புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

கருணாநிதியுடன் மு.க அழகிரி திடீர் சந்திப்பு: மீண்டும் கண்கள் பனிக்குமா... இதயம் இனிக்குமா?

கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிரி பிறந்த நாளுக்கு அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் தி.மு.க.வில் சலசப்பை
ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் பேட்டிகளை தொடர்ந்து தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை, அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

கட்சிக்கு எதிராக துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை அழகிரி விமர்சித்தார் என்றும், தி.மு.க செயல்வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று அழகிரி கூறினார் என்றும் இதனால், தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாகவும் அன்பழகன் அப்போது தெரிவித்திருந்தார். அதன் பின்னரும் அழகிரி தொடர்ந்து கட்சித் தலைமைக்கு எதிராக பேசி வந்ததால் அவர் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவ்வப்போது அழகிரி, திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நிலையில், அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கவும், குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் கருணாநிதியின் குடும்பத்தில் உள்ளவர்களே சில முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன.  ஆனாலும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருந்து வந்ததாக கூறப்பட்டது. 

இதனிடையே வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. ஆனால், பலமான கூட்டணி அமையாததால் கட்சித் தலைவர் கருணாநிதி கவலை அடைந்துள்ளார். திமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த்  கூறி வந்தபோதிலும், நேற்று முன்தினம் வரை விஜயகாந்த் திமுக கூட்டணிக்குள் வருவார் என கருணாநிதி நம்பிக்கை தெரிவித்து வந்தார். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து போனது. மக்கள் நலக் கூட்டணியுடன் நேற்று கைகோர்த்தார் விஜயகாந்த். இது திமுகவினரை ஏகத்துக்கும் அப்செட் ஆக்கியது.
அழகிரி சந்திப்பு
இந்நிலையில்தான் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் அவரை மு.க அழகிரி இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கருணாநிதியின் உடல் நலம் குறித்து அழகிரி விசாரித்ததாக கூறப்படுகிறது. கருணாநிதியுடனான அழகிரியின் திடீர் சந்திப்பு தற்போது தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும்  தேர்தல் நிலவரம் குறித்து அழகிரி கருணாநிதியுடன் பேசியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பலமான கூட்டணி இல்லாத நிலையில் அழகிரியையும் வெளியே விட்டு வைத்தால், அவர் ஏதாவது கூறி குழப்பத்தை ஏற்படுத்துவதை தடுக்கலாம் என்ற நோக்கத்திலும், மதுரையில் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென்மாவட்டங்களில் அழகிரியை  பழைய கோதாவில் இறக்கி விட்டாலாவது கணிசமான இடங்களை கைப்பற்ற முடியுமா என்ற நோக்கத்திலும் அவரை திமுகவில் மீண்டும் சேர்க்க கருணாநிதி திட்டமிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனவே விரைவிலேயே கருணாநிதியிடமிருந்து ' கண்கள் பனித்தது இதயம் இனித்தது' என்ற அறிவிப்பு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதே சமயம் இதனை ஸ்டாலின் விரும்பமாட்டார் என்பதால் அவரை சமாதனப்படுத்துவதற்கான முயற்சியை கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் மூலம் கருணாநிதி மேற்கொள்ளக்கூடும் எனத்தெரிகிறது. மேலும் அன்பழகனை தன்னை வந்து சந்திக்குமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டு உள்ளதாகவும், அன்பழகன் - கருணாநிதி சந்திப்புக்கு பின்னர் அழகிரி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பு ஏன்? அழகிரி விளக்கம்
இதனிடையே கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "தந்தை என்ற முறையில் சந்தித்துப் பேசினேன்" என்று கூறினார். 
ஸ்டாலின் கசப்பு
அதேப்போன்று மு.க. ஸ்டாலினிடம் இதுகுறித்து கேட்டபோது, " இது முற்றிலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. அரசியல் பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. நீங்களாகவே ( பத்திரிகையாளர்கள்) ஏதாவது கண், காது, மூக்கு வைத்து எழுதிவிடாதீர்கள்" என்று கூறினார்.
இதன்மூலம் அழகிரியின் ரீ என்ட்ரியை ஸ்டாலின் அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அன்பழகன் சமாதானப்படுத்தினால், தேர்தலை கருத்தில்கொண்டு ஸ்டாலின் சமாதானமாகலாம்.

ad

ad