புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 பிப்., 2016

ஆசியாக்கப் கிரிக்கட் தொடரில் இலங்கையிடம் சரண் அடைந்தது ஐக்கிய அரபு அமீரகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில்
நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். தொடக்க ஆட்டத்தில் இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
இந்த நிலையில் மிர்புரில் நேற்றிரவு நடந்த தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் இலங்கை- ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த அமீரக கேப்டன் அம்ஜத் ஜாவித் முதலில் இலங்கையை பேட் செய்ய கேட்டுக் கொண்டார்.
இதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தில்ஷனும், தினேஷ் சன்டிமாலும் களம் புகுந்தனர். இலங்கை அணிக்கு நல்ல தொடக்கம் தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் (9.1 ஓவர்) சேர்த்தனர். தில்ஷன் 27 ரன்களில் (28 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

130 ரன்கள் இலக்கு
இதன் பிறகு இலங்கையின் ரன்வேகம் ஒரேயடியாக தளர்ந்தது. விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன. தினேஷ் சன்டிமால் தனது பங்குக்கு 50 ரன்கள் (39 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) திரட்டினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். முதல் 8 ஓவர்களில் 11 பவுண்டரியும், ஒரு சிக்சரும் விளாசிய இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்த 8 ஓவரில் ஒருமுறை மட்டுமே பந்தை எல்லைக்கோட்டிற்கு அனுப்பினர். பந்து வீச்சு எடுபட்டதுடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் பீல்டிங்கும் ஓரளவு நன்றாக இருந்ததால் இலங்கை அணியின் அதிரடி முயற்சிக்கு பலன் கிட்டவில்லை.
20 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. டெஸ்ட் அந்தஸ்து பெறாத உறுப்பு அணிக்கு எதிராக இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இலங்கை போராடி வெற்றி

அடுத்து 130 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி விளையாடியது. ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா வீசிய முதல் பந்திலேயே ரோகன் முஸ்தபா (0) எல்.பி.டபிள்யூ. அதே ஓவரின் கடைசி பந்தில் முகமது ஷாசாத் (1) கிளீன் போல்டு ஆனார். இதே போல் குலசேகரா தனது ஓவரில் இரட்டை ‘செக்’ வைத்தார். இந்த ஊசலாட்டத்தில் இருந்து மீண்டு வர அமீரக அணி கடுமையாக போராடியது. விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பட்டீல் தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் இலங்கை வீரர்கள் கொஞ்சம் பதற்றத்திற்குள்ளானார்கள். ஸ்வப்னில் பட்டீலை (37 ரன், 36 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) காலி செய்த பிறகே இலங்கை வீரர்களுக்கு நிம்மதி பிறந்தது.
வெற்றி ஏறக்குறைய உறுதியான நிலையில் கடைசி ஓவரை வீசிய சமீரா, பேட்ஸ்மேனை அச்சுறுத்தும் வகையில் இடுப்புக்கு மேல் இரண்டு முறை புல்டாசாக வீசியதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய 4 பந்துகளை மேத்யூஸ் வீசி முடித்தார். 20 ஓவர்களில் அமீரக அணி 9 விக்கெட்டுக்கு 115 ரன்களே எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் கேப்டன் மலிங்கா 4 விக்கெட்டுகளும், குலசேகரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இன்றைய ஆட்டம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில், தங்களது முதல் ஆட்டங்களில் தோல்வி கண்ட வங்காளதேசம்-ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் சந்திக்கின்றன.
ஒளிபரப்பு
இந்த ஆட்டத்தை இன்று இரவு 7மணி முதல் தொலைக்காட்சி மூலமாக Star Sports1 மற்றும் இலங்கைத் தொலைக்காட்சி TNL லும் இணையம் வாயிலாக எமது Sky Tamil News மூலமும் பார்க்க முடியும்