புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

இது நீங்கள் எழுதிய கடிதம்தானே.. இல்லை என்று மறுக்க முடியுமா..: ஜெ.வுக்கு துரைமுருகன் கேள்வி

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய ஜெயலலிதா, கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தலைவர் கலைஞர் மீது சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாள்ரகளிடம் பேசிய எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன், கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கையின் இறையாண்மையை காக்க வேண்டும் என்று 2003ம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அப்போதைய முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். பல ஆண்டுகளாக கச்சத்தீவு பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, கச்சத்தீவு பிரச்சனையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலம் தொட்டு நடவடிக்கை எடுத்து வரும் கலைஞர் மீது பொய்யாக குற்றம் சாட்டுகிறார். 

இதே ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில், கச்சத்தீவையும் அதன் அருகே உள்ள கடல் பகுதியையும் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும், வலைகளை காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும், நிரந்தர குத்தகைக்கு பெறலாம் என்று சொல்லிவிட்டு, அடுத்ததுதான் ஆபத்தான வார்த்தையை சொல்லுகிறார், அதே நேரத்தில் கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம். ஆக கச்சத்தீவில் இலங்கை அரசுக்கு இருக்கிற இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம் என்று கடிதத்திலே எழுதியிருப்பவர் ஜெயலலிதா. இதை ஒன்றை கேட்பதற்காகத்தான் எழுந்தோம். எங்கள் தலைவரை சொல்கிறீர்களே, இது நீங்கள் எழுதிய கடிதம்தானே. இல்லை என்று மறுக்க முடியுமா. ஒரு முதலமைச்சரை குறுக்கிட்டு கேள்வி கேட்பதற்கு ஒரு உறுப்பினருக்கு உரிமை இல்லை என்றால் உள்ளே ஜனநாயகம் நடைபெறுகிறதா என்பதை நாட்டுக்கு நீங்கள்தான் (செய்தியாளர்கள்) தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். 

திமுக உறுப்பினர்கள் பதில் அளிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அபூபக்கரும் வெளிநடப்பு செய்தார்.

ad

ad