புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் பயங்கர நில நடுக்கம் வீடுகள் இடிந்து விழுந்து 120–க்கும் மேற்பட்டோர் படுகாயம்



பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 120–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சக்தி வாய்ந்த நில நடுக்கம்பாகிஸ்தானில், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 12.44 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 196 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் கடுமையாக உணரப்பட்டது.
நள்ளிரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. சுமார் ஒரு நிமிட நேரம் இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதனால் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்துக் கொண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தங்களுடைய குழந்தைகளுடன் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கடும் குளிரிலும் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
90 பேர் படுகாயம்நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் 90 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் உயிர்சேதம் குறித்து உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை.
இதுகுறித்து பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் குலாம் ரசூல் கூறுகையில், நள்ளிரவுக்கு பின்பு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்கவா மாகாணத்தின் ஏராளமான மாவட்டங்களில் இந்த நில நடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். இந்த நில நடுக்கம் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டிருந்தது என்று குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானையும்...இதேபோல் ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காபூலில் இருந்து வடகிழக்கில் 280 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 203 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.
அங்கு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 30 பேர் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 7.5 என்ற அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது இரு நாடுகளிலும் 200 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த மாதம் ஏற்பட்ட இன்னொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. எனினும் அப்போது எந்த சேதமும் ஏற்படவில்லை.
நகரும் பாறை அடுக்குகள்பூமிக்கு அடியில், ஈரோசியா– இந்திய பாறை அடுக்குகள் சந்திக்கும் மற்றும் நகரும் பகுதியையொட்டி இந்துகுஷ் மலைத்தொடரின் அருகாமையில் ஆப்கானிஸ்தான் அமைந்து இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கத்துக்கு அந்த நாடு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ad

ad