5 மே, 2016

அதிமுகவின் அதிகார மையம் யார்? உச்ச நீதிமன்றத்தில் ஆச்சாரியா அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான சசிகலா தான் அதிமுகவின் அதிகார
அமையம் என இந்த வழக்கில் கர்நாடகா தரப்பில் வாதாடும், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்தார்.
கர்நாடக தரப்பில் பதில் வாதத்தை தாக்கல் செய்ய ஆச்சாரியாவுக்கு 2வது சுற்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று ஆச்சாரியா தமது வாதத்தை முன் வைத்தார்.
2வது நாளாக ஆச்சாரியா தமது வாதத்தை தொடர்ந்தார். அப்போது, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் சொத்து மதிப்பு ரூ.66 லட்சம் என சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் சொத்துமதிப்பை ரூ.13 லட்சம் என குறைத்து காட்டியுள்ளனர் என்று ஆச்சார்யா குற்றம்சாட்டினார். இதையடுத்து முரண்பட்ட தகவலை கூறியது ஏன் என உச்சநீதிமன்றம் சசிகலா தரப்பிடம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து வாதத்தை தொடர்ந்த ஆச்சாரியா, சசிகலா தரப்பு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர் சசிகலா. இவர் ஒரு அதிகாரம் மிக்க பெண்ணாக உலாவருபவர். அதிமுகவில் சசிகலா சின்னம்மா என்று அழைக்கப்படும் அளவுக்கு செல்வாக்கு உண்டு. அதிமுக கட்சியையும், போயஸ் கார்டனையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சசிகலா.
இந்த நிலையில்தான், சசிகலா உள்ளிட்டவர்கள், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சட்டத்திற்கு உட்பட்டதாக காட்டிக்கொள்வதற்காக பல போலி நிறுவனங்களை உருவாக்கினர். இவற்றில் எந்த பணியும் நடைபெறாது என்றபோதிலும், பணம் வருவதற்கான கணக்கை காட்டுவதற்காக இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்புநீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆச்சாரியா வாதிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 23 ஆம் திகதிமுதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் வாதத்தை முன்வைத்தனர்.
வியாழக்கிழமை தனது வாதத்தை ஆச்சாரியா நிறைவு செய்வார். அப்போது, தீர்ப்பு தேதி குறித்து நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது