புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மே, 2016

தென்மண்டலத்தில் அ.தி.மு.கவை அலற வைக்கும் 70 தொகுதிகள்...! -எகிற வைத்த 7 காரணங்கள்

கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கொதிக்கின்றனர்
சமுதாய தலைவர்கள். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது அ.தி.மு.க தலைமை. 'உள்ளூர் தலைவர்களுடனான சந்திப்பில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.கவினர். 

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடிய நாடார் சமூகத்தின் தலைவர்கள், ' அ.தி.மு.க ஆட்சியில் நமது சமூகத்தைப் புறக்கணிக்கும் எல்லா வேலைகளையும் செய்துவிட்டார்கள். எந்த இடத்திலும் நமது ஆட்கள் முன்னிறுத்தப்படவில்லை. கருவேப்பிலையாகக் கருதப்பட்ட சரத்குமாரை கடைசி நேரத்தில் சேர்த்துக் கொண்டதன் மூலம் நம்மை சமாதானப்படுத்த நினைக்கிறார்கள். இன்னொரு சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலையில் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் செயல்படுகிறார்கள். இதன்மூலம் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படுகிறது. இந்தமுறை நாம் யார் என்பதைப் புரிய வைக்க வேண்டும்' என விவாதித்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து அதிர்ந்து போனது உளவுத்துறை. 'சென்னை, கோவை, நெல்லை உள்பட 70 தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு பாதிப்பிருக்கிறது. குறிப்பாக, தென்மண்டல கூடாரம் சரிவதற்கான வாய்ப்புகளே அதிகம்' எனவும் மேலிடத்திற்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். 

கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம், அ.தி.மு.க எதிர்ப்புக்கான காரணங்களைக் கேட்டோம். அவர்கள் சொன்ன விவரங்கள் அப்படியே...! 

1. 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.கவின் வெற்றிக்கு முக்கியமான காரணமே, எங்கள் சமுதாய வாக்குகள்தான். மாநிலம் முழுவதும் பரவலாக இருக்கும் பெரும்பான்மை சமூகமாகவும் இருக்கிறோம். தி.மு.க எதிர்ப்பு, சரத் கூட்டணியில் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் அ.தி.மு.கவை பெருவாரியாக வெற்றி பெற வைத்தோம். ஆனால், வெற்றிக்குப் பிறகு எங்களைக் கருவேப்பிலையாக நினைத்துவிட்டார் ஜெயலலிதா. அவர் ஒருமுறை உதாசீனப்படுத்திவிட்டால், அவ்வளவு எளிதில் யாரையும் கண்டு கொள்ள மாட்டார். எங்களின் கொந்தளிப்பை சரிக்கட்டத்தான் மீண்டும் சரத்தை அழைத்துப் பேசி சீட் கொடுத்தார். 

2. எங்கள் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதிகளில்கூட மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. தூத்துக்குடி சண்முகநாதன் மட்டும்தான் மா.செவாக இருக்கிறார். நாங்கள் வலுவாக இருக்கும் பகுதிகளில் மாற்று சமுதாயத்திற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள். அமைச்சரவையிலும் இவர் மட்டும்தான் இருக்கிறார். இதே நடைமுறைதான், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும். 

3. சட்டசபையில் காமராஜரை இழிவுபடுத்தும்விதமாக, 'மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்தான்' என்று பேசினார் ஜெயலலிதா. சட்டசபை குறிப்புகளிலும் இது இடம் பெற்றிருக்கிறது. திருச்செந்தூர் தேர்தலில் எம்.ஜி.ஆர் பேசும்போது, 'காமராஜரின் திட்டத்தைத்தான் நான் விரிவுபடுத்துகிறேன்' என்றார். ஆனால், அ.தி.மு.க அரசு காமராஜரை இருட்டடிப்பு செய்தது.

4. அதேபோல், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் இருக்கிறது. இதை சற்று விரிவாக்கி எம்.ஜி.ஆர் பெயரைக் கொண்டு வர முயற்சித்தார் ஜெயலலிதா. 'தலைவர்களின் பெயர்களைச் சூடி சச்சரவை ஏற்படுத்த வேண்டாம்' என கருணாநிதி அறிக்கை வெளியிட்ட பிறகு, விவகாரம் அமுங்கியது. மேலும், ஆவடி நகராட்சி கட்டடத்திற்கு காமராஜர் பெயர் வைக்கும் முயற்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 

5. நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கு எதிராக ஆளுங்கட்சி செய்த வேலைகளால்தான் தோல்வி அடைந்தார். மனோரமா இறுதி ஊர்வலத்தில் அவமானப்படுத்தப்பட்டார் சரத். ஜெயலலிதா நினைத்திருந்தால் சரத்குமாருக்கு ஆதரவாகப் பேசியிருக்கலாம். வேண்டுமென்றே சரத்துக்கு எதிராக செயல்பட்டார். 

6. சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கள் சமுதாயத்தின் பிரதிநிதிகள் ஆளுங்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் முன்பு இருந்தார்கள். அவர்களை முழுவதுமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது அ.தி.மு.க தலைமை. கட்சி சார்பில் போட்டியிடவும் வாய்ப்பு தரவில்லை. அதிகாரத்திற்குள் நாங்கள் வருவதையே ஆளுங்கட்சி விரும்பவில்லை. பிறகு எதற்காக எங்கள் ஓட்டுக்களை விரயமாக்க வேண்டும்?. 

7. 'அ.தி.மு.கவைத் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்' என்றுதான் அறிவுறுத்தியிருக்கிறோம். தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் என யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறோம். இப்போது எங்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளையும் ஆளுங்கட்சி நடத்துகிறது. இந்தமுறை ஏமாந்துவிட்டால் மீண்டும் எங்கள் பலத்தை நிரூபிக்க முடியாது. தென்மண்டலத்தில் 50 தொகுதிகள், மேற்கு மண்டலத்தில் 15 தொகுதிகள், சென்னையின் 10 தொகுதிகள் என 70 தொகுதிகளில் நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறோம். அ.தி.மு.க தலைமையோடு தர்மசங்கடத்தில்தான் கூட்டணி சேர்ந்திருக்கிறார் சரத். இந்தமுறை திருச்செந்தூரில் அவர் வெற்றி பெறுவது கடினம்தான்" என அடுக்கிக் கொண்டே போனார். 

தேர்தல் அரசியலில் போடப்படும் கூட்டல் கழித்தல் கணக்குகள் எல்லாம் யார் பக்கம் திரும்பும்? என்பதும் தென்மண்டலத்தின் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.