23 பிப்., 2017

தினகரனுக்கு தகுதியில்லை; சசிகலா குடும்பத்தினரின் தலைமையை ஏற்கமாட்டேன் : தீபக் அதிரடி


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது துணை பொதுச்செயலாளராக அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்.

அதன்படி இன்று  அதிமுக தலைமைக்கழகத்தில் தினகரன் துணை பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், ‘’ தினகரனுக்கு தலைமை பொறுப்பு வகிக்க தகுதியில்லை. தினகரன் பொறுப்பேற்கும்போது கட்சியில் மூத்த தலைவர்கள் இல்லை.  தினகரன் தலைமையை ஏற்க மாட்டேன்.  அவரது தலைமையை அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள்.

அதிமுக  உடையாமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அதிமுகவுக்கு தலைமை ஏற்க பன்னீர்செல்வத்திற்கு தகுதி உண்டு.  பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும். ஓபிஎஸ் தலைமை ஏற்க தினகரன் ஒத்துக்கொள்வார்.  சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டதுதான் வருத்தம்.  

சகோதரி தீபாவிடம் எந்தவிதமாக கருத்து வேறுபாடும் கிடையாது.  அதே சமயம்  தீபாவின் அரசியல் ஆர்வத்திற்கு நான் ஆதரவு கிடையாது. 

சசிகலா என் அம்மா மாதிரி.  அவர்களுடன் தான் என்றைக்கும் இருப்பேன்.  ஆனால், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களின் தலைமையை ஏற்கமாட்டேன்’’என்று தெரிவிதுள்ளார்.