23 பிப்., 2017

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு: தீக்குளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் உயிரிழப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் உயிரிழந்தார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை நீக்கி, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம் என்று ஓ.பி.எஸ் தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த நகர மேலவை அதிமுக உறுப்பினர் ஆறுமுகம்(60), எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 18ஆம் தேதி, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் பழனிச்சாமி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இருப்பினும் மக்களிடம் சென்று உண்மை நிலவரத்தை விளக்கி, ஆதரவு திரட்டி மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.