புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மே, 2016

டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றும் வரை போராட்டங்கள் தொடரும்: மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கையில்,  ‘’மீஞ்சூர் அருகில் உள்ள நாப்பாளையம் மற்றும் மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. 

 கடந்த ஒரு வருட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு தொடந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மே 5ம் தேதிக்குள் கடையை மூட வேண்டும் என்று எச்சரித்து மனு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மதுரவாயல் நொளம்பூர் பகுதியிலும், மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் பகுதியில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மக்கள் மனு கொடுத்து இருந்தனர். அதன் பின்னும் கடை அகற்றப்படாததால், அப்பகுதி மக்கள் இணைந்து கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. பெண்கள் என்றும் பாராமல், அவர்களின் ஆடைகளைக் கிழுத்தும், அவர்களைக் கீழே தள்ளி பூட்ஸ் காலால் உதைத்தும், வக்கிரமாக நடந்து கொண்டுள்ளனர். 

மதுரவாயலில் நடந்த போராட்டத்தில் சிறுவன் ஆகாஷ் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சத்யா என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மண்டையை உடைத்து இரத்த காயம் ஏற்படுத்தினர். மீஞ்சூரில் நடந்த போராட்டத்தில் ஒரு பெண்ணை ஆண் போலீசு வக்கிரமாக தாக்கியுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஜெயா போலீசின் இந்த நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. 

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய காவல்துறை இன்று டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடுகின்ற மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானதாக மாறிப்போய் உள்ளது. காவல்துறை மட்டும் அல்ல இந்த ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது. இவற்றை அகற்றிவிட்டு மக்கள் தங்களுடைய கையில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஜெயா போலீசின் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலால், ஒரு நாளும் மக்கள் அதிகாரம் அமைப்பும், மக்களும் பின்வாங்கப்போவதில்லை. டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றும் வரை இந்த போராட்டங்கள் தொடரும்’’என்று தெரிவித் துள்ளார்.