15 பிப்., 2016

அசைந்து கொடுக்கும் 'அம்மா' : பெருவெள்ளம் ஏற்படுத்திய அதிருப்தியால் கூட்டணி தேடும் அதிமுக!

மிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக -காங்கிரஸ்
கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டு விட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவுடன் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், பாரதிய ஜனதா கட்சி முதலில் 100 தொகுதிகள் எதிர்பார்த்ததாகவும், அதே வேளையில் அதிமுக தரப்பில் இருந்து 25 மட்டுமே தருவதாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் குறைந்தது 60 சீட்டுகளாவது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பாரதிய ஜனதா கட்சியிடம் இருக்கிறது. 

கடந்த பொது தேர்தலில் தனியாக நின்று 37 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக,  இந்த முறை பெருவெள்ளத்தின் போது செயல்பட்ட விதம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால்,  கூட்டணி முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் மேற்கொண்ட  கோவை விஜயத்திற்கு பின்னரே,  அதிமுக - பாரதிய ஜனதா இடையே பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.  அதுபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குமிடையே நல்ல உறவும் உண்டு. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே  பாரதிய ஜனதா கட்சியின் தலைமை விரும்புகிறதாம்.  

இன்னொரு பக்கம்,   மதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்ற எண்ணம் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறது.  கடந்த பொது தேர்தலில் மதிமுகவுடன் சேர்ந்துதான் பாரதிய ஜனதா தேர்தலை சந்தித்தது. இலங்கை தமிழர் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்ட விதத்தால் அதிருப்தி கொண்ட வைகோ,  அந்த கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டார்.  வெற்றி வாய்ப்பை பொறுத்து  பாரதிய ஜனதா கட்சி,  மதிமுகவை தங்கள் பக்கம் இழுக்கவும் முடிவு செய்துள்ளதாம். 

இதில் இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரை பலமான திராவிட கட்சிகள், பாப்புலரான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் முகத்துக்கு இணையாக  தங்கள் கட்சியில் ஒரு பாப்புலர் முகம் இல்லாததை ஒரு பெரும் குறையாக பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை கருதுகிறது. 
இதனால் எப்பாடு பட்டாவது நடிகர் ரஜினிகாந்தை பாரதிய ஜனதா கட்சிக்குள் இழுத்து விட வேண்டுமென்ற ஆசை இப்போது அதிகரித்துள்ளதாம். கடந்த 10 வருடங்களாகவே நடிகர் ரஜினிகாந்தை கட்சிக்குள் இழுத்து போட்டு விட வேண்டுமென்ற எண்ணம் பாரதிய ஜனதாவுக்கு உண்டு. இந்த முறை ரஜினிகாந்தை கட்சிக்குள் இழுக்க மோடியே நேரடியாக ஈடுபடுவார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் விருதும் வழங்கப்பட்டதாம். 

கடந்த பொதுதேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் 13 சதவீத வாக்குகள் கிடைத்தது. போட்டியிட்ட 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் 2வது இடத்தையும் பிடித்தனர். அத்துடன் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு செல்வாக்கும் உண்டு. தற்போது மத்திய அமைச்சராக உள்ள பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதில் இருந்து   தேர்வு செய்யப்பட்டார்.
ஜல்லிக்கட்டு பிரச்னையில், பொன்.ராதாகிருஷ்ணன் செயல்பட்ட விதமும் பாரதிய ஜனதாவின் மதிப்பை தமிழகத்தில் உயர்த்தியுள்ளதாம். இந்த தேர்தலை விட்டால், இனிமேல் எப்போதுமே கட்சியை பலப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதால் பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவது இல்லை