புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

உறுதியாய் நின்ற செல்வி... அசைந்து கொடுத்த அழகிரி... இறங்கி வந்த கருணாநிதி! - கோபாலபுரம் கோபம் தணிந்த பரபர பின்னணி

லகிலேயே தந்தை மகனை சந்தித்து பேசுவதே பரபரப்புக்குள்ளாகிறது என்றால் அதுதான் தமிழக அரசியல். திமுகவின் முன்னாள்
தென்மண்டல பொறுப்பாளரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான அழகிரி,  இன்று தன் தந்தையை சந்தித்துப்பேசி திரும்பியிருப்பது அரசியல் களத்தை அதகளப்படுத்தியுள்ளது. மீண்டும் திமுகவில் அழகிரிக்கு கட்சியில் மகுடம் சூட்டப்படப்படலாம் என்கிறது திமுக வட்டாரம். 

திமுக தலைவரின் மகனான அழகிரி,  ஆரம்ப காலங்களில் அரசியல் ஆர்வம் அற்று,  தனிப்பட்ட தொழில்  என தனிப்பாதையில் சென்றவர். பின்னாளில் திமுகவில் ஸ்டாலின் எழுச்சி பெற்ற ஒரு தருணத்தில், அழகிரிக்கும் அரசியல் ஆர்வம் துளிர்விட,   தாய் மூலம் தந்தையிடம் அதை கொண்டு சென்றார். 
கட்சியின் வளர்ச்சிக்கு அழகிரியின் பங்கு பயனளிக்கும் என்று கருதிய கருணாநிதி,  அதற்கு சம்மதித்தார். பின்னர் கிடுகிடு வளர்ச்சிதான் அழகிரிக்கு. 

திமுகவின் தென்மண்டல பொறுப்பாளர் என்ற அளவில் திமுகவில் முக்கியத்துவம் பெற்ற அழகிரி,  கட்சியின் தென்மண்டல வளர்ச்சியில் பெரிதும் அக்கறை செலுத்தி அங்கு தவிர்க்கமுடியாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். எம்.பி, மத்திய மந்திரி என அதிகாரத்தின் அருகில் சென்ற அழகிரி தனக்கென ஒரு ஆதரவாளர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டபோதுதான் சிக்கல் எழுந்தது. திமுகவில் ஸ்டாலினுக்கும் அவருக்குமான இடைவெளி உருவாக ஆரம்பித்தது. ஏற்பட்டது. கட்சியின் பொருளாளரான ஸ்டாலின்,  ஒட்டுமொத்த திமுகவினரிடையே செல்வாக்குடன் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட அதேசமயம் அழகிரியின் ஆட்சி அதிகாரம் சென்னை வரை நீண்டது. இது ஸ்டாலின் தரப்பபை எரிச்சலடையச்செய்தது. அழகிரியின் அதிரடி நடவடிக்கைகள் ஸ்டாலினுக்கு பீதியை தர,  அவருக்கு எதிராக தலைமையிடம் காய் நகர்த்த ஆரம்பித்தார். அழகிரி - ஸ்டாலின் பனிப்போர் வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்தது. 

இந்நிலையில் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு,  தேமுகதிகவுடன் கைகோர்க்க விரும்பிய திமுகவின் செயல்பாடுகளை வெளிப்படையாக பத்திரிகைகளின் முன் விமர்சனம் செய்தார் அழகிரி. 

ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் வெளிப்படையாக மோத ஆரம்பித்தனர். உச்சகட்டமாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் சிலர் மீது வன்கொடுமை சட்டம் பாயும் அளவுக்கு அழகிரி ஆட்கள் தீவிரம் காட்டியபோது கட்சித்தலைமை அதை ரசிக்கவில்லை.  2014 ஜனவரியில், அழகிரி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக அறிவித்தது திமுக.
"துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - அவர், தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று அன்பழகன் கறார் காட்டினார் அறிக்கையில். அடுத்தடுத்து அவரது ஆதரவாளர்கள் கட்டம் கட்டப்பட்டனர்.

அன்பழகனின் அறிக்கை வெளியான அடுத்த சில தினங்கள் அரசியலில் பரபரப்பு நிலவியது. அழகிரி,  தான் செல்லும் இடங்களிலெல்லாம் திமுகவை விமர்சித்து வந்த நிலையில்,  கருணாநிதி அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டு அழகிரி பிரச்னையை இன்னும் பூதாகரமாக்கினார். 

" தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு முடிவுக்கு எதிராக அழகிரி செயல்பட்டதால் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு அழகிரி பேட்டி அளித்தது தவறு.  தனது பிரச்னையை நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ விளக்கம் அளித்து பிரச்னையை அணைக்க வேண்டுமே தவிர வளர்க்க கூடாது. 

சில ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு சுவரொட்டி அளிப்பதும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதும் எப்படி முறையாகும்? இதன் உச்சக்கட்டமாக கடந்த 24 ஆம் தேதியன்று என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து, படுக்கை அறையில்  தூங்கிக்கொண்டிருக்கும் என்னிடம், உரத்தக் குரலில் விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை கூறினார். மேலும் ஸ்டாலினை பற்றியும் விரும்பத்தகாத வார்த்தைகளை  கூறினார். 

ஸ்டாலின் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் செத்துவிடுவார் என்று உரத்தக்குரலில் என்னிடத்தில் சொன்னார். எந்த தகப்பனாவது இதுபோன்ற வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியுமா? இருப்பினும் கட்சித் தலைவர் என்ற முறையில் தாங்கிக் கொண்டேன். தகப்பன் என்ற முறையில் அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. விடியற்காலை ஆறரை, ஏழு மணிக்கே கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்டு வருவது... அது முறையா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும் சரி, அழகிரி ஆனாலும் சரி, மகன்கள் என்ற உறவுமுறையைவிட கட்சியின் உறுப்பினர் என்ற முறையிலேயே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவரான என்னிடமே உரத்தக்குரலில் ஆரூடம் அளிப்பதை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்” என்று வெதும்பினார்.

பிரச்னை வேறு திசைக்கு திரும்பியதால் ஸ்டாலின் அத்துடன் அமைதியானார். ஆனால் அழகிரி தன்  கோபத்தை போகும் இடங்களில் எல்லாம் வெளிப்படுத்தி,  திமுகவிற்கும் கருணாநிதிக்கும் பெரும் சங்கடத்தை தந்துகொண்டிருந்தார். டெல்லியில் மன்மோகன் சிங், உள்ளுரில் ரஜினி என வண்டியை யுடுலிங்கிலேயே வைத்துக்கொண்டார் அழகிரி. அடுத்தடுத்து தனது ஆதரவாளர்களின் வீடுகளுக்கு அதிரடி விசிட் , திமுகவிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களுடனான சந்திப்புகள்  என அதிரடியான அவரது நடவடிக்கைகள் திமுகவுக்கு குடைச்சலை  தந்தது. இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில்,  எதிரணி வேட்பாளர்கள் சிலர் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டதும் நடந்தது. 

அதுவரை அமைதி காத்த திமுக,  அதன்பின் தன் மவுனத்தை கலைத்தது. திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்தார் அன்பழகன்.  ஆனால் குடும்பத்தினர் மத்தியில் இது பதற்றத்தை ஏற்படுத்தியது. அழகிரி- கருணாநிதி பிளவு அவர்களை துயரப்படுத்தியதால் வழக்கம்போல் கருணாநிதியின் மகள் செல்வி களத்தில் இறக்கப்பட்டார். கருணாநிதி குடும்பத்தினரிடையே பிரச்னை எழும்போதெல்லாம் சர்வரோக நிவாரணி செல்விதான். அழகிரியை சந்திக்கும் நேரமெல்லாம் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார் அவர். அழகிரி இறங்கிவந்தாலும் ஆரம்பத்தில் கருணாநிதியும்,  நேற்றுவரை ஸ்டாலினும் முரண்டுபிடித்தனர் இந்த முயற்சிக்கு. 
இதனிடையே அழகிரியின் தீவிர ஆதரவாளரான கே.பி. ராமலிங்கம்,  அழகிரி சார்பாக கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் கருணாநிதியை சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் செவி சாய்க்கவில்லை கருணாநிதி. கருணாநிதி கனிந்து வந்தாலும் ஸ்டாலின் கடுமை காட்டவே,  இந்த முயற்சி அப்போதைக்கு கை கூடவி்ல்லை.

