இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து செயற்படுத்தப் வேதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இச் செயலணியில் கட்சிகளின் பிரதிநிதிகள்,
அதிகாரிகள், பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸ் பிரிவு அதிகாரிகளும் உள்ளடங்குவர் என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் மண்டபத்துக்குள் செய்தியாளர் மாநாட்டை நடத்தி விமர்சிப்போர் இந்த மக்களின் பிரச்சினைகளை நேரில் இங்கு வந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அத்தகைய அடிப்படைவாதிகள் விமர்சனங்களின் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.
நாட்டு மக்கள் அத்தகைய அடிப்படைவாதிகள் பற்றி உணர்ந்துள்ளதாகவும் அத்தகையோர் ஆட்சியமைக்க நாமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று யாழ். விஜயத்தின் போது தெல்லிப்பளையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினையை உணர்ந்து கொண்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகளுக்கு 6 மாத காலத்தில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இம்முறை முதல் தடவையாக அரச தேசிய நத்தார் விழா யாழ்ப்பாணம் நகர சபை மைதானத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (20) மாலை நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் ஜோன் அமரதுங்க, வட மாகாண முதல்வர் சி. விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உட்பட முக்கியஸ்தர்கள் யாழ். மறை மாவடட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம், பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி, குருக்கள், அருட் சகோதரிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இளைஞர் யுவதிகளின் நத்தார் கரோல் கீதமிசைத்தலுடன் அரச நத்தார் விழா ஆரம்பமானது. யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செயத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். நகரில் புதிய ‘கார்கில்ஸ் பூட்சிட்டி’ வர்த்தக நிறுவனத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
அதனையடுத்து அரச நத்தார் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு யாழ் மாநகர சபை மைதானத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
நத்தார் பண்டிகைக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இம்முறை அரச தந்தார் விழாவை சுற்றுலாத் துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சு யாழ். நகரில் பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்திருந்து.
30 வருட கால யுத்தத்துக்குப் பின் நாட்டில் நல்லாட்சியும் சகவாழ்வும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட்டு வரும் இன்றைய சூழலில் அரசாங்கம் அரச நத்தார் விழாவை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது என யாழ். மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
உலகில் அமைதியும் சமாதானமும் நிலைப்ப தற்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வழிவகுத்தது. நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவிய பேதங்கள் முரண்பாடுகளைக் களைந்து மக்கள் மனதில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் யாழ் நகரில் நடத்தப்படும் நத்தார் விழா முக்கிய பங்களிப்பை நல்கும் என்பதே மக்களின் கருத்தாக இருந்தது.
அரச தேசிய நத்தார் விழாக்கள் இதுவரை கொழும்பில் அல்லது அதனை அண்டிய பகுதிகளிலே தான் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அரச நத்தார் விழா நடைபெறுவது இதுவே முதல் தடவையாகுமெனவும் அரசாங்கம் இதற்காக யாழ். நகரைத் தேர்ந்தெடுத்ததும் மகிழ்ச்சி தரும் விடயம் என விழாவில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் யாழ் விஜயத்தையொட்டி யாழ் நகரிலம் அதனை அண்டிய பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நேற்றைய இவ்விழாவில் ஜனாதிபதியுடன் இணைந்து அமைச்சர் ஜோன் அமரதுங்க வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன், யாழ். ஆயர், முன்னாள் யாழ் ஆயர், நல்லை ஆதீன முதல்வர், நாக விஹாரையின் விகாராதிபதி, யாழ் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதான மௌலவி இந்தியத் தூதுவர் ஆகியோர் மங்கள விளக்கேற்றி அரச நத்தார் விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். இந்தியாவிலிருந்தும் ஆயர்கள் இந்த நத்தார் விழாவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.