லிசிக்கி (ஜெர்மனி) 6–1, 6–4
2014 கிவிட்டோவா (செக்குடியரசு) பவுச்சார்டு (கனடா) 6–3, 6–0
பைனலில் ஏமாற்றம்
விம்பிள்டன் ஒற்றையர் பைனலில் அதிக முறை தோல்வி அடைந்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனை பிளான்சே பிங்ளே ஹில்யார்டு (1885, 87–88, 91–93, 1901), அமெரிக்க வீராங்கனை கிறிஸ் எவர்ட் (1973, 78–80, 82, 84–85) முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 7 முறை பைனலில் தோல்வி அடைந்து கோப்பை வெல்ல தவறினர்.
அதிக போட்டி
விம்பிள்டனில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் பிரான்சின் ஜீன் போரோட்ரா (223 போட்டி) முன்னிலை வகிக்கிறார். வீராங்கனைகள் வரிசையில் அமெரிக்காவின் மார்டினா நவரத்திலோவா (326 போட்டி) முதலிடத்தில் உள்ளார்.

ad

ad