இருப்பினும் அவ்வப்போது தன் தாயை பார்க்க வரும் அழகிரியை,  தந்தையையும் சந்திக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன. அது கைகூடவில்லை. அழகிரி வரும்போது கருணாநிதி மேலே சென்றுவிடுவார். அழகிரி சென்று திரும்பியபின் ஸ்டாலின் வருவார்...இப்படி கண்ணாமூச்சு நடந்தது கோபாலபுரம் இல்லத்தில். இருப்பினும் விடாது கருப்பாய் செல்வி,  தன் இணைப்பு முயற்சியை மேற்கொண்டுவந்தார். கடைசியாக நடந்த சந்திப்பில் செல்வி,  அழகரியிடம்  உருக்கமாய் பேசியதாக உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தன் தந்தையின் உடல் நலத்தை காரணம் காட்டிப்பேசிய அவர்,  "அரசியலும் கழகமும் அடுத்த பிரச்னை. சகோதரர்கள் இருவரும் இப்படி இருப்பது அப்பாவையும் அம்மாவையும் மேலும் உடல்நலக்குறைவாக்குள்ளாக்கிவிடும். எப்படியிருந்த நீங்கள்,   அரசியலுக்காக  இப்படி பிரிந்து கிடப்பது நியாயமா....அரசியல் ரீதியாக கட்சியும் அப்பாவும் இப்படி தளர்ந்து கிடக்கும் நேரத்தில் இது தொடர்வது நல்லதல்ல. அப்பா எத்தனை கஷ்டங்களுக்கிடையில் இந்த இடத்திற்கு வந்தார். நீங்கள் அப்படியா வந்தீர்கள்....இத்தனை உயரத்தை அப்பாவினால் நீங்கள் இருவரும் எட்டிப்பிடித்தபின் அவருக்கு இப்படி வேதனையை தருவதுதான் நீங்கள் காட்டும் நன்றிக்கடனா?” என்று மனம்வெதும்பி பேசிய செல்வி, "ஸ்டாலினுடன் நீங்கள் சுமூகத்தை கடைபிடித்தால் மற்ற விஷயங்கள் தன்னால் நிறைவேறும். இதுதொடர்ந்தால் நம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினருக்கிடையேயும் ஆரோக்கியமான நட்பு நீடிக்காது போய்விடும்” என்று சென்டிமென்ட்டாக சொன்னாராம்.  

அழகிரி வெளிநாடு போவதற்கு சில நாட்களுக்கு முன் நடந்த இந்த சந்திப்பு,  அழகிரியின் மனதை மாற்றியதாக சொல்கிறார்கள். மனைவி காந்தி,  மகன் தயாநிதியும் இதையே வலியுறுத்தவே,  அழகிரி அத்தனையையும் அமைதியாக கேட்டுக்கொண்டாராம்.

அதன்பின்னரே திமுக மீதான கோபத்தை குறைத்துக்கொண்ட அழகிரி,  கவனத்தை வேறு பணிகளில் செலுத்த துவங்கினார். வெளிநாட்டுப் பயணம், மகன் தயாநிதி மீதான வழக்கு விவகாரம், சில சொத்து பரிமாற்றம் என அரசியலிலிருந்து ஒதுங்கியவராக இருந்தார். அவரிடம் தென்பட்ட இந்த புதிய மாற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது கருணாநிதியிடம் தெரிவித்து,  அவரது மனதை மாற்றும் முயற்சியில் செல்வியே ஈடுபட்டார்.  'கட்சி தேக்கமான நிலையில் இருக்கும்போது,  அண்ணன் தேவையின்றி வெளியில் இருப்பது தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாக கட்சிக்கும் நல்லதல்ல' என்று திரும்ப திரும்ப சொன்னாராம் செல்வி. பழம் நழுவி இப்போது பாலில் விழுந்திருக்கிறது. 

