20 செப்., 2016

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பிள்ளைகள் பலி; சோகத்தில் தாய் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்
அறிந்த பெற்றோர், துக்கம் தாங்காமல் வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று திங்கள்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சண்முகம் (வயது 54) மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி சண்முகம் (வயது 45) ஆகியோரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பாசிக்குடா கடற்கரைக்கு சென்ற ஜந்து இளைஞர்களில் ஒருவரைத் தவிர மற்றைய நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது, நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை அறிந்த கரையில் நின்ற நண்பன் கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அப்பகுதி மீனவர்கள் இரண்டு இளைஞர்களை காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவர்கள் ஏ.ரஜிதன் (வயது 16), கே.டிலக்சுமனன் (வயது 16) ஆகும். இதேவேளை, மற்றைய இருவரும் காணாமற்போன நிலையில் அவர்களை தேடும் பணியினை கல்குடா கடற்படையினர் மற்றும் பிரதேசத்தின் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் சதீஸ்குமார் (வயது 20) மற்றும் அவரது சகோதரர் சண்முகம் சுரேஸ் (வயது 17) ஆகியோரே இவ்வாறு காணமற்போனவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது ச.சதீஸ்குமார் என அடையாளம் கண்டுள்ளதாகவும், குறிப்பிட்ட பொலிஸார், மற்றைய ச.சுரேஸ் என்பவரது சடலத்தினை மீட்பதற்கான பணிகள் தொடர்வதாகவும் கூறியுள்ளனர். இச் சம்பவமானது கல்குடா பிரதேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.