5 மே, 2016

என்னிடம் இருப்பது நான் உடுத்தி இருக்கும் உடை மட்டும்தான் : திருமாவளவன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.  இன்று காலை ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் உள்ள ஆனந்தகுடி பகுதியில் பிரச்சாரம் செய்தார். 

அப்போது அவர்,  ‘’நான் சிதம்பரம் எம்.பி. தொகுதியில் 2 முறை போட்டியிட்டேன். 1 முறை வெற்றி பெற்றேன். 2–வது முறையாக வெற்றி வாய்ப்பை இழந்தேன். அந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்தாலும் சிதம்பரம் எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றிருந்தேன்.

இந்த தேர்தலில் நான் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப் போவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் தொகுதி என்னை தாய் போன்று அரவணைக்கும் தொகுதியாகும். அதனால் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

என்னை எதிர்த்து நிற்பவர்கள் என்னை எப்படியாவது வீழ்த்தி விடவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். பலகோடி செலவு செய்கிறார்கள். என்னிடம் இருப்பது நான் உடுத்தி இருக்கும் உடை மட்டும்தான். நான் உங்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன்.

பணத்துக்காக நீங்கள் வாக்களித்தால் ஓட்டுகள் சிதறும். வெற்றி வாய்ப்பு பாதிக்கும். எனவே நீங்கள் ஓட்டுகளை சிதறாமல் மோதிர சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அப்போது நான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’என்று பேசினார்.