"எடுத்த எடுப்பில் அழகிரியை இணைத்துக்கொள்வதும், பொறுப்புகளை தருவதும் தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகள் விமர்சனத்திற்கு ஆளாகிவிடும். கடந்த தேர்தலில் விஜயகாந்துடனான கூட்டணி குறித்து அவர் கடுமையாக விமர்சித்ததால், இம்முறை திமுக கூட்டணி குறித்த நடவடிக்கைகள் முடிந்தபின்  அதுபற்றி பேசலாம். அவரை சந்திக்கிறேன். இப்போதைக்கு அவசரம் வேண்டாம். அதனால் முதலில் குடும்பத்தினருடன் சுமூக சூழலை அவர் ஏற்படுத்தட்டும். ஸ்டாலினும் சமாதானம் அடைந்த பின் அடுத்த கட்டத்தை பற்றி பேசலாம்” என இதற்கு கருணாநிதி பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. அதேசமயம் ஸ்டாலினிடம் கருணாநிதி இதுபற்றி பேசும்பொதெல்லாம் அதை தவிர்த்த ஸ்டாலினிடமிருந்து எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை.
ஆனால் அரசியல் அதிர்ச்சியாக, நேற்று மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக ஐக்கியமான தகவல் வெளியானதும் பெரிதும் அப்செட் ஆன கருணாநிதி,  உடனடியாக செல்வியை அழைத்து,  'அண்ணனை வந்து என்னை பார்க்க சொல்'  என்று கூறினாராம். இதையடுத்துதான் இன்று அழகிரி - கருணாநிதி சந்திப்பு நடந்தது.  இந்த சந்திப்பில் ஸ்டாலினையும் பங்கெடுத்துக்கொள்ளச்செய்ய குடும்பத்தினர் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆனாலும் பிடிகொடுக்காமல் சென்றுவிட்டாராம் ஸ்டாலின்.
அதன்பின் கருணாநிதி எடுத்த ஒரு ஆயுதம்தான் ஸ்டாலினை அசைத்துப்பார்த்தது என்கிறார்கள். நேற்று மாலை முஸ்லீம் கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக பேச அப்பாயிண்மெண்ட் தரப்பட்டிருந்தது. சரியான நேரத்திற்கு அவர்கள் வந்து காத்திருந்தனர். அவர்களுடன் பங்கீடு தொடர்பாக பேச ஸ்டாலின் , துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் காத்திருந்தனர். சரியான நேரத்திற்கு கீழே இறங்கி வந்த கருணாநிதி அங்கிருந்த யாரையும் முகம் கொடுத்து பார்க்கவில்லை. அருகில் சென்று பேச முயற்சித்த ஸ்டாலினை முறைத்தபடி,  விடுவிடுவென தன் வண்டியை எடுக்கச்சொல்லி யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினாராம். தெருமுனைக்கு வந்தபின்தான் வண்டியை சி.ஐ.டி காலனி வீட்டிற்கு போகச்சொன்னாராம். அதிர்ந்து போனார்கள் ஸ்டாலின் அன்கோவினர்.
அரை மணிநேரத்ததில் மீண்டும் திரும்பிவந்து முஸ்லீம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்தார் கருணாநிதி. கருணாநிதியின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. நேற்று இரவு 8 மணிக்கு கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து கருணாநிதியை சந்தித்தார்  ஸ்டாலின். அவரிடம்  குடும்ப உறுப்பினர்கள் சுமார் ஒண்ணரை மணிநேரம் பேசியிருக்கிறார்கள். 
ஒருகட்டத்தில் ஸ்டாலினிடம் பொங்கித்தீர்த்துவிட்டாராம் கருணாநிதி.
“ பாராளுமன்றத்தேர்தலை உன்னை நம்பி ஒப்படைத்தேன். என்ன ஆச்சு ரிசல்ட்...இப்போது சட்டமன்றத்தேர்தல்லயாவது பலமான கூட்டணியை உருவாக்குவன்னு எதிர்பார்த்தேன். நான் ஒண்ணு பேச  நி ஒண்ணு பேசன்னு அசிங்கமாயிடுச்சி. இப்போ தேமுதிகவை இழந்துட்டு தனியா நிக்கிறோம். இந்த நேரத்துலயும் நீ உன் பிரச்னையை பத்திமட்டும்தான் சிந்திக்கிற...உன் பேச்சை கேட்டதுபோதும். இனி நான் சொல்றதை மட்டும் கேளுங்க நீங்களும் உங்க ஆளுங்களும் என்றவர்,  “எனக்கு உங்களையெல்லாம் விட கட்சி நலனும் முக்கியம்" என்றாராம் காட்டமாக..
எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்ட ஸ்டாலின்," எதையாவது செய்யுங்க... நான் இனி குறுக்க வரலை. என்னவோ செய்ங்க...ஆனா ஒண்ணு,  பதவி அது இதுன்னு கொடுத்து மறுபடியும் அவர் பழையபடி மாறாம பார்த்துக்கங்க... ஆனா நான் பேச்சுவார்த்தைக்கு முடிந்தால் மட்டுமே வருவேன்" என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பிப்போனாராம். 

