புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2016

30 நாள்களுக்குள் 33 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைது

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் தொடர் கைதுகளால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 30
நாள்களுக்குள் 33 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கும், கொழும்பு நான்காம் மாடிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சிலர் வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில தினங்களாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். 
கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், இனந்தெரியாதோரால் அம்பாறையில் அவரின் வீட்டில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். 
பின்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதி நகுலன், யாழ்ப்பாணம், நீர்வேலியில் வைத்து பயங்கரவாத தடுப் புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். 
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த கலையரசனும் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் திருகோணமலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று கைதுசெய்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டவருமான சுப்பிரமணியம் சிவகரன் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணியளவில் மன்னாரில் அவரது அச்சகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார். 
இதன்போது அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான துண்டு குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டிருந்தது. 
வடமராட்சி கிழக்கிலும் மூவர் திடீரெனக் கைது இதேவேளை, யாழ். வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு மற்றும் ஆழியவளைப் பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் மூவர் திருகோணமலையில் இருந்து சென்ற பொலிஸ் குழுவினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதுகளை உறுதிப்படுத்திய பளை பொலிஸார், அவை தொடர்பில் குறித்த பொலிஸ் குழுவால் அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவரும், ஆழியவளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் என்று தமக்கு திருகோணமலையிலிருந்து தகவல் வழங்கப்பட்டது என்று பளை பொலிஸார் குறிப்பிட்டனர். 
கட்டைக்காடு, முள்ளியான் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் இராஜநாயகம் (வயது - 42) மற்றும் வீ.மைக்கல் (வயது - 45) ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் காலை வாகனமொன்றில் சென்ற பொலிஸ் குழுவினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கட்டைக்காடு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
அதேவேளை, நேற்று நண்பகல் ஆழியவளைப் பகுதியில் வைத்தும் ஒருவரை இந்தக் குழுவினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு தொடர் கைதுகள் இடம்பெறுகின்றபோதும், அவர்கள் என்ன காரணத்துக்காகக் கைதுசெய்யப்படுகின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. 
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர் எனத் தெரிவித்து, கைதானவர்களின் உறவினர்கள் 6 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த இருவரும், கல்வியங்காட்டைச்சேர்ந்த ஒருவரும், மானிப்பாயைச் சேர்ந்த ஒருவரும், நீர்வேலியைச் சேர்ந்த ஒருவருமாக 6 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்ற முறைப்பாடு கிடைத்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி யாழ். தென்மராட்சி மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட பின்னர் இதுவரை 33 பேர் வடக்கு, கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad