புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 பிப்., 2016

மஹிந்தவின் பரிவாரங்கள் செய்துள்ள மோசடிகள் குறித்து சட்ட நடவடிக்கை! - சட்டமா அதிபர் திணைக்களம் முஸ்தீபு.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்துள்ளனர் எனக் கூறப்படும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்களை சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருகின்றது எனத் தெரியவருகின்றது.
இந்த மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பல மாதங்களுக்கு முன்பேமுடிவடைந்துவிட்டபோதிலும் சட்டமா அதிபர் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என பரவலாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, அவரது மனைவி புஷ்பா ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தர, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, அவரது மனைவி சஷி வீரவன்ச, 'பீபிள்ஸ் லீசிங்' நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரியுமான காமினி செனரத், திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.ரணவக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன, மேல் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மேலதிக நடவடிக்கைகள் இன்றி பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக ஏற்கனவே கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
சட்டமா அதிபரின் காரியாலயத்தில் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையின் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டதாக காரணம் காட்டப்பட்டது.

மோசடியொன்றின் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் அவசியமாகும்.
எனினும், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக மேற்கூறியவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவர்களுக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இத்தகைய பாரதூர மோசடிகள் தொடர்பில் தற்சமயம் விசாரணை செய்யப்பட்டுவரும் 2 ஆயிரம் முறைப்பாடுகளில் 725 முறைப்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் தொடர்பானவையே என அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒரு தெரிவித்திருக்கின்றார்.