புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 நவ., 2018

பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமா? முடியாதா? - சட்ட விளக்கம் இதோ

இன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? முடியாதா? என்பது தெடர்பாக பலரும் பல்வேறு கருத்தாடல்களை வழங்கி வருகின்றனர்.


இவ்விடயம் தொடர்பாக அரசியல் விமர்சகரும் சட்ட முதுமானியுமான வை. எல்.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை
19 ஆவது திருத்தத்திற்குமுன் பொதுத்தேர்தல் நடைபெற்று முதல் ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதன்பின் வேண்டியநேரம் கலைக்கலாம். இந்த அடிப்படையில்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க அவரது ஆட்சியில் இரு தடவைகள் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
19 ஆவது திருத்தத்தின் பின் முதல் 4 1/2 வருடங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2/3 பெரும்பான்மையால் பாராளுமன்றில் பிரேரணை நிறைவேற்றுவதன் மூலம் கோரிக்கை விடுத்தாலேயொழிய கலைக்க முடியாது.
இதன் சட்டத்தன்மையும் வாதப்பிரதிவாதங்களும்
அரசியலமைப்பின் சரத்து 33 ஜனாதிபதியின் கடமை, அதிகாரம் மற்றும் தொழிற்பாடு தொடர்பாக குறிப்பிடுகின்றது. இதில் சரத்து 33(2)(c) ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, ஒத்திவைப்பதற்கு, கலைப்பதற்கு அதிகாரம் இருக்கின்றது; என்று கூறுகின்றது.
சரத்து 70 (1) “ ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டலாம், ஒத்திவைக்கலாம், கலைக்கலாம். என்று கூறிவிட்டு அதற்கு ஒரு கட்டுப்பாட்டை விதிக்கிறது. அதுதான் முதல் 4 1/2 வருடங்களுக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடாது என்பதாகும்.
இங்கு புரிந்துகொள்ள வேண்டியது 33(2)(c) ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற அதிகாரம் இருக்கின்றதுஎன்பதை அடையாளப்படுத்துகின்றது. 
70(1) ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கலாம்; ஆனால் முதல் 41/2 வருடங்களுக்கு இந்த அதிகாரத்தைப் பாவிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துகிறது.
அதாவது உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது; ஆனால் முதல் 4 1/2 வருடம் பாவிக்க முடியாது; என்று கட்டுப்பாடு இடுகின்றது. இங்கு பாவிக்கப்படுகின்ற சொல் “ shall not “ அதாவது கலைக்கவே கூடாது. என்பதாகும்.
இந்தக் கட்டுப்பாட்டை மீறி எவ்வாறு ஜனாதிபதி கலைக்க முடியும்? ஆனால் இந்தக்கட்டுப்பாட்டிற்கு ஒரு விதிவிலக்கு உண்டு:  அதுதான் 2/3 பெரும்பான்மையால் வேண்டுகோள் விடுத்தால் அந்தக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது; என்பதாகும்.
அதிகாரத்தை அடையாளப்படுத்துகின்ற 33(2)(c) அதனைக்கட்டுப்படுத்துகின்ற 70(1)ஐ எவ்வாறு மேவமுடியும். எனவே, மேவமுடியும் என்பது  பிழையான வாதம்.
பிழையான ஆலோசனைகளைக் கேட்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் என்ன செய்வது?
நீதிமன்றம் செல்லமுடியுமா?
19வது திருத்தத்திற்குமுன் ஜனாதிபதிக்கெதிராக நீதிமன்றம் செல்லமுடியாது. ஆனால் ஜனாதிபதியின்கீழ் வருகின்ற அமைச்சுகளைப் பொறுத்தவரை அவர் அவற்றிற்கான அமைச்சர் என்றவகையில் பிழைகள் நடக்கும்போது அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லமுடியும். ஆனால் ஜனாதிபதிக்குப் பதிலாக சட்டமா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிடவேண்டும். 
19 இற்குப் பின் ஜனாதிபதிக்கெதிராக, நேரடியாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடுக்க முடியாது. அதைத்தவிர ஜனாதிபதிக்கெதிராக அடிப்படை உரிமைமீறல் மனு கொண்டுவரலாம். அதில் பிரதிவாதியாக சட்டமாஅதிபர் குறிப்பிடப்படுவார். எனவே, தாராளமாக வழக்குத் தாக்கல் செய்யமுடியும்.
முன்னாள் பிரதம நீதியரசரின் வாதம்
2002 ம் ஆண்டு கொண்டுவர முயற்சிக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அதனை பாராளுமன்றத்தின் வேண்டுகோளின்பேரில் செய்வதற்கான ஒரு திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சித்தபோது மக்கள் நிறைவேற்றுத்துறைக்கு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு வழங்கிய அதிகாரத்தை மக்களின் அனுமதியின்றி பாராளுமன்றத்திற்கு வழங்கமுடியாது; என்ற நீதிமன்றத் தீர்ப்பின்படி இப்பொழுது பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை 41/2 வருடங்களுக்கு கட்டுப்படுத்தி அதனை பாராளுமன்றத்தின் 2/3 பங்கின் அனுமதியுடன் செய்வது நிறைவேற்றதிகாரத்தை சட்டவாக்கத்துறைக்கு மாற்றுவதாகும்.
அது சர்வஜன வாக்கெடுப்பின்றி செல்லுபடியாகாது. எனவே, ஜனாதிபதியின் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இன்னும் ஜனாதிபதிக்கு இருக்கின்றது என்பதாகும். ஆனால் இலங்கையில் ஒரு சட்டத்தை ஆக்கியதன்பின் அதனை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தமுடியாது. எனவே, திரு சரத் என் செல்வாவின் வாதம் எவ்வளவு வலுவானதாக இருந்தாலும் இப்பொழுது சட்டம் கலைக்க முடியாது; என்று கூறும்போது கலைக்க முடியும் என்று வாதிடமுடியாது. 
எனவே, பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது.