15 பிப்., 2016

யாருடன் கூட்டணி? அந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில் இருக்குமா? 5 நாளில் அறிவிக்கிறார் விஜயகாந்த்
 காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் கிராமத்தில் தேமுதிக மாநில மாநாடு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ’’காஞ்சிபுரத்தில் வரும் 20-ம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்காக 270 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
 அண்ணா பிறந்த மண்ணில் நடைபெறும் இம் மாநாடு, தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்தியது போன்ற திருப்புமுனையை மீண்டும் ஏற்படுத்தும். அதற்காகவே இம் மாநாட்டுக்கு "அரசியல் திருப்புமுனை மாநாடு' என்று பெயர் வைத்துள்ளோம். 

தேமுதிக மாநாட்டில் பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதை மாநாட்டின்போது நீங்களே நேரில் பார்க்கலாம்’’ என்றார்.

 திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இவர்கள் கூட்டணி அறிவித்த 30 நிமிடங்களில் கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்தன. ஊழலில் ஊறிய, கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமான இரு கட்சிகளும் இணைந்துள்ளதாகவே பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர் என்றார் பிரேமலதா.

 மக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி, திமுக அணி, அதிமுக அணி என்று பல்வேறு அணிகள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளன. பலரும் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்துள்ளனர். தேமுதிகவின் வளர்ச்சிக்கு தொண்டர்கள் ஆற்றிய அயராத பணியே இதற்குக் காரணம். 

 யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில் இருக்குமா என்பதையும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்னும் 5 நாள்களில் அறிவிப்பார் என்றார் அவர்.