9 நவ., 2018

கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகளை உடைத்து பெரும்பான்மை பெறுவோம்! - எஸ்.பி. திசநாயக்கவின் ஆணப் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்களின் பக்கம் கொண்டு
வரலாம் என்று அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித் தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
“பெரும்பான்மை உறுப்பினர்களுடனே எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் செல்வோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கோ அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கோ செல்லமாட்டோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தற்போது நாங்கள் கொண்டிருக்கின்றோம்.
அதனை எதிர்வரும் 14 ஆம் திகதி நிரூபிப்போம். எங்களில் தற்போது 105 பேர் இருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சிக்கு 97 பேர் மாத்திரமே இருக்கின்றனர். நாங்கள் தான் பெரும்பான்மையாக இருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருக்கின்றது. அதனால் அவர்களில் சிலரை எங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளலாம். அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீனின் கட்சி எங்களுடன் கலந்துரையாடி வருகின்றது.
அவர்களின் கட்சியில் இருந்து உறுப்பினர்களை தனித்தனியாகப் பிரித்து எடுக்கலாம். என்றாலும் கட்சிகளைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. அவர்கள் கூட்டாகத் தீர்மானம் எடுக்க இருப்பதால் நாங்கள் அவர்களில் கைவைக்கவில்லை. தேவை ஏற்படின் அவர்களிலும் கைவைப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.