புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2016

'அ.தி.மு.கவில் தா.பாண்டியன்!?' -கூட்டணியைக் குழப்பும் உளவுத்துறை

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன், அ.தி.மு.கவில் இணைவதாக வெளியாகும் தகவலால்
கலவரப்படுகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். 'தேர்தல் நெருக்கத்தில் உளவுத்துறை இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதாக'வும் அவர்கள் கொந்தளிக்கின்றனர். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் இந்திய கம்யூனிஸ்ட்சியின் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனுக்கு உள்ள நட்பு அனைவரும் அறிந்ததுதான். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தில் தா.பாண்டியன் மகன் டேவிட் ஜவஹர்,  பதிவாளர் பதவியில் அமர வைக்கப்பட்டார். ' மகனுக்கு வேலை வாங்கிவிட்டார் பாண்டியன்' என்றெல்லாம் அப்போது தகவல்கள் பறந்தது. பாண்டியனின் பிறந்தநாள் நிகழ்வுக்காக அவரது வீட்டுக்கே ஜெயலலிதா சென்றதை பிற அரசியல் கட்சிகள் ஆச்சர்யத்தோடு பார்த்தன. இந்நிலையில், 'அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தா.பாண்டியன் விரும்பினார். அதற்கு மாறாக மக்கள் நலக் கூட்டணி அமைந்ததால் அவர் அதிருப்தியில் இருக்கிறார்' என்ற தகவல்கள் வெளியானது. குறிப்பாக, சிறுதாவூர் பங்களா கண்டெய்னர் குறித்த தகவல்களை வைகோ வெளியிட்டபோது, 'ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது' என தா.பாண்டியன் விளக்கினார். இதனைக் கணக்கில் வைத்தே, "அ.தி.மு.கவில் ஓரிரு நாளில் தா.பாண்டியன் இணைவார்" என வாட்ஸ்அப்பில் கொளுத்திப் போட்டனர். 

இதுகுறித்து தா.பாண்டியனிடம் விளக்கம் கேட்பதற்காக தொடர்பு கொண்டோம். " இன்று காலை 11 மணிக்கு அனைவரையும் அழைத்து இதுகுறித்து அவர் விளக்குவார். அ.தி.மு.கவில் இணைகிறார் என்ற தகவல் முற்றிலும் தவறானது" என்றார் அவரது உதவியாளர்.
இதையடுத்து, சி.பி.ஐ கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியனிடம் பேசினோம்.
" மாணவப் பருவத்தில் இருந்தே பொதுவுடமை இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் தோழர்.தா.பா. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருக்கிறார். அவர் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள்தான். ஒரு கட்சியைப் பற்றி ஏற்ற இறக்கமாக ஒருவர் பேசுகிறார் என்றாலே, அவர் அந்தக் கட்சிக்குப் போய்விடுவார் என்றெல்லாம் சொல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அவர். அவரது பிரசாரத்தின் வலிமையைக் குறைக்கும் வகையில் சிலர் இதுபோன்ற தகவல்களைப் பரப்புகின்றனர். முற்றிலும் தவறான தகவல்" என வேதனைப்பட்டார். 

' அ.தி.மு.க ஆதரவு மனநிலையில் ஒருவர் இருந்தாலே அவர் அ.தி.மு.ககாரர்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்?' என அசரடிக்கும் கேள்விகளும் கம்யூனிஸ்ட் தரப்பில் இருந்தே வருகிறது. என்னத்த சொல்ல?

ad

ad