புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 பிப்., 2016


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை என ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கு புறம்பான வகையில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், தீர்மானப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவதில்லை என முறைப்பாடு செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா விஜயம் செய்ய உள்ளது.
இந்த மாதம் 29ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
போரின் போது தமிழ் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து சர்வதேச விசாரணை, போரின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் மூலம் விசாரணை நடத்த வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஊடாக குழுவொன்றை நிறுவி விசாரணை நடத்துதல் ஆகிய கோரிக்கைகள் இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது முன்வைக்கப்பட உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் மார்ச் மாத ஆரம்பத்தில் ஜெனீவா விஜயம் செய்து, இந்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.