புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2016

மூன்று தடவைகள் கொல்லப்பட்ட பிரபாகரன்! மரபணு பரிசோதனை நடத்த கோரிக்கை

இறுதிப் போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்று இராணுவத்தினரால் காண்பிக்கப்பட்ட
உடல் அவருடையது இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என காண்பிக்கப்பட்ட உடலை மரபணு பரிசோதனைக்குட்படுத்த அரசு விரும்பினால் கனடா மற்றும் டென்மாக்கில் உள்ள அவரது சகோதரியும், சகோதரனும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என அறிவிக்கப்பட்டவேளை நான் இந்தியாவில் இருந்தேன். இலங்கை இராணுவத்தினர் காண்பித்தது அவரின் உடலா என்பது குறித்து எனக்கு சந்தேகங்கள் உள்ளன.
அவர் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் உலகின் எங்கோ ஒரு பகுதியில் மறைந்திருக்கின்றாரா என்பதும் உங்களுக்குத் தெரியாது.
பிரபாகரனின் உடல் எனக் காண்பிக்கப்பட்ட உடல் இன்னமும் மரபணு பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை. இந்தியா இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்தேன்.
கருணா அம்மானும் தயா மாஸ்டரும் எதனையும் தெரிவிக்கலாம். என்னால பிரபாகரனை அடையாளம் காண முடியும். அவரது கன்னத்தில் அடையாளமொன்று உள்ளது.
மேலும், முகச்சவரம் செய்யப்பட்ட உடல் ஒன்றை அவர்கள் காண்பித்தனர். அந்தச் சூழ்நிலையில் பிரபாகரன் முகச்சவரம் செய்திருப்பார் என என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியாது.
நான் இதனை என்னைப் பற்றிய விளம்பரத்திற்காகத் தெரிவிக்கவில்லை. பிரபாகரனின் மரணம் குறித்து பலரும் வெளியிட்ட அறிக்கைகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டது என்றார். சிலர் அவரது சாம்பல் கடலில் தூவப்பட்டது என்கின்றனர்.
பிரபாகரன் மாத்திரமல்ல பொட்டு அம்மானும் எங்கிருக்கின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அவரது உடலும் மீட்கப்படவில்லை. அவர்கள் தங்களை அழித்துக்கொண்டிருக்கலாம் அல்லது உலகின் எங்கோ ஒரு பகுதியில் வாழலாம்.
பிரபாகரனின் பெற்றோரின் அஸ்தி இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளது. அரசு விரும்பினால் நான் அவற்றை மரபணு பரிசோதனைக்கு வழங்கத் தயார். நான் பிரபாகரனின் உடலை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் என அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தேன். ஆனால், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு மனிதர் ஒரு தடவைதான் இறப்பார். ஆனால், பிரபாகரன் மே 17,18,19ம் திகதிகளில் இறந்தார் என்று இராணுவத்தினரும் அரச தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டனர் என்றார்.

ad

ad