23 பிப்., 2017

புலிகளுக்கு எதிராக ஐ.நாவிடம் அறிக்கை : சரத் வீரசேகர

இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்ற செயற்பாடுகளுக்கு சர்வதேச விசாரணையை கோரி வருகின்ற நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்ற செயற்பாடுகள் தொடர்பாக ஜெனீவா சென்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஆட்சியாளர்களின் தீவிர விசுவாசியுமான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜெனீவா அமர்வில் படைவீரர்களின் சார்பில் எவரும் முன்னிலையாவதில்லையென தெரிவித்துள்ள சரத் வீரசேகர, இம்முறை இடம்பெறவுள்ள அமர்வில் பங்கேற்று படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினர் யுத்தக் குற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஐ.நா.வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, நாட்டை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் ராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அளவில் இலங்கை மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை திசை திருப்பும் முயற்சியாக புலிகளுக்கு எதிரான அறிக்கை அமையுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.