புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து திடீர் கைது..! மதன் விவகாரத்தில் அதிரடி

வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவர்
பச்சமுத்துவிடம் நேற்று முதல் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
வேந்தர் மூவிஸ் மதன் மே 28ம் தேதி மாயமானார். அதன்பிறகு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மதனிடம் பல லட்சங்களை கொடுத்ததாக 72 பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். சிலரது புகாரில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவை நேரில் சந்தித்து விட்டு அவரது பரிந்துரை பேரிலேயே மதனிடம் பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அடுத்து மதனை கண்டுபிடித்து தரும்படி அவரது தாயார் தங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இவ்வாறு மதன் விவகாரம் தொடர்பான புகார்கள் குவிந்ததால் அனைத்தையும் விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணனை நீதிமன்றம் நியமித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் விசாரணையில் இருந்து வருகிறது. கடந்த விசாரணையின் போது நீதிபதிகள்,  போலீஸாரை கடுமையாக எச்சரித்தனர். இதுவரை ஏன் பச்சமுத்துவை விசாரிக்கவில்லை என்றும் கேள்வி கேட்டனர். இந்நிலையில் சினிமா பைனான்சிரியர் போத்ரா நேற்று (ஆகஸ்ட் 25ம் தேதி) பிரஸ்மீட் நடத்தி பச்சமுத்து மீதும், மதன் மீதும் குற்றம் சாட்டினார். இவையெல்லாம் இந்த வழக்கில் போலீசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதனால் வேறுவழியின்றி நேற்று (ஆகஸ்ட் 25ம் தேதி) மாலை 5 மணிக்கு பச்சமுத்துவை விசாரிக்க போலீஸ் முடிவு செய்தது. 
இதற்காக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டு  சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை தொடர்ந்து நடந்தது. விடிய, விடிய அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு அவர் அளிக்கும் பதில்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பச்சமுத்துவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, சைதாபேட்டை நீதிமன்றத்தில் பச்சமுத்துவை ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸ்  உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "மதன் தொடர்பாக பச்சமுத்துவிடம் விசாரணை நடந்தது. அவர் அளித்த பதில்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பிக்கப்படும். அவரிடம் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். மதன், உங்களுக்கு எப்படி அறிமுகமானார் என்ற கேள்வியில் தொடங்கி, பண விவகாரம், வேந்தர் மூவிஸ், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விசாரணைக்குத் தேவையான கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், ஐ.ஜே.கே கட்சி தொடர்பாகவும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் உடனுக்குடன் பதில் அளித்தார். மதன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்று கேட்டதற்கு மிகத் தெளிவாக விளக்கம் அளித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே திண்டுக்கல் ஐஜேகே மாவட்ட செயலாளர் பாபு, திருச்சியை சேர்ந்த டாக்டர் பார்கன் பச்சமுத்து, மதுரையை சேர்ந்த சண்முகம், மதனின் கூட்டாளி சுதீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் சீட் கொடுப்பதாக கூறி ரூ.72 கோடி வரை மோசடி புகார்கள் உள்ளது. அதன்அடிப்படையிலேயே பச்சமுத்துவை நம்பிக்கை மோசடி (406), மோசடி (420), 34 ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளோம்" என்றார்.

ad

ad