புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒருபோதும் ஓயோம் என்ற ஓர்மத்துடன் ஜெனீவாவில் அணியாவோம் ! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கபடும்’ என்பது உரிமைகள் பறிக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான வேதமாகிவிட்டதோ
எனுமளவிற்கு உலக மனசாட்சி மௌனித்துப்போயுள்ளது.
இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை சிங்கள பௌத்த பேரினவாத அரசால் தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட போது விழிதிறந்த உறக்க நிலையில் இருந்து கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த அதே உலக நாடுகளிடமும், ஐ.நா. சபையிடமுமே அதற்கான நீதியை எதிர்நோக்கியிருக்கும் கையறுநிலையில் உலகத் தமிழர்களாகிய நாம் நின்று கொண்டிருக்கின்றோம்.
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் ஆயுத பயங்கரவாதத்தில் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக வரலாற்று தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் முள்ளிவாய்காலில் மௌனிக்கப்பட்டது. இந்த ஆயுத மௌனிப்பானது புலம்பெயர் தமிழர்களின் கைகளில் நீதிக்கான அறவழிப்போராட்டமாக முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு கைமாற்றத்தின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது.
எமக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளுக்கு நீதியை  பெறும் தவிர்க்க முடியாத இடமாக ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திகழ்ந்துவருகின்றது. அந்தவகையிலேயே முள்ளிவாய்காலில் மௌனிக்க செய்யப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜெனீவாவை மையப்படுத்திய அறவழிப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நடைபெறும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களிலே வழக்கமான போராட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் இம்முறை ஜூன் 20 ஆம் திகதி ஐ.நா. முன்றலில் மாபெரும் ‘எழுக தமிழரே’ போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தி தாயகம்-தேசியம்-தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதார கோட்பாடுகளை வலிமையுடன் முன்கொண்டு சென்றுகொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகத்தினை வலுவிழக்கச் செய்வதன் மூலம் தமிழர்களது விடுதலை வேட்கையினை தணித்துவிடலாம் எனக்கருதும் உலக நாடுகள் மைத்திரி – ரணில் கூட்டாட்சியை பாதுகாக்கத்தலைப்பட்டு வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாகவே, மைத்திரி – ரணில் கூட்டாட்சியில் நல்லாட்சி என்ற பெயரிலான அரசு ஒன்றை உருவாக்கிய உலக நாடுகள் தமது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி எமது தேசிய அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் முனைப்பில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில்தான் தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு குற்றத்திற்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசை பிணையெடுக்கும் இடமாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாற்றப்பட்டுள்ளது. தற்போது கூட்டபட இருக்கும் 32 ஆவது அமர்வில் மைத்திரி-ரணில் கூட்டாட்சி அரசிற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குட்பட்ட நடவடிக்கைகள் குறித்தான வாய்மொழி மூலமான அறிக்கை வாசிக்கப்பட உள்ளது.
அரசியலமைப்புத் திருத்தம் என்ற பெயரில் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ எனும் தந்திரத்தினூடே சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தினை நிலைநாட்டும் சதிச்செயல், தாயகத்திலும் புலத்திலும் சிங்களத்தின் கைகூலிகளாகிவிட்ட தற்குறித் தமிழர்கள் சிலரின் துணையோடு அரங்கேற உள்ளது.
தமது நலன்களுக்கு சாதகமாக எதிர்வினையாற்றிவரும் மைத்திரி-ரணில் கூட்டரசை பாதுகாத்து பலப்படுத்தும் உலக நாடுகளின் அநீதியான போக்கினை கண்டித்தும், எமது இனத்தின் தேசிய அபிலாசைகளை முரசறையவும் இக்கட்டான இத்தருணத்தில் ஜூன் 20 அன்று ஐ.நா. முன்றலில் ஓரணியில் திரழ்வது வரலாற்றுக் கடமையாகும்.
ஒரே இலட்சியத்தில், ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக, எமக்கு முன் தடைக்கல்லாக உருவாகியிருக்கும் எல்லாத்தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதி கொண்ட வேங்கைகளாக மூச்சோடும் வீச்சோடும் விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒருபோதும் ஓயோம் என்ற ஓர்மத்துடன் ஜெனிவா முன்றலில் அணியமாவோம்.
தாயக விடுதலைக்காக தமது உயிரை ஈகம்செய்த மான மறவர்களின் கனவுகளை நெஞ்சில் சுமந்து புறப்பட்டு வாருங்கள் உறவுகளே. குனிந்து போகவும், வளைந்து விடவும், தலை சாய்ந்து விடவும் நாம் நாணல்கள் அல்ல, சூறைக்காற்றையே சுற்றவிட்டு தலைநிமிர்ந்து நிற்கும் நெடும் பனைகள் நாமென்று உலகின் முன் உரத்துச்சொல்ல உறுதியுடன் வாருங்கள் ஜெனீவா முன்றலுக்கு.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

ad

ad