இந்நிலையில்தான் இன்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்திற்கு தனியாக வந்த அழகிரி,  வீட்டின் பின்வாசல் வழியாகவே வீட்டிற்குள் நுழைந்தார். நேரே தன் தாயிடம் நலம் விசாரித்துவிட்டு,  தன் தந்தையின் அறைக்குள் நுழைந்திருக்கிறார்.  சுமார் 45 நிமிட நேரம் நடந்த இந்த சந்திப்பில்,  முதல் 5  நிமிடங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லையாம். பின்னர் அழகிரியே மவுனத்தை உடைத்திருக்கிறார். 'நல்லா இருக்கீங்களா...?'  என்றபடி தந்தையின் காலை தொட்டு வணங்கினாராம். பின்னர் 40 நிமிடங்கள் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு,  கனத்த மவுனத்துடன்  வந்த வழியே விறுவிறுவென வெளியேறினார். அழகிரி வந்து சென்ற தகவலை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே,  ஸ்டாலின்  தன் தந்தையை வந்து சந்தித்துப்பேசினார்.  இதனையடுத்து அரைமணிநேரத்தில் வெளியேறினார் அங்கிருந்து. 

வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோதும் ஸ்டாலின் முகம் இறுக்கமாகவே இருந்தது. ஆனாலும் அழகிரியின் ரீ என்ட்ரிக்கு முன்புபோல் ஸ்டாலினிடம் எதிர்ப்பு இருக்காது என்கிறார்கள். அதன் முதற்கட்டமாகத்தான், அழகிரி பற்றிய கேள்விகளுக்கு கடந்த காலங்களில்  'கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்' என எரிச்சலாக பதில் தரும் ஸ்டாலின்,  இந்தமுறை “அழகிரி அவரது தாய் தந்தையை சந்திக்க வந்திருக்கிறார். இந்த சந்திப்பு தனிப்பட்ட விஷயம். சந்திப்பில் அரசியல் குறித்து பேசப்படவில்லை. நீங்கள் எதையாவது எழுதிவைத்துவிடாதீர்கள் ”என சற்று நிதானமாக பதிலளித்தார். இதுவே ஸ்டாலினிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தின் அறிகுறி என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " இதுகுறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். 
 
தன்னை சந்தித்த அழகிரியிடம்,  "கட்சி இக்கட்டான நிலையில் இப்போது உள்ளது. ஆட்சி அதிகாரமும் இல்லாமல், கட்சியும் பலவீனமான நிலையில் தனித்துவிடப்பட்டிருக்கிற நாம்,  முதலில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதை முதல்நோக்கமாக கொள்வோம். அதற்காக பாடுபடு. உனக்கான அங்கீகாரம் தானாக வரும். அது என்பொறுப்பு " என்றாராம் கருணாநிதி. நல்லபிள்ளையாய் தலையாட்டிவிட்டு சென்றாராம் அழகிரி.  
  
இதனிடையே அழகரியை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்வது பற்றி பேசுவதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தகவல் தரப்பட்டுள்ளது என்கிறார்கள்.
அழகிரி- கருணாநிதி சந்திப்பு கட்சியினர் மத்தியிலும் உற்சாகமாக பேசப்படுகிறது. அழகிரி இத்தனை நாள் வெளியில் இருந்ததாலோ என்னவோ கட்சி பலவீனமாக இருக்கும் நிலையில்,  அவரது வரவு திமுகவினர் மத்தியில் கொஞ்சம் பலம் பெற்ற உற்சாகத்தை தந்திருக்கிறது. 'எல்லாம் எங்க செல்வி அக்கா சாதனை' என செல்வி மீது உச்சிமோந்து பேசுகிறார்கள் உடன்பிறப்புகள்.

ad

ad