புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2015

விளாடிமிர் புடின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியா?

சிரியாவில் ஐ.எஸ். வன்முறைக் குழுவுக்கு எதிரான போரில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதைத்
தொடர்ந்து விளாடிமிர் புடின் கவர்ச்சிகரமான தலைவராக காண்பிக்கப்பட்டார். முன்னைய சோவியத் யூனியனைப் போன்று அமெரிக்க ஏகாபதிபத்தியத்திற்கு எதிரான அச்சாணியாகவும் அவர் வர்ணிக்கப்பட்டார். இன்னும், ரஷ்ய ஊடகங்களும் ஏனைய மாற்று ஊடகங்களும் அமெரிக்கா ஊட்டி வளர்க்கும் வன்முறை குழுக்களுடைய இறுதிச் சடங்கினை நடத்துவதற்காகவே மொஸ்கோ சிரியாவில் நுழைந்திருக்கிறது என்ற மாயையை அவிழ்த்துவிட்டது.
இந்தப் பின்புலத்தில், பல்வேறு இடதுசாரி சிந்தனைப் போக்கைக் கொண்டவர்களும் மொஸ்கோவை அமெரிக்காவிடமிருந்து உலகை பாதுகாக்க வந்திருக்கும் விமோசனமாக சித்திரித்தனர். அதன் உச்சத்தில் ரஷ்யத் தலைவர் புடினை பூஜை செய்து கொண்டாடினர். விளாடிமிர் புடினுடைய அமெரிக்க எதிர்ப்புக் கோஷங்களை ஆதாரம் காட்டி மொஸ்கோவினுடைய சிரிய ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தும் முயற்சியில் தெஹ்ரானும் இறங்கியது. ஆனால், விளாடிமிர் புடின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா என்ற விடயம் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியதோர் அம்சமாகும்.
விளாடிமிர் புடினுடைய அரசியல் நகர்வுகள், அடைவுகள் மற்றும் இராஜதந்திரங்களை கவனமாக உற்றுநோக்கும் போது பயங்கர மாபியா அரசின் அச்சாணியாகவே அவரை அடையாளப்படுத்த முடியும். ஜனநாயகம், உள்நாட்டு மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் சுதந்திரம் போன்றவற்றை அடியோடு நிராகரித்து ஸ்தீரத்தன்மை என்ற மாயை அடித்தளத்தில் சர்வாதிகார இரும்புக் கரத்தினாலான ஆட்சியை கட்டியெழுப்பும் மனிதர் என்றே அவரை ஆய்வு செய்யும் விற்பன்னர்கள் குறிப்பிடுகின்றனர்.
ரஷ்ய மக்களின் நியாயமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளை முடக்கி தேசிய நலன் என்ற போர்வையில் தனது அதிகார வெறியை தீர்த்துக் கொள்ளும் பாதாள கும்பலின் தலைவராகவே விளாடிமிர் புடின் செயற்பட்டு வருகிறார். இன்னும், எந்த நாட்டினுடைய அரசாங்கங்கள் சர்வதிகாரம், அடக்குமுறை மற்றும் பொருளாதார சூரையாடல் போன்ற மிக மோசமான பக்கங்களைக் கொண்டிருக்கிறதோ, அவற்றைப் பலப்படுத்துவதிலும், அவற்றுடன் இராஜதந்திர உறவைப் பேணுவதிலும் விளாடிமிர் புடின் விரைவாக செயற்படுவார். இதுவே சிரிய சர்வாதிகாரி அஸதிற்கு ஆதரவாக புடின் களத்தில் இறங்கியதன் பிரதான பின்புலமாகும்.
ரஷ்யாவின் இரகசிய உளவுப் பிரிவுத் தலைவராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் விளாடிமிர் புடின். இராணுவ உளவியலே அவரின் அரசியல் தீர்மானங்களை இயக்குவிக்கின்றது. சுயகௌரவம், தற்பெருமை மற்றும் வெறித்தனமாக பழிதீர்த்தல் போன்ற உணர்வுகளை இராஜதந்திரத்தை விட முதன்மையானதாக கருதுபவரே ரஷ்ய அதிபர். எனவேதான், சிரியா மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை வேறுவிதமாகவும் சில அரசியல் நோக்கர்கள் எழுதுகின்றனர்.
அதாவது, லிபியா, போலாந்து மற்றும் ஈராக் போன்ற மொஸ்கோவின் நேச நாடுகள் வீழச்சியடைவதை ரஷ்யாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால், புடினுடைய நண்பர்கள் (சர்வாதிகார ஆட்சியாளர்கள்) அவர் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையை சற்று தாழ்த்திக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இத்தோல்வி மனப்பாங்கின் தூண்டுதலினாலேயே சிரியா மீதான ஆக்கிரமிப்பை புடின் முடுக்கி விட்டார். இன்னும், உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா மீதான மொஸ்கோவின் ஆக்கிரமிப்புகளும் இந்நோக்கிலேயே அலசப்பட வேண்டும்.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் துருக்கியத் தலைவர் ரஜப் தையப் அர்தூகானுடன் காரசாரமாக முரண்பட்டுக் கொண்ட நிகழ்வு பாரிய கவனஈர்ப்பைப் பெற்றமை அறிந்ததே. ரஷ்யாவினுடைய போர் விமானம் துருக்கியின் வான்பரப்பில் பறந்தபோது துருக்கியின் விமானப் படை அதனை சுட்டு வீழ்த்தியது. பின்னர், குறித்த நிகழ்வுக்கு துருக்கியை பழிவாங்கப் போவதாகவும் அல்லது அதற்கு அங்காரா மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும் ரஷ்ய அதிபர் கர்ஜித்தார். ஏனெனில், ரஷ்யாவினுடைய போர் விமானம் துருக்கியினுடைய வான்பரப்பிற்குள் நுழையாத நிலையில் துருக்கியினுடைய விமானப் படை அதனை சுட்டு வீழ்த்தியதாக மொஸ்கோவின் அதிகார மையம் நியாயம் கூறியது.
ரஷ்யாவின் போர் விமானம் துருக்கியின் வான்பரப்பில் நுழைந்ததா இல்லையா என்ற விவாதத்திற்கு அப்பால், விளாடிமிர் புடினுடைய கர்ஜனையின் பின்புலத்தில் அவரது தனிப்பட்ட உள்நாட்டு அரசியல் சூழமைவுகளே செல்வாக்குச் செலுத்தியுள்ளமை நிச்சயமானது. அதாவது, ரஷ்யாவின் பொருளாதாரமும் சமூக, கல்வி நிலைமைகளும் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு போரில் ரஷ்யாவை தனது சொந்த இலாபத்திற்காக ஈடுபடுத்தியமைக்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பலை உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதனை விட, போரில் பாரிய இழப்புகளை ரஷ்யா சந்திக்குமானால், உள்நாட்டு பொது அபிப்பிராயம் இன்னும் மோசமான கட்டத்தை அடையலாம் என மொஸ்கோ அச்சமடைகிறது. இதனை, சமாளிப்பதற்கானதோர் அணுகுமுறையாகவே அர்தூகானிற்கு எதிரான புடினின் கர்ஜனைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, ரஷ்யாவின் உள்நாட்டு பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் நகர்வுகள் மற்றும் அதன் வெளிநாட்டுக் கொள்கையுடன் தொடர்புபட்ட விவகாரங்கள் அனைத்தும், ரஷ்ய மக்களின் பரந்த நலன் என்பதை விடவும் புடின் தலைமையிலான அதிகார கும்பலின் சுய இலாபங்களை மையப்படுத்தியே திசைப்படுத்தப்பட்டு வருகின்றமை தெளிவானது. ஏகாதிபத்திய கோஷங்கள் மற்றும் மேற்கெதிர்ப்பு முழக்கங்கள் என்பன தனது சுரண்டல்களை, வெறியாட்டங்களை மற்றும் எவ்விதத்திலும் மக்கள் நலன் பேணாத கொள்கைகளை பொதுஜன அபிப்பிராயத்தின் கண்களுக்கும் சிந்தனைக்கும் படாத வகையில் முகாமை செய்வதற்கான புடினுடைய கருவி மட்டுமேயாகும்.
சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரலெழுப்பும் புடினுடைய சொந்த நாட்டின் பொருளாதார மேம்பாடு, உற்பத்திச் செயற்பாடுகள் மற்றும் கல்வி அபிவிருத்தி என்பன அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. நாட்டின் 50 வீதத்திற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டித் தரும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் இலாபங்கள் எங்கே செல்கின்றன என்ற கேள்வியை மனித உரிமைக் குழுக்கள் எழுப்பி வருகின்றன.
அதேவேளை, ரஷ்ய அரசாங்கத்தின் கொடூரமான பழிவாங்கல்களுக்கு பயப்படும் உள்நாட்டு ஊடகங்கள் இது பற்றி முழுமையாகவே மௌனம் சாதிக்கின்றன. ஆனால், புடினும் அவருடைய மாபியா கும்பலும் நாட்டினுடைய 50 வீத வருமானத்தை, தமது அரசியல் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக கொள்ளையடித்தைமையின் விளைவாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளமை திண்ணமானது.
மேலும், சோவியத் ஆட்சியின் கீழ் ஓரளவு பல்வகைப்பட்ட உற்பத்திகளை மொஸ்கோ ஏற்றுமதி செய்து வந்தாலும் கூட, புடினுடைய ரஷ்யாவின் கீழ் வெறும் ஆயுத உற்பத்தியும் அதனை பரீட்சித்துப் பார்ப்பதும் மட்டுமே தொடர்கிறது. இந்தப் பின்னணியில் தான், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கமீயுனிஷமாக அல்லது விளாடிமிர் லெனினின் புதிய பிறப்பாக விளாடிமிர் புடினின் செயற்பாடுகளை கருத முடியாது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். புடினுடைய சர்வாதிகார மற்றும் இராணுவ உளவியலை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை புடினிஷம் என்ற தனித்துவமான வகைப்படுத்தலின் கீழ் அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ad

ad