புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2016

த மா காங்கிரசுக்கு ஜெயலலிதா15 தொகுதிகளை கொடுத்தார் ..இறுதி நேர அழைப்பு

மூப்பனாரே பரவாயில்லை' என்று சொல்லுமளவுக்கு, திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருந்த வாசனுக்கு, கார்டன் கதவுகளை
திறந்துவிட்டிருக்கிறார் ஜெயலலிதா. 'அமாவாசை தினமான நாளை சந்திப்பு நடக்கும்' என உற்சாகத்தில் இருக்கிறார்கள் த.மா.காவினர். 

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்தபோது, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். ஆனாலும், சில நிமிடங்களில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ' ஜெயலலிதாவின் கடந்த காலங்களில் இதுபோல் பலமுறை நடந்திருக்கிறது. நாம் அவசரப்பட வேண்டாம். கட்டாயம் நமது கோரிக்கையை ஏற்பார்' என கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை கொடுத்தார் வாசன். அவரது நம்பிக்கையும் வீண்போகவில்லை. 'நாளை அமாவாசை தினம் என்பதால் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார் ஜெயலலிதா' என உற்சாகத்தோடு பேசினார் த.மா.காவின் மூத்த தலைவர் ஒருவர். அ.தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது முதல் தற்போது வரை நடந்த அனைத்து சம்பவங்களையும் நம்மிடம் விவரித்தார்.
" வேட்பாளர்களை அதிரடியாக அறிவிப்பதும், பின்னர் வேட்பாளர் பட்டியலை மாற்றுவதும் அ.தி.மு.க தலைமைக்குப் புதிதல்ல. இப்படிச் செய்வதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என ஜெயலலிதா உறுதியாக நம்புகிறார். இந்த சென்டிமெண்ட் வேட்பாளர்களை மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளையும் பாடாய்படுத்துகிறது. 2001-ம் ஆண்டு காங்கிரஸ், த.மா.கா கூட்டணியை உறுதி செய்தும், முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் வந்து பேச முயற்சித்தும் ஜெயலலிதா சந்திக்க மறுத்துட்டார். இதன்பின்னர் 47 இடங்கள் என முடிவு செய்து, மூப்பனாரிடம்தான் சீட்டுகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் அ.தி.மு.க வென்றது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.  பின்னர், தே.மு.தி.கவுக்கு 43 தொகுதிகளைக் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. இதையெல்லாம் பார்த்ததுதான், இந்தத் தேர்தலிலும் இதே யுக்தியைப் பயன்படுத்த முடிவு செய்தார் ஜெயலலிதா. இதை உணர்ந்து எங்கள் தலைவரும் அமைதியாக இருந்தார். 

தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்களோடு பேசிக் கொண்டு இருந்தோம். முதலில், 32 மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதி என 32 சீட் கேட்டோம். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் 25 என்றோம். அதற்கு ஒத்துவரவில்லை. 5 சீட், 6 சீட், 8 சீட் எனப் பேசினார்கள். இறுதியில், 15 இடங்களை ஒதுக்க ஜெயலலிதா சம்மதித்துவிட்டார். எங்கள் விருப்பப்படியே தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவும் சம்மதம் கொடுத்துவிட்டார். பயிர்களில் தென்னை பணப் பயிர். நீண்டகாலம் நின்று வளரக் கூடியது. அந்த வகையில், நாங்கள் கட்சி தொடங்கி 15 மாதங்கள்தான் ஆகிறது. தென்னம்பிள்ளையாக நாங்கள் இருக்கிறோம். அவசரப்பட்டு கூட்டணியை முடிவு செய்து களத்தில் நிற்க முடியாது. நின்று நிதானமாகத்தான் முடிவு செய்ய முடியும். எங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால்தான் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. பழைய அ.தி.மு.கவாக இருந்தால், எங்களுக்கு நல்லமுறையில் சீட் கிடைத்திருக்கும். இந்தத் தேர்தலில் எதிரிகள் பிரிந்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதனால் அவர் கொடுக்கும் இடங்களைப் பெற்றாக வேண்டிய சூழல் எங்களுக்கு இருக்கிறது. பெரும்பான்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், அனைத்து இடங்களிலும் வெல்வோம்" என்றார் உற்சாகத்தோடு. 

அமாவாசை சென்டிமென்ட், வேட்பாளர் மாற்றம், கூட்டணிக் கட்சிக்கு அழைப்பு என ஜெயலலிதாவின் முரண்பட்ட அதிரடிகள், கோட்டைக்கு வழி சொல்லுமா?

ad